Breaking News :

Tuesday, November 19
.

வாழ்வில் மாற்றம் தரும் திருஈங்கோய் மலை மரகதாசலேஸ்வரர் ஆலயம்


கார்த்திகை சோமவாரத்தின் திங்கள் கிழமையில் வழிபட வேண்டிய ஆலயங்களில் குளித்தலை கடம்பனேசுவரர், அய்யர்மலை ரத்னகிரீஸ்வரர் அடுத்த மூன்றாம் தலம் இந்த திருஈங்கோய் மலை மரகதாசலேஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயம் பற்றி சம்பந்தபெருமான் தன் தேவாரத்தில் பாடுகின்றார்.

"செங்கண் குறவரைத் தேவர்போற்றும்
         திகழ்திரு ஈங்கோய் மலையின்மேவும்
கங்கைச் சடையார் கழல்பணிந்து,
         கலந்த இசைப்பதி கம்புனைந்து,
பொங்கர்ப் பொழில்சூழ் மலையும்மற்றும்
         புறத்துஉள்ள தானங்கள் எல்லாம்போற்றி,
கொங்கில் குடபுலம் சென்று அணைந்தார்

         கோதுஇல் மெய்ஞ்ஞானக் கொழுந்து அனையார்"
இந்த ஆலயத்தின் வரலாறு வாயு பகவானுக்கும் ஆதிஷேஷனுக்குமான அகங்கார யுத்தம் நடந்ததில் இருந்து தொடங்குகின்றது.

அப்போது மலைகளும் மணிகளும் சிதறின, வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம், நீலம் ஆகிய மணிகள் எங்கெல்லாமோ சிதறி விழுந்தன, அவற்றுள் மரகதம் (பச்சைக் கல) விழுந்த இடமே ஈங்கோய் மலை.

பிற மணிகள் விழுந்த இடங்களும் சிவத்தலங்களாக மாறின. வைரம் திருப்பாண்டிக் கொடுமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும், நீலம் பொதிகை மலையிலும் சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும் விழுந்தன என்கின்றது புராணம்.

இந்த ஆதிஷேஷன் வாயு பகவான் அகந்தையினை அடக்கி இருவரின் அகங்காரமும் போக்கி சிவன் மரகதலிங்கமாக எழும்பிய இடம் இது, அதனாலே இது மரகத சைலம் என்றானது
சக்தியினை மதிக்காமல் சிவனை மட்டும் வணங்கும் பிருகு முனிவரால் சிவனை பிரிந்த அன்னை சக்தி மீண்டும் சிவனை அடைய தவமிருந்த இடம் இதுதான்.
 
அவ்வகையில் இது சக்திபீடமுமாகும். இங்கே சிவன் மரகத கல்லினால் உருவானவர், பச்சை என்பது உயிர்களின் நிறம், உலகுக்கு உணவிடும் பயிர்களின் நிறம், பச்சை பசுமை என்றால் உயிர்சக்தி, பசமை நீங்கினால் அது பட்டுபோன செத்துபோன ஒன்று.

உலகின் உயிராக இயக்கமாக சிவன் பசுமையாக இந்த உலகை காக்கின்றார், உலக பசுமையே சிவம் என்பதை சொல்ல பச்சை மரகத சிவனாக இந்த  மரகததாசலேஸ்வரர் கருவறையில் காட்சி தருகின்றார்.

அவரது கருவறை வாயிலில் இடது புறம் விநாயகரும் வலது புறம் அர்த்தனாரீஸ்வரரும் உள்ளனர்.

ஆம், இங்கு பார்வதி சிவனை மீண்டும் அடைந்ததால் இங்கு அர்த்தநாரீஸ்வரர் கோலமும் மகா முக்கியம்.

லலிதாம்பிகை எனவும், மரகதாம்பிகை எனவும் அழைக்கப்படும் அம்பிகை இங்கு அருள் பாலிக்கின்றார்.

இக்கோவில் திருக்கயிலைச் சிரங்களில் ஒன்றை தன்க்குள் கொண்டிருக்கின்றது என்பது புராண செய்தி, இதை  தென்கயிலாயம் எனவும் ரிஷிகள் சொல்வார்கள்
இங்கு தீர்த்தம் ஏராளம், விருட்சம் புளியமரம் என்பதால் திந்திரிணி வனம் எனப் பெயர் கொண்டு விளங்குகின்றது.

சுயம்பு சோதி மரகதலிங்கத்தை மூலலிங்க மூர்த்தியாகப் பெற்றுத் திகழும் ஒரே ஆலயம் இது
இந்த தலத்தில் அம்பிகைக்கும் இறைவன் சன்னதிக்கும் இடையில் தண்டாயுதபாணியாக முருகன் தனி சன்னதி கொண்டு உள்ளார்.

உமாதேவியார், திருமால், பிரம்மன், இந்திரன், இமயன், நவசித்தர்கள், அகத்தியர், சுப்பிரப அரசன் முதலியோர் தங்கிப் பூசித்துப் பேறுபெற்றனர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குப் பொற்புளியங்காய் வழங்கியது இங்குதான், பக்தர் என்ன கேட்டாலும் சிவனால் ஈயபபடும் மலை, ஈங்கோய் மலை என்றாயிற்று என்பதும் ஒரு குறிப்பு.

இந்த தலத்தில்தான் நக்கீரதேவர் "திருஈங்கோய்மலை எழுபது" எனும் நூலை பாடினார், அது அந்த ஆலயத்தின் எல்லா சிறப்பையும் சொல்கின்றது.

ஆண்டு தோறும் மாசி மாத மகா சிவராத்திரி  விடியற்காலையில் உதயமாகும் சூரியனின் ஒளி மரகதாசலநாதர் மீது விழுந்து பிரகாசிக்கும் பெருமை உடையது போன்றவை இத்திருக்கோயிலின் பெருமையாக விளங்குகின்றன.

மாசி சிவராத்திரியின் போது மூன்று நாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி மாறி காட்சியளிப்பது அவ்வளவு அழகானது.

ஆம், இது சிவன் அருள் ஈயும் மலை, பச்சை எனும் பசுமை நிறமே வாழும் உயிர்களின் அடையாளம், அந்த உயிர்சக்திதான் பூமியில் எல்லா உயிர்களும் வாழ உணவாக இன்னும் மழைபெய்ய காரணமாக இன்னும் காற்று உற்பத்தியாக என ஏராளமான வழிகளில் அடிபப்டை ஆதாரமாக இருக்கின்றது.

பச்சை நிறமே மானிட வாழ்வின் அடிப்படை ஆதாரம், அந்த ஆதாரமாய் சிவன் நின்று அருள் ஈந்து, பக்தர் வேண்டும் வரமெல்லாம் ஈந்து ஈங்கொய் மலையில் அருள் பாலிக்கின்றார்.

இந்த கார்த்திகை சோமவாரத்தில் குளித்தலை கடம்பனேசுவரரை காலையில் வணங்கி, மதியம் அய்யர்மலை ரத்னகிரீஸ்வரரை மதியம் வணங்கி மாலையில் இந்த திருஈங்கோய் சிவனை வணங்கி முடித்தல் பெரும் பலனை தரும்.

முதலாவது ஆலயம் கர்மத்தை உறுதியாக செய்யும் பலன் தரும், இரண்டாம் ஆலயம் சாபம் போக்கும், மூன்றாம் ஆலயம் வாழ்வதற்குரிய எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளி அள்ளி தரும்.

பிரம்மதேவர் இத்தலத்துக்கு வந்து மரகதாசலேசுவரரைப் பூஜித்துத்தான் தன் படைப்பு தொழில் கர்மத்தை சரிவர செய்யும் வரம்பெற்றான்.

காவிஷ்ணுவும் இங்கு வந்து வழிபட்ட பின்னரே காக்கும் தொழிலைச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றார்.

யமனின் சகோதரியான யமுனா நதியும், உரோமரிஷி முனியும் இங்கு வணங்கிதான் தங்கள் கர்மத்தை செய்யும் யமுனை, ரோமச ரிஷி ஆகியோரும் இத்தலத்தில் வழிபாடு செய்து கர்மம் சுமக்கும் வரம் பெற்றனர்.

அதே வரம் இங்கு வழிபடும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.

கார்த்திகை சோமவாரத்தின் திங்கள் கிழமையில் இதனை முயற்சியுங்கள், நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றம் வரும் இது சத்தியம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.