நரஸிம்மரை குலதெய்வமா கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமா கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக நரஸிம்மரை தரிசிக்காமல் இருக்கமாட்டார்கள். கிட்டத்தட்ட 1305 படிகள் ஏறி குரங்குகளின் தொல்லையை கடந்து யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்வது என்பது ஒவ்வொருவருடைய மனதிற்குள் இருக்கும் தீராத தாகம். அதுவும் கார்த்திகை மாதத்தில் அங்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் ஒரு வித தைரியம் மனதிற்குள் உண்டாவதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் 11 மாத காலம் யோகத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் கண்களை திறந்து பார்ப்பதாக ஐதீகம். அதனால் தான் கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். கார்த்திகை சனி, ஞாயிறு என்றால் ஊரே அமளி துமளி தான்.
1305 படிகளை ஏறி துவஜஸ்தம்பத்தை தரிசித்து உள்ளே சென்றால் முதலில் நாம் தரிசிக்க இருப்பது தாயார் அமிர்தபலவள்ளியை. பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும் தாயாரை காண கண் கோடி வேண்டும். தாயாரை பார்த்த உடன் விடுமுறைக்கு வரும் குழந்தை கடந்த வருடம் விடுமுறை முடிந்து கிளம்பிய நாள் முதல் இன்று வரை நடந்த விஷயங்களை தனக்கு நடந்த சுக, துக்கங்களை எல்லாம் ஒன்று விடாமல் அம்மாவிடம் கூறுவது போல் அமிர்தபலவள்ளித் தாயாரிடம் கூறத் தோன்றும். அம்பாளின் புன்னகை ததும்பும் முகம் என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா. இனி உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வது போல் தோன்றும். பிரிய மனமில்லாமல் தாயாரை தரிசித்து உள்ளே சென்றால் பிரஹலாத வரதன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், பானகப் பிரியன், குழந்தை மனம் உள்ளவன், பிரதோஷப்பிரியன், அலங்காரப் பிரியன் என்று அழைக்கப்படும் நரசிம்ம மூர்த்தி யோக கோலத்தில் வீற்றிருப்பதை காணலாம்.
எந்தக் குழந்தையுமே அம்மாவிடம் பேசும் அளவிற்கு தந்தையிடம் பேசுவது கிடையாது. இங்கும் அது போலத்தான் நினைக்கத் தோன்றும். நரசிம்மரை தரிசிக்கும் போதே என்னடா அங்க எல்லாம் ஒப்பிச்சிட்டு வந்துட்டியா என்று நம்மை பார்த்து நரசிம்மர் கேட்பது போன்ற உணர்வு தோன்றும். உட்கார்ந்திருக்கும் அழகு அதற்கும் மேல்.. பிரம்மாண்ட உருவம். பத்மாசனத்தில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்த கோலம்.
மிக்கானை மறையாய் விரிந்த விளக்காய் என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்கார கனியை அடைந்துயிந்து போனேனே
விளக்கம்: சிறந்தவனும், வேதமாக விரிவு பெற்ற விளக்கு போன்றவனும், என் நெஞ்சின் உள்ளே புகுந்து இருப்பவனும், கீர்த்தி வாய்ந்தவனும், ஜுவலிக்கின்ற பொன் மலை போன்றவனும், தகவுடையவனும், கடிகை என்னும் பெரிய திருமலையின் மீது எழுந்து அருளி இருக்கின்ற அக்காரக் கனியுமான எம்பெருமானை அடைந்து உய்ந்து போனேன் என்று இத்தலம் திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றுள்ளது.
இன்னும் எத்தனையோ பெருமைகளை உடைய இத்திருத்தலம் அரக்கோணத்தில் இருந்தும், திருத்தணியில் இருந்தும் 30 முதல் 35 கிமீ தொலைவில் இருக்கிறது. ஒருமுறை சோளிங்கர் வந்து யோகநரசிம்மரை தரிசித்து சென்றால் சோகம் என்பதே வாழ்வில் இருக்காது. நம்பினோரைக் கைவிடுவதில்லை...