Breaking News :

Wednesday, February 05
.

பசுவும் லக்ஷ்மியும் ஒன்றா?


மஹா பாரத அனுசாசன பர்வ  கடைசி பகுதிகளில்  இன்னொரு ருசிகரமான கதை வியாசர் எழுதியிருக்கிறார். அதை  பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு சொல்ல, அதையே ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் சொல்கிறார்.

''பசுஞ்சாணம் சிறப்பு மிக்கது. ஸ்ரேஷ்டமானது. பரிசுத்தமானது. அதில்  ஸ்ரீ லட்சுமி வாசம் செயகிறாள். இது எப்படி நிகழ்ந்தது என்பது தான் நான் சொல்லும் கதை.

அழகு தேவதையாக  ஸ்ரீ லட்சுமி தேவி ஒருநாள் ஒரு பசுக்கூட்டத்தை அடைகிறாள்.  அவளது அழகைபார்த்து வியந்தன பசுக்கள். ஆச்சர்யமாக பார்த்தன.

''யார்  நீ அழகு தேவதையே, எங்கிருந்து இவ்வளவு அழகைப் பெற்றாய். எங்கே செல்கிறாய்? உன் மேனி பொன்மயமாக பளபளக்கிறதே. உன்னைப் பற்றி சொல் '' என்றன பசுக்கள்
'நான்  தான்  ஸ்ரீ  என்று அழைக்கப்படும்  லட்சுமி.  என்னை சகல ஜீவராசிகளும் விரும்புகிறார்கள். அசுரர்களை நான் அடையாததால் எவ்வளவோ முயன்று தோற்றார்கள்.

தேவர்கள் என்னை போற்றி பயன் பெற்றார்கள்.   விவஸ்வதன் , சோமன், விஷ்ணு, வருணன், அக்னி, ஆகியோர் என்னை அடைந்ததால் சக்தி அடைந்தனர். என்னை வேண்டிய ரிஷிகளும் சந்தோஷமடைந்தனர். பசுக்களே  நீங்கள் புனிதமானவர்கள். என்னால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் சக்தி என்னிடமும் உள்ளது. எனவே உங்கள் ஒவ்வொருவருள்ளும்  நான் உறைய விரும்புகிறேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறாள்  ஸ்ரீ லட்சுமி.

''செல்வ லட்சுமி,  நீ ஒரு இடத்தில், ஒருவரிடத்தில்,  நிலைத்திருப்பதில்லை.   இடம் மாற்றி மாற்றி இருப்பவள். நீ இருக்கும் இடம்  சுபிக்ஷமாக இருக்கிறது, உன்னை பெற்றவர்கள்  மட்டும் சந்தோஷம் அடைகிறார்கள். நாங்கள் எல்லோருக்கும் சந்தோஷம் தருபவர்கள்.  எங்கள் செல்வம் எல்லோருக்கும் சமமானது. நீ எங்களுக்கு தேவை இல்லை  அம்மா. வேறு எங்காவது செல்.'' என்றன பசுக்கள்.

''பசுக்களே, நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறதா?.  நான் எளிதில் ஒருவருக்கு கிடைப்பவள் இல்லை என்பது கவனம் இருக்கட்டும். நான் கிடைக்க எத்தனையோ பேர் தவம் கிடக்கிறார்கள் என்று தெரியாதா?  நான் வேண்டாமா? என்னை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு நல்லது தானே.  உங்கள் சிறப்பு மேலும் உயருமே.  தேடாமல் கிடைத்ததற்கு என்றுமே மதிப்பில்லை  என்பது உங்கள் போக்கிலிருந்து நன்றாக எனக்கு புரிகிறது.  மீண்டும் சொல்கிறேன்  நான் கிடைத்தற்கரியவள்.  தானாக வந்த லக்ஷ்மியை வேண்டாமென்று சொல்லாதீர்கள் பசுக்களே ''.

'' லட்சுமி,  அம்மா, லட்சுமி  அவசரப்பட்டு பேசாதே.  நாங்கள் உன்னை வேண்டாமென்று சொல்லவில்லை. தேவையில்லை என்று தானே சொன்னோம்.  நீ  இல்லாமலேயே  நாங்கள் சந்தோஷமாகவே இருக்கிறோம்.

''கோ மாதாக்களே ,  நான் தானாகவே வந்து கேட்டும் நீங்கள் என்னை வேண்டாமென்று உதறி விட்டீர்கள் என்ற அவப்  பெயர் எனக்கு ஏற்படுத்தாதீர்கள்.  நீங்கள் எல்லோருக்கும் உதவுபவர்கள், எனக்கும் உதவி  என்னை ஏற்றுக் கொள்ளுங்களேன்.  என் வேண்டுகோளை நிராகரிக்காமல் என்னை ஏற்றால் உங்கள் மதிப்பும் உயரும். மேலும் மேலும் உங்களின் பெருமை பேசப்படும். எனக்கும் மகிழ்ச்சி.

''சரி அம்மா''. இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.  நீ எங்களோடு இரு.'' என்றன பசுக்கள்.
''பசுக்களே  உங்கள் உடலில் எந்த பாகத்தில் நான் குடியேறட்டும். உங்கள் உடலின் எந்த பாகமும் புண்யம்  கொண்டது. எனவே  உங்கள் பின்புறம் கூட எனக்கு போதும்'' என்றாள்  லட்சுமி.

பசுக்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து  ''அம்மா லட்சுமி  நீ எங்கள்  கோமியத்திலும், சாணத்திலும் இருந்தால் எங்களுக்கு  புண்யம் கிடைக்கும் தாயே '' என்று  லக்ஷ்மிக்கு இடம் கொடுத்தன.

"பசுக்களே,   எனக்கு  அடைக்கலம் கொடுத்த உங்களுக்கு  என் ஆசி பூரணமாக இருக்கட்டும். இந்த நிமிஷத்தில் இருந்து உங்களில் நான் உண்டு. உங்கள் பெருமையும் எல்லோராலும் போற்றப்படும் . உங்கள் கோமியம், சாணம்  புனிதம் வாய்ந்த பொருள்களாக  மதிக்கப்பட்டு  எல்லா சுப காரியங்களிலும் ஏற்றுக் கொள்ளப் படும் '' ன்று சொல்லி மறைந்தாள் ஸ்ரீ லட்சுமி.  
பசுங்கோமியம் பஞ்சகவ்யத்தில் ஒரு முக்கிய வஸ்து. பசுஞ்சாணம் பரிசுத்தம் தருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் அதற்கு என்றும் மரியாதை மதிப்பு கௌரவம் உண்டு. அது லட்சுமி வாசம் செய்வதால்  லக்ஷ்மிகரமானது.

பசுங்கோமியம் ஒரு சிறந்த ஒளஷதம், மருந்து என்று மருத்துவர்கள் சொல்கிறார்களே. பசுஞ்சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி என்றும்  விடாமல் சொல்கிறார்களே. படிக்கிறோமே .

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.