தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.
பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.
வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.
சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.
பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.
எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.