தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இது ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோவில் இரண்டாம் இராசராசனால் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.
இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது.
ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும் தல புராணம் தெரிவிக்கிறது. இக்கோயிலுக்குள் காணப்படும் இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இக்கூற்றுக்குச் சான்றாக உள்ளது.
எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிறது.
இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.
ஐராவதம் அஷ்டதிக் கஜங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அவை:-
* ஐராவதம் - அபுரமு - கிழக்கு
* அஞ்சனன் - அஞ்சனாவதி -மேற்கு
* சர்வபவுமான் - சுப்ரதந்தி - வடக்கு
* வாமனன் அங்கனா -தெற்கு
* புண்டரீகன் - கபிலா - தென்கிழக்கு
* புஷ்பதந்தன் - தமரகர்ணி - வடமேற்கு
* சுப்ரதீன் அனுபமா வடகிழக்கு
* குமுதன் பெங்கலா தென்மேற்கு