குளித்தலை அருகே இருக்கும் இரண்டாம் ஆலயம் அய்யர்மலை ஆலயம். அங்கே வீற்றிருப்பவர் ரத்னகிரீஸ்வரர், இந்த ஆலய பெருமையும் சிறப்பும் சொல்லில் அடங்காதது. "இரத்தினாசலம் " என கொண்டாடப்படும் ஆலயம் இது.
இதுவும் யுகங்களை தாண்டிய கோவில், இதன் பெருமை கந்தபுராணத்தில் சூத முனிவரால் சொல்லப்பட்டிருக்கின்றது, திருவண்ணாமலை போல மிக மிக பழைமையான மலையின் நுனியாக இத்தலம் அமைந்துள்ளது, சூத முனிவர் இதன் பெருமையினை புகழ்ந்து சொல்லியிருக்கின்றார்.
ஆதிஷேஷனுக்கும், வாயுபகவானுக்கான போர் காட்சியினை அவர் சொல்லும் போது இந்த அய்யர்மலையின் ரத்னகீரீஸ்வரர் பெருமையினை பக்கம் பக்கமாக சொல்கின்றார். இந்திரன் இங்கேதான் அகலிகையினால் பெற்ற சாபம் தீர தவமிருந்தான், அவனே குரு பகவான் ஆலோசனைப்படி இரத்தினாசலம் எனும் இம்மலையை வழிப்பட்டான்.
இந்திரன் வழிபட்டது. அகலிகையை விரும்பிய பாவம் தீர, வியாழ பகவானின் அறிவுரைப்படி, இந்திரன் வேப்ப மர பிரதிஷ்டை செய்தான்.
அவனே தன் வலிமையான வஜ்ஜிராயுதத்தால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கினான், அவன் சிவனை தொழுது அம்பிகையுடன் சிவன் வந்து அவன் பாவத்தை மன்னித்து மீண்டும் தேவலோகத்தை அவனுக்கு கொடுத்தார்.
ஆம். சாபம் தீர்க்கும் ஆலயம் அது. இந்திரனின் சாபம் அங்கேதான் தீர்ந்தது; புராணம் அதைத்தான் சொல்கின்றது. இரத்தினகிரீஸ்வரரைத் தரிசித்த அளவில் எல்லாப் பாவங்களும் விலகும், ஒரு துளி மீதமில்லாமல் எல்லாமே விலகும்.
இம்மலை ரத்தகிரீஸ்வரர் மலை. ஒரு முறை மன்னன் ஒருவன் அபூர்வ ரத்தினம் வேண்டி தவமிருந்தான். சிவன் ஒரு தொட்டி ஒன்றை கட்டி அதை காவேரி நீரால் நிரப்ப சொல்லி உத்தரவிட்டார்; அவன் தன் தவம் பலிக்க அப்படி நீரால் நிரப்ப முயன்றான். ஆனால், தொட்டி நிரம்பவே இல்லை.
ஒரு கட்டத்தில் ஆத்திரமுற்ற ம்ன்னன் தன் வாளால் சிவலிங்கத்தை வெட்டினான். அப்போது அவன் முன் அந்த மாணிக்கம் வந்து விழுந்தது. மிகுந்த வருத்தமடைந்த மன்னன் தன் செயலால் மிகவும் வருந்தினான்.
அந்த மன்னனால் ஏற்பட்ட தழும்பு இப்போதும் சிவலிங்கத்தில் உண்டு. அதனால், அந்த சிவனுக்கு முடித்தழும்பர் என்றும் பெயர் உண்டாயிற்று.
ஆசை அடங்காதது எனும் தத்துவத்தை அந்த தண்ணீர் தொட்டியில் காட்டிய சிவன், அவன் மாய ஆசைகளை மயக்கத்தை தானே ஏற்று அவன் கர்மத்தை ஏற்று அவனுக்கு மாணிக்கம் அருளினார் என்பது இந்த காட்சியின் தத்துவம்.
இந்த மலை இன்னும் பல சுவாரஸ்யங்களை கொண்டது. சித்தர்கள் பலர் உலாவும் மலை அது. அப்படி ஒருமுறை சிவன் அபிஷேகத்துக்கு வந்த பாலை காகம் ஒன்று கவிழ்த்துவிட சித்தரின் கண்பார்வை அதை எரித்தது, நாகைக் காரோணப் புராணம் அதை சொல்கின்றது. அதிலிருந்து அங்கு காகங்கள் பறப்பதில்லை, இன்றுவரை பறப்பதில்லை. இன்னும் சூத முனிவர் சொல்கின்றார் .
"இங்கு தேவ தீர்த்தத்தில் நீராடி தக்ஷிணாயணம், உத்தராயணம் , விஷு, சூரிய-சந்திர கிரகணம், அமாவாசை, சோமவாரம், ஜன்ம நக்ஷத்திரம், ஸ்ராத்த தினம் ஆகிய புண்ணிய காலங்களில் தேவ தீர்த்தத்தில் நீராடி விட்டு, வேம்புக்கு அபிஷேகம் செய்து,சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு, அந்தணர்களுக்குத் தானம் செய்தால் கயா ஸ்ராத்த பலனைப் பெறலாம்.
வேம்பினடியில் கன்னிகா தானம் செய்தால் சிவலோகம் கிடைக்கும். இரத்தினாசலத்தைச் சுற்றி உள்ள ஐந்து குரோச இடத்திற்குள் அந்தணர்க்கு வீடும் விளைநிலங்களும் தானம் செய்யும் அரசன் சிவரூபம் பெறுவான். ஒரு மாத காலம் இங்குத் தங்கி, தேவ தீர்த்தத்தில் நீராடி, வேம்பைப் பூஜித்தால், குஷ்டம், வாதம் குன்மம் போன்ற கொடு நோய்கள் விலகி விடும்.
தானே உதிர்ந்த வேம்பின் இலைகளைப் புசித்தால் குருடர்கள் கண் பெறுவர். செவிடர்கள் கேட்கும் திறனையும், ஊமைகள் பேசும் வன்மையையும் பேச்சு திக்குபவர்களுக்குப் பேச்சும், நல்ல கல்வியும் அங்கக் குறைவு உள்ளவர்களுக்கு அழகிய சரீரமும் பிள்ளை இல்லாதோருக்குப் புத்திர பாக்கியமும் வாய்க்கும். வேம்பின் பெருமையை சிவசன்னதியில் படிப்போர் முக்தி வரம் பெறுவர்."
ஆம். இது தீராத நோய்களையும் தீர்க்கும் பேராலயம்.
முன்பு பூமியினை தாங்கும் ஆதிஷேஷன் பலமானவனா, வாயுபகவான் பலமானவனா எனும் பெரும் சண்டை வந்து இருவரும் மோதிக் கொண்டார்கள். வாயு பகவான் தன் பலத்தை காட்ட மேரு மலைச் சிகரங்களைப் பிடுங்கி வீச முயன்று கயிலாயம் பக்கம் வந்தபோது சிவனால் சாபம் பெற்றான்.
அந்தச் சாபம் நீங்குவதற்காக இரத்தின கிரியை அடைந்து, தன் பெயரினால் ஒரு தீர்த்தம் அமைத்து, நாள் தோறும், மல்லிகை, ஜாதி, மகிழ்,குருந்தம், குவளை, ஆகிய புஷ்பங்களாலும், சண்பகம்,வில்வம் ஆகியவற்றாலும் இரத்தினகிரீசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வந்தான்.
சிவன் அவனுக்கு காட்சியளித்து ஒவ்வொரு சரீரத்திலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன்,கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்ற பத்துப் பெயர்களோடு இருக்குமாறு அருள் பாலித்தார்.
ஐப்பசிப் பவுர்ணமியில் வாயு தீர்த்தத்தில் நீராடுவோர் பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று நற்கதி பெறுவர். எனவும் வரமளித்தருளினார்.
அப்படியே ஆதிஷேஷனும் பெரும் ஆட்டம் ஆடி சாபம் பெற்றான். அவன் தன் சாபம் நீங்க மேற்குக் கடலோரம் உள்ள கோகரணம், சங்குகரணம், பிரபாசம், அனந்த சயிலம், சோமேசுவரம் , கபிலேசுவரம், சார்ந்த சகிய மலை, ஸ்ரீ கண்டம், வில்வாரண்யம், தர்மேசுவரம்,
வியாசாசிரமம்,சுசீந்திரம், அவினாசி,பவானி கூடல், வராகி கூடல், சுவேதாசலம், கருவூர், வாலீசுவரம், அகஸ்தீசுவரம், திருவையாறு, அறப்பளீசுவரம், அனலேசுவரம், ஈங்கோய் மலை, கதம்ப வனம், சங்கராசலம் ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் இரத்தினகிரியை அடைந்தான்.
அங்கே வியாசர், அத்திரி, பரத்துவாஜர், ஜமதக்கினி, காத்தியாயனர், அதிசிருங்கர், மயூரமுகர், ஆகிய முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். வணங்கி, குங்கிலிய மரம் ஸ்தாபித்து அதனருகில் தன் பெயரால் ஒரு தடாகத்தையும் ஏற்படுத்தினான். அவன் சாபமும் அங்கேதான் தீர்ந்தது.
முன்பு மந்தேகம் என்ற தீவில் இருந்த தவ வலிமை பெற்ற அரக்கர்கள், உதயத்தில் சூரியனோடு போர் புரியும்போது சூரியனால் அவர்களை வெல்ல இயலவில்லை.
சூரியன் தன் குருவினை நாடினான் அவர் தேவர்,கருடர், காந்தருவர்,கின்னரர்,கிம்புருஷர், முனிவர்கள் ஆகியோர் வழிபடும் இரத்தினாசலத்திற்குச் சென்று வழிபட வேண்டி சொன்னார். சூரியன் அசனி என்பவனை அங்கு அனுப்பித் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினான்.
ஆம். சூரியனும் சாபம் நீங்கிய தலம் இது.
ஒருமுறை அகத்திய மகரிஷி காஷ்மீரம், பிரபாசம், வில்வாரண்யம், கேதாரம், காசி, பிரயாகை, அவந்தி, கோமதி ஆகிய தலங்களைத் தரிசித்தபடி விந்திய மலை பக்கம் வந்தார். அங்கே ஒரு சடலம் கேட்பாரற்று கிடந்தது. அதனை தன் தலையில் சுமந்தவர் இந்த ரத்னகிரியினை அடைந்து அதன் மேல் புனிதநீர் தெளித்தபோது அச்சடலம் உயிர்பெற்று எழும்பிற்று. பின், அதற்கு நற்கதி கொடுத்தார் அகத்தியர். விமானம் வந்து அந்த அந்தணனை கயிலாயம் ஏற்றிச் சென்றது.
அகத்தியர் இங்கு நெடுங்காலம் பூஜை செய்தார். தன் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்து பூஜை செய்தார். அந்த பக்திக்கு இறங்கி ஈசனே வந்தார் .
அவரைக் கண்டு ஆனந்தமடைந்த அகத்திய பெருமான், " கருணைக் கடலே, சர்வலோக நாயகா, உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம். " என்று துதித்தார். அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் சுவாமி அவருக்குக் காட்சி அளிததார்.
அப்போது அந்த மலையே ரத்தினம் போல் ஜொலித்தது, அதிலிருந்த்து இம்மலையின் பெயர் இன்னும் உறுதியாயிற்று.
அகத்தியருக்கு வேத மந்திர ரகசியங்களை சிவன் உரைத்ததும் இங்குதான். வீரசேனன் எனும் சூரிய உலகத்து மன்னன் கபாலிகன் எனும் தீயவனோடு சேர்ந்து அதர்ம ஆட்சி நடத்தியதில் தேசம் நாசமாயிற்று. மழை பொய்த்து வறுமையும் சாபமும் வந்தது.
அந்த வீரசேனனும் மிகவும் மனம் நொந்து செத்தான். பின் நரகில் அவன் படாதபாடுபட்டபோது அவனின் கர்மவினைக்காக வெளியே தள்ளப்பட்டான். ஒரு பிசாசாய் அலைந்தான். அகத்தியரின் சீடர் உரொமரிஷி அப்பக்கம் வரும்போது அவரை கொன்றுதின்ன முயன்றான். ஆனால், முனிவரின் தவவலிமையில் அவரிடம் பணிந்தான்.
முனிவர் அவனுக்கு அருளி அவன் சாபம் தீர ரத்னகிரிக்கு வரச் சொன்னார். அங்கே அவனின் சாபமெல்லாம் தீர்ந்தது.
இங்கேதான் பரத்வாஜமுனிவரும், வராக வடிவம் எடுத்த விஷ்ணுவும் வழிபாடுகளை செய்தார்கள்.
இன்னும் இங்கு சிறப்பு நிறைய உண்டு. இம்மலையின் வடப்புறம் துர்க்கா தேவி உண்டாக்கிய கன்யா தீர்த்தம் உள்ளது. அங்கு அவள், மகிஷனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றாள். சிவபெருமான் அருளிய வாளால் மகிஷனது உயிரைத் துர்க்கா தேவி போக்கியதால் "வாட் போக்கி" எனப் பெயர் வந்தது.
துர்க்கைக்கு தோஷம் நீங்கியதால் இரு பாறைப் பிளவுகளும், அருகில் வாள் போன்ற பாறையும், சப்த கன்னிகைகளும் இருப்பதை மலையில் பார்க்கலாம். கன்னியர் எழுவர் பலத்த மழைக்கு ஒதுங்க இடமின்றித் தவித்தபோது இறைவன் இங்கு பாறை இடையே குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தித் தஞ்சம் அளித்தார். அதன் சாட்சி இன்றும் உண்டு.
காஞ்சியைச் சேர்ந்த இடையன் ஒருவர் தன் தங்கைக்கு மகப்பேறு வேண்டி இத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை நிறைவேறியவுடன் தன் தலையைக் காணிக்கையாக்கினார். சிவன் அதை தடுத்து அவரை ஆட்கொண்டு வாழவைத்தார்.
அந்தத் தியாகத்தின் அடிப்படையில் அவரது வைராக்கியம் காரணமாக அவரை வைரப் பெருமாள் என அழைத்தனர். அவருக்கான சன்னதி அங்கு உண்டு.
இங்குதான் நால்வரில் ஒருவரான சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் ஜோதிர் லிங்கமாகவும், மலை முழுவதும் மாணிக்க மயமாகவும் காட்சி அளித்து, ஒரு பாறையின் மீது பொன்னை அளித்தார் சிவன்.
அப்பாறை, " பொன்னிடும் பாறை " எனப்படுகிறது. முன்பொரு நாள் கடலுள் மாய்ந்த பூம்புகாரில் பதினோரு செட்டிமார்கள் இங்கு வந்து பொன்னிடும் பாறையருகே அமர்ந்து அதனைப் பிரிக்க முற்பட்டபோது அது பன்னிரண்டு பங்காகப் பிரியக் கண்டு அதிசயித்து அப்பன்னிரண்டாவது பங்கை இறைவனுக்கே அளித்தனர். எனவே பன்னிரெண்டாம் செட்டியார் எனவும் சிவனுக்கு பெயர்.
ஆம். இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் ஏராளம்; சாட்சிகளாய் அவற்றை காணலாம். அய்யர் மலை ஊரில் இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக் கோவிலும், அதன் பிராகாரங்களும் பிரணவ வடிவில் அமைந்திருப்பதால், இத்தலத்துக்கு சிவாயமலை என்ற பெயரும் உண்டு.
அகலிகை சாபம் தீர இந்திரன் வைத்த வேப்பமரமே தலவிருட்சம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே இடி பூஜை நடைபெறுகிறது. ஆயினும் ஆலயத்துக்கோ, அதிலுள்ள சிலா மூர்த்தங்களுக்கோ எந்தவொரு பாதகமும் ஏற்படுவதில்லை.
அதாவது 12 ஆண்டுக்கு ஒருமுறை அவ்வாலயம் கும்பாபிஷேகம் முடிந்ததும் இடியால் தாக்கப்படும் அல்லது அச்சுறுத்தப்படும். ஆனால், ஒரு பாதகமும் நிகழாது, அது வானத்தின் ஆசீர்வாதமாகவே கருதப்படும்.
இந்திரன் அங்கு எப்போதும் அருள்பாலிக்கின்றான் எனும் சாட்சி அது, இடி என்பது இந்திரனின் ஆயுதம். ஆதிஷேஷன் வழிபட்ட இடம் என்பதால் இங்கு பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. மணிமுடி இழந்து வாயுபகவான் வழிபட்டு சாபம் தீர்த்த இடம் என்பதால் உடலில் வாயுவினால் ஏற்படும் எல்லா நோய்களும் நொடியில் தீரும்.
இங்குள்ள முருகப்பெருமான் சிறப்பானவர் அவரை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். இந்த ரத்னகிரீஸ்வரருக்கு திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஓங்காது நாள் போக்கி நிற்கும் நவை உடையார் நாட அரிது ஆம் வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே” என்று போற்றி உள்ளார்.
சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும்.
மிக பெரிய சிறப்பை பெற்ற இந்த ஆலயம் கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய ஆலயம், கந்த புராணத்தில் சூத முனிவர் சொன்னபடி கார்த்திகை சோமவாரம் இங்கு பெரிய பலனை தரும்.
இங்கு வழிபட்டால் சாபம் தீரும்; ஜென்ம வினை தீரும்; இந்திரன் முதல் வாயு பகவான், ஆதிசேஷன் என எல்லாரின் சாபமும் அப்படியே தீர்ந்தது.
இன்னும் அகத்தியர் அந்த அந்தணன் சாபம் தீர்த்தார். வீரசேனன் சாபம் தீர்ந்தது.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் அறிந்தும் அறியாமலும் ஒரு சாபம் உண்டு. அந்த சாபமேதான் இந்த வாழ்வில் முக்கிய காரணமாகவும் கர்மத்தை சரியாக அறியவிடாமலும் மாயையில் தள்ளி குழப்பி வைத்திருக்கும்.
இந்த ரத்னகிரீஸ்வரர் ஆலயம் அந்த மாயையினை போக்கும். 'திருவாள்போக்கி' என அந்த சிவனுக்கு ஒரு பெயர் உண்டு.
வாள் என்றால் ஆயுதம் மட்டுமல்ல, ஒளிக்கு வாள் என்பது இன்னொரு பெயர். இந்த சிவன் கர்ம சாபமெல்லாம் அழித்து ஞான ஒளி தருவார், அந்த இரத்னகிரீஸ்வரர் தாத்பரியம் அதுதான்.
கார்த்திகை சோமவாரத்தில் காலை குளித்தலை கடம்பனேஸ்வரரை தரிசித்துவிட்டு, மதியம் இந்த அய்யர்மலையினை தரித்துவிட்டு மாலை திருஈங்கோய் சிவனை வழிபடுதல் வேண்டும், அந்த திருஈங்கோய் சிவனை அடுத்து காணலாம்.