தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காசிக்கு இணையான ஒரு சிவன் கோயில் (தட்சிண காசி).
அவிநாசி அவிநாசியப்பர் கோயில் (திருப்புக்கொளியூர்) என்பது பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முதலையுண்ட பாலகனை, சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது தொன்நம்பிக்கை.
அவினாசியப்பருக்கு வலது புறம் அம்பாளின் கோயில் உள்ளது, பொதுவாக மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைகளுக்காகப் பெயர் பெற்றது.
நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் அவிநாசிக்கு வந்த போது ஒரே தெருவின் எதிர் எதிர் வீடுகளில் ஒன்றில் பூணூல் கல்யாணமும், மற்றொன்றில் மகனை முதலை சென்றமைக்காக வருத்தமுடனும் இருந்தார்கள். அவனுக்கும் தற்போது பூணூல் கல்யாணம் நடக்கும் சிறுவனுக்கும் ஒத்த வயதே ஆகிறது. அதனை அறிந்த சுந்தரர். இச்சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை பிராத்தனை செய்தார். அதனால் மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய சிறுவன் வளர்ந்த நிலையில் பெற்றோர்களுக்கு கிடைத்தான். இந்த தொன்மம் இத்தலத்தில் நடந்தமையால் சிறப்பு பெற்று இருக்கிறது.
இந்த நிகழ்வினை முதலை வாய்ப் பிள்ளை உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இவ்விழா பங்குனி உத்தரத்தின் மூன்றாவது நாளன்று இக்கோயிலில் நடைபெறுகிறது.
இத்தலத்தில் உள்ள இறைவனை பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் எனும் வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தின் மூலவர் அவிநாசியப்பர். இவர் சுயம்பு லிங்கமாவார். அம்பிகை கருணாம்பிகையின் சந்நிதி மூலவரின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் உள்ளது. இத்தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இதனால் விஷ ஜந்துக்களின் தொல்லைகள் வராது என்பது நம்பிக்கை. விஷ ஜந்துக்கள் கனவிலோ, நேரிலோ வந்து பயம் கொள்ள வைக்காது.
ராஜ கோபுரத்தின் நுழைவாயிலின் இருபுறமும் நர்த்தன கணபதி சிலைகள் உள்ளன. மண்டபத் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்த தாண்டவர் மற்றும் தில்லை காளியின் சிலைகள் உள்ளன. உள்பிரகாரத்தில் கன்னி கணபதியும், வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வட கிழக்கில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் உள்ளன.இவற்றோடு 63 நாயன்மார் சிற்பம், காலபைரவர் சன்னதி ஆகியவையும் உள்ளன. காலபைரவர் சன்னதியில் அதிக மக்கள் வழிபடுகின்றனர்.
நடராசர் மண்டபத்தில் ஐம்பொன்லால் ஆன நடராசர் உள்ளார். பஞ்ச தாண்டவ தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.
இத்தலத்தின் தலவிருட்சமான பாதிரிமரம், இத்தலத்தின் பிரம்மோற்ச காலங்களில் மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில பூக்காது இருப்பது அதிசயமாகும்.