Breaking News :

Sunday, December 22
.

கங்கா விஜயம், கங்கை, விஜயம், gangai vijayam


​​கங்கைக் கரையில்   ஒருசெருப்பு தைக்கும் நல்ல  கிழவன்.  தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். 

சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம்  கெடுமாம். இப்படியெல்
லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில்.

​ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். 

 அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார்.  ''எவ்வளவு பாக்கியசாலி அவர்''  என்று அவரை தூர இருந்தே  இரு கரம் கூப்பி  கிழவன் வேண்டுவான். 

அவனைப் பார்த்தாலே  தூர நகர்வார் அவர்.  அவனோடு பேசுவார்.  ஒருநாள்  அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை கிழவனிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார்.  நன்றாக  ரிப்பேர் செய்து கொடுத்தான்.  

அவனருகே  ஒரு அணா  காசு  விட்டெறிந்தார். அருகே வந்து தரமுடியாதே!   அவன்  வணங்கி  ''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன்.  நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும்  வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''.  

''உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது?  நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது''  என்கிறார்  அந்த பண்டிதர்.

''ஐயா  இந்த ஏழைக்கு  ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா?   இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும்  வணங்குகிறேன் என்னால்  ஒன்றும் செய்ய இயலவில்லை.  நான் அளித்த காணிக்கையாக  நீங்களே  அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?'

''என்ன சொல்கிறாய். இந்த ஓரணாவை  கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி''

பண்டிதர் கங்கையில் இறங்கினார்வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். ''அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவன் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள்'' என்று சொல்லி வீசி எறிந்தார். 

நுங்கும்நுரையுமாக ப்ரவாஹமாகஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய  கை  வெளியே தோன்றி அவர் வீசிய  ஓரணா காசை ஆர்வமாக  அன்பாக  பெற்றுக் கொண்டது.  கங்கையின் முகம் தோன்றியது  பேசியது.

''பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள்'' என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள்  பதித்து  ஒளிவீசிய   தங்க வளையலை, கொடுத்தாள். பண்டிதன் அசந்து போனான். ஆச்சர்யத்தில்  நடுங்கினான்.

அதை தனது மேல் துண்டில் பத்திரமாக  முடிந்து வைத்து கொண்டான். கிழவினிடம் ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் மனைவிடம் '' கமலா, இதோ பார்த்தாயா,  நான் எதற்குமே  பிரயோஜனம் இல்லை, ஏட்டுச்  சுரைக்காய் என்பாயே''  இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு?

''என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள்?  உங்களை போல்உதவாக்கரைக
ளுடன் பேசிவிட்டு  தேங்காய் மூடி வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள். சீக்கிரம் கொடுங்கள். இன்றைய பொழுது துவையலிலாவது கழியட்டும். '' என்றாள்  மனைவி.

''அசடே,   இதைப் பார்.  என் வேதத்தை மதித்து கவுரவித்து அதால்  பெற்றது.    உனக்காக  நான் சம்பாதித்தது'' என்று  கங்காதேவி தந்த வளையலை தந்தான் பண்டிதன்.  கமலாவுக்கு தன்னையோ,  தன் கண்களையோ  நம்ப முடியவில்லை.   கையில் போட்டு அழகு பார்த்தாள்.  மின்னியது. கண் கூசியது.  என்ன ஒருவளை  தானா?  இன்னொன்று?''

''அடுத்த முறை கங்கையை கேட்டு  வாங்கி தருகிறேன்''   என்று சமாளித்தான் பண்டிதன். இந்த ஒன்று எதற்கும் உதவாதே . நாமோ ஏழைகள். திருடர்கள் கொள்ளையர்களால் இதனால் உயிர்போனாலும் போகலாம்.  எனவே அவன் மனைவி கெட்டிக்காரி என்ன சொன்னாள்?

''இதோ பாருங்கோ, இந்த ஒண்ணை  வச்சுண்டு என்ன பிரயோஜனம். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால்  எல்லாரும் சிரிப்பார்கள். பேசாமல் இதை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக  சௌகர்யமாக வாழலாம்.

ராஜாவிடம் சென்றான். கொடுத்தான். ராஜா  வாங்கி பார்த்து மகிழ்ந்தான். ஒரு பை  நிறைய பொற்காசுகள் கொடுத்தான். ராணியிடம் ஆசையோடு அந்த வளையை  கொடுத்தான்.  மிக்க மகிழ்ச்சி அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது. ''இன்னொன்று எங்கே?''

ராஜாவிடம் ''இன்னொன்றும் வேண்டுமே எங்கே''  என்று கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதனை அழைத்து வர செய்தான்.  

''ஹே  ப்ராமணா. இன்னொரு வளை  எங்கே? ஏன் அதை தரவில்லை? வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடு. ராணி கேட்கிறாள்''

​பிராமணன் தயங்குவதை பார்த்த ராஜாவுக்கு கோபம் வந்தது.  ''என்ன விளையாடுகிறாயா என்னிடம். இன்னும்  ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையுடன்  நீ வரவில்லை என்றால் உன் உயிர்உனதல்ல 
.ஜாக்கிரதை''  என்றான். 
 ராஜாவின் கட்டளைபண்டிதனுக்கு  எம பயத்தை தந்ததால் ஓடினான்.  எங்கே?  கங்கைக்கரைக்கு.

அந்தகிழவன்வழக்கபோல் அதிகாலையில்  கங்கைக் கரைக்கு  தூர நின்று இரு கரம் கூப்பி  கண்களை மூடி கங்கையைவணங்கினான். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டான் அது தான் அவனுக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒருபாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தான். 

திடீரென்று தன்முன்னே  பண்டிதன் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவனுக்கு  ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது. 

''சாமி  நீங்க என்ன செய்றீங்க?"' என்ன ஆச்சு உங்களுக்கு?  நான் தானே  உங்களை எப்போவும் வணங்கறது?''

''என்னை மன்னிச்சுடுப்பா.  நான்  துரோகி.  கங்கா மாதா உனக்கு கொடுத்த  பரிசை திருடி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவன்  அதை வித்து ராஜாகிட்ட நிறைய பணம் வாங்கினேன். இப்போ என் உயிரே காற்றிலே ஊசல் ஆடுது என்று விஷயத்தை சொன்னான் பண்டிதன்.

''ஆஹா அப்படியா. நமக்கு  யார்  உதவி செய்வாங்க இப்போ ?  எப்படி  இன்னொரு வளையல் கிடைக்கும்? கங்காமாதாவையே கேட்போம்.  

கிழவன் கண்ணை மூடினான்.  தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினான்.  அம்மா கங்கா  நீ எனக்கு பரிசாக ஒரு வளை  கொடுத்ததற்கு  நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே.  பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்'' என்று  தனது கையை அந்த ஜலத்தில் விட்டான்.  

மீண்டும்  பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த கிழவனின் அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.

அப்புறம் என்ன நடந்ததா??

பண்டிதன் ராஜாவிடம் அதை எடுத்து போகவில்லை. தனது உயிரைப் பற்றி கவலைப் படவில்லை. வீடு, கமலா  எல்லாவற்றையும் மறந்தானா , துறந்தானா எதுவோ ஒன்று.   அங்கேயே  கிழவனின் கால்களை  கெட்டியாக பிடித்துக்கொண்டு  கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தான். விஷயம் பரவியது.

ராஜாவும் அவன் மனைவியும் ஓடி வந்தார்கள். கிழவனை வணங்கினார்கள். அரண்மனைக்கு கூப்பிட்டார்கள். 

என் கங்காமாதா தரிசனம் ஒன்றே போதும் என்று அவர்களை திரும்பி வணங்கினான் கிழவன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.