Breaking News :

Thursday, November 21
.

அறப்பளீசுவரர் கோயில், கொல்லிமலை


அருள்மிகு அறப்பளீசுவரர் கோயில், கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம்.

மூலவர்   –   அறப்பளீசுவரர்
உற்சவர்   –   தாயம்மை
புராணப்பெயர்   –   கொல்லி அறப்பள்ளி, வளப்பூர்நாடு, கொல்லி குளிரறைப்பள்ளி
ஊர்   –   கொல்லிமலை
மாவட்டம்   –   நாமக்கல்
மாநிலம்   –   தமிழ்நாடு
வழிபட்டோர்   –   காலாங்கி முனிவர், பதினெண் சித்தர்கள்
பாடியவர்கள்   –   அப்பர், சம்பந்தர்
வைப்புத்தலப் பாடல்கள்:

சம்பந்தர் – அறப்பள்ளி அகத்தியான் (2-39-4).
அப்பர் – 1. கொல்லி யான்குளிர் (5-34-1)
இன்று மக்கள் வழக்கில் “கொல்லிமலை” என்று வழங்குகிறது. இயற்கை வளம் மிக்க மலை. ‘வல்வில்ஓரி‘ என்னும் மன்னன் ஆண்ட பகுதி. காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.

அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி “அறப்பளீஸ்வரர்” என்றாயிற்று.

இக்கோயிலுக்குப் பக்கத்தில் “மீன்பள்ளி” ஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.

இக்கோயிலுக்கு மேற்கில் “கொல்லிப்பாவை” என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று உள்ளது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.

இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி:-

இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு சிரித்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு. இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது “கொல்லிமலை” எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் “எட்டுக்கை அம்மன்” என்று கூறுகின்றனர்.

கொல்லி எனப்படும் வானளாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை “கொல்லிமலை” எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.

இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். பலா, அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, எழுமிச்சை மரங்கள் அடர்ந்து, பசுமையாகக் காட்சியளிக்கும் இம்மலைமீது ‘அறப்பளீசுவரர்‘ ஆலயம் உள்ளது.

இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன; இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் ‘சதுரகிரி‘ என்ற பெயருமுண்டு. ஊர் – பெரிய கோயிலூர் என்றும்; கோயிற் பகுதி – அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்குகிறது.

அம்பாள் சந்நிதி – நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேலே பார்த்துத் தரிசிக்க வேண்டும். கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக – 760 படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 600 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.

செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) ‘வல்வில் ஓரி‘ மன்னனின் சிலை குதிரை மீது 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ‘வல்வில் ஓரி விழா‘ நடத்தப்படுகிறது. தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும், வனத்துறையினரின் மூலிகைப் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன.

மலை வாழ் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார்.

கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் “அறப்பளீசுர சதகம்” என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே‘ என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.

இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.

வழிகாட்டி:

நாமக்கல்லிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்குத்தான மலைப்பாதை – 72 கொண்டை ஊசி வளைவுகளைக் (hair pin bend) கொண்டது. நாமக்கல்லிலிருந்து கொல்லி மலைக்கு 43 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்து (MINI-BUS) செல்கிறது. அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் உள. இம்மலைப் பாதை, மழைக்காலத்திற்கு ஏற்றதன்று.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.