Breaking News :

Friday, March 14
.

சென்னைக்கு அருகிலேயே வட ஸ்ரீ ரங்கப் பெருமாள் கோயில்?


திருவள்ளூர் ஜில்லா, பொன்னேரி தாலுக்காவில், தேவதானம் என்று ஒரு அருமையான கிராமம்.   இது  வட ஸ்ரீரங்கம் என பெயர் பெற்றது.  அங்கு எங்கும் பச்சை பசேல் என்று வயல்கள் இருந்தது முதலில் நான் சென்றபோது. அடுத்து அடுத்து சென்றபோது  வயல்கள் நடுவிலே வீட்டு மனைகள் வியாபாரம் பலகைகள் நின்றபோது வயிற்றில் பகீர் என்றது.  

ஏனென்றால் இங்கே ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் இருப்பவரை விட அரை அடி  நீளம் அதிகமானவர்.  ஆகிருதியாக சேஷன் மேல் சுகமாக யார் தொந்தரவும் இல்லாமல் படுத்துக்கொண்டிருக்கிறாரே.  எந்த ஜருகண்டியும் இல்லை காசு கேட்டு க்யூவில் நிற்கவைப்பவர்களும் இல்லையே. இயற்கை சூழலில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு  ஆனந்தமாக சயனித்திருக்கிறார்.  அருகே அவரை தொடும்  தூரத்தில் நின்று மணிக்கணக்காக அவரோடு பேசலாம், பாடலாம், யாரும் தடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் யாருமே இல்லை.

தேவதானம் பெருமாள் ஆயிரம் வருஷங்களுக்கு மேலானவர்.  பெருமாள் மேல் அவர் செய்த சேவைக்கு நன்றியாக  தேவர்கள் சேர்ந்து அளித்த தானம்  இந்த வயல் சூழ்ந்த இடம். தேவதானம்.   சிறிய கோவில் என்றாலும் சாளுக்கிய ராஜாவால் கட்டப்பட்ட  ஆலயம்.  ஆலயம்  வயல்கள் நடுவே ஒரு மணல் திட்டில் அமைந்திருக்கிறது. வளைந்து வளைந்து வண்டியில் செல்ல  பாதை அமைத்திருக்கிறார்கள். யாரும் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என்ற நோக்கத்தோடு தானே  ரங்கநாதர்  இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். கோவிலை  அடுத்து பெரிய வயதான மரங்கள்.

நிறைய பக்ஷிகள் அவருக்கு இன்னிசை  பாட கொடுத்து வைத்திருக்கின்றன.  சிறிய சாதாரண நுழைவாசல், அதை தொடர்ந்து பலி பீடம், கொடிமரம், எதிரே  பெருமாளை தொழுதபடி  கருடாழ்வார்.  அப்புறம்  நம் கண் முன்னே பிரம்மாண்டமான  ரங்கநாதர். ஐந்து தலை ஆதிசேஷன். மூன்று மடிப்புகளாக தனது உடலை படுக்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறார். தலைகள் தான் குடை. கிழக்கு நோக்கிய திருமுகம். யோக சயன ரங்கநாதர்.  எல்லோருக்கும் நெல் அளந்து கொடுத்து களைத்து அளந்த மரக்கால் படியை தலைக்கு வைத்தவாறு பதினெட்டு அடி நீளத்தில்  தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் தரிசனம் தருகிறார்.

தாமரைக்கண்ணன். வலது கையை அழகாக மடித்து  தலைக்கு கீழே. இடது காய் நீட்டியபடி.   
ஒரு ஆச்சர்யமான விஷயம். இந்த ரங்கநாதர் கல்லால் செதுக்கப்பட்டவர் அல்லர். சுதை. திருமேனி  முழுதும் சாளக்ராம கற்களால் வடித்தது. என்ன வசீகரமான புன்னகை பூத்த ;முகம். அப்பப்பா. நாள் முழுதும் ரசிக்க ஒரே இடம்.  பத்மநாபன்  நாபியில் ப்ரம்ம தேவன்.  தாமரை மலர் கையிலேந்திய  ஸ்ரீ லட்சுமி தேவி. அவளை அடுத்து நீலோத்பல மலர் ஏந்திய  பூமா தேவி.  கையில் தம்புராவோ வீணையோ கையில் கொண்டு போற்றி பாடும் தும்புரு,  வணங்கிக்கொண்டே இருக்கும் ஆஞ்சனேயர்.

சுதை சாளக்ராம விக்ரஹம் என்பதால்  அபிஷேகம் இல்லை.  தைல காப்பு. மினுமினுக்கிறார்.  பிரகாரத்தில்  ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சந்நிதி.  ஸ்தல விருக்ஷம் பாரிஜாதம் பூத்து குலுங்குகிறது. பறிப்பதற்கு ஆளில்லையா?  எங்கும் கம்மென்று பாரிஜாத நறுமணம். பெரிய புற்று ஒன்று. உள்ளூர் பக்தர்கள் அடிக்கடி வந்து பால் ஊற்றுகிறார்கள்.

சென்னையிலிருந்து  ரெண்டு மணி நேரத்தில் காரில் சென்று அடையலாம்.
 மீஞ்சூர்  அல்லது அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி நிறைய மினி பஸ், ஆட்டோ   கிடைக்கிறதால் வயல் வழியே சென்று ரங்கநாதனாரை  தரிசிக்க முடியும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.