ராமாயணத்தில் அனுமன் ராமனுக்கு தூதனாக மட்டுமல்லாமல், சிவனின் அம்சமாகவும் தோன்றினார். ராமாயண கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர்.
மகாவிஷ்ணு ராமனாக, மகாலட்சுமி சீதாதேவியாக, ஆதிசேஷன் லட்சுமணனாக அவதரித்தனர். அதேபோல் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து சேவை செய்தார்.
எனவே ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆஞ்சநேயருக்கு விரதம் கடைபிடிப்பது எப்படி?
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
விரதம் இருக்கும் நாளில் ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும்.
உணவில் உப்பு, காரம், எண்ணெய் சேர்க்காமல் உணவு உண்ண வேண்டும்.
பகல் முழுவதும் வீட்டில் இருந்து ராம நாமம், ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம மந்திரம், அனுமன் கவசம், அனுமன் சாலீசா போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.
மாலை நேரத்தில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
விரதம் முடிந்ததும் மறுநாள் காலை நீராடி, பூஜை செய்து, நைவேத்தியம் படைத்து விரதத்தை முடிக்க வேண்டும்.
வீட்டில் ஆஞ்சநேயர் பூஜை:
ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும்.
துளசி இலைகள், தீர்த்தம், சுவாமிக்கு பிடித்தமான நிவேதனப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.
பூஜை செய்பவர்கள் உடல், உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும்.
பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மணம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்ற உதவும்.
வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.
சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைபட்ட திருமணம் உட்பட அனைத்து சுபகாரியமும் நிறைவேறும்.
ஆஞ்சநேயர் வழிபாடு :
ராமநாத வழிபாடு: ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாத வழிபாடு ஆகும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும்.
வெண்ணெய் காப்பு: அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டால் சாற்றிய வெண்ணெய் உருகுவதற்குள் கஷ்டங்கள் நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
துளசி மற்றும் வெற்றிலை மாலை: துளசி மாலையும், வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை.
வெற்றிலை மாலை: சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலையை சாற்றி அனுமன் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கும், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.
துளசி மாலை: துளசி மாலை சாற்றி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
திராட்சைப்பழம்: அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள் ஆகும். வெற்றி கிடைத்திட இவருக்கு திராட்சைப்பழம் படைத்து வழிபட வேண்டும்.
செந்தூரம் மற்றும் காகித மாலை: செந்தூரம் பூசி, வடை மாலையோடு ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவிக்க அனுமனின் அருளைப் பெறலாம்.
எலுமிச்சை மற்றும் வடை மாலை: தொடங்கிய வேலைகளில் தடை நீங்க, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.
ஆஞ்சநேயர் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்:
தைரியம், வலிமை, ஞானம், புகழ், செல்வம் போன்றவை பெருகும்.
தீய சக்திகளின் தொல்லைகள் நீங்கும்.
நோய்கள் குணமாகும்.
எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
நினைத்த காரியம் நிறைவேறும்.