Breaking News :

Thursday, November 21
.

ஹயக்ரீவர் வழிபாடு ஏன்?


இந்த உலகில் அழியாத ஒரு செல்வம் இருக்கிறது என்றால் அது கல்விச்செல்வமே. எவர் ஒருவராலும் ஒருவரிடமிருந்து தட்டிப்பறிக்கவோ, திருடவோ முடியாத ஒன்று கல்விச்செல்வம் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதியை தான்.

 

ஆனால் அந்த சரஸ்வதிக்கே ஒரு குரு உண்டென்றால் அது ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவரே ஆவார். 4 வேதங்களின் துணைகொண்டு அவ்வேதங்கள் பின் தொடர நான்முகனான பிரம்மன் தனது படைத்தல் தொழிலை செய்து வந்தார். மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் பேராசையின் காரணமாக பிரம்மாவிடம் இருந்த வேதங்களை குதிரை வடிவில் வந்து திருடி சென்றனர்.

 

வேதங்களை மீட்டவர்

 

இதன்காரணமாக உலகம் படைத்தலின் அர்த்தமே இல்லாமல் இருள் சூழ்ந்தது. எனவே பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து மகாவிஷ்ணு குதிரை முகம், மனித உடல், சூரியனை விஞ்சக்கூடிய ஒளி, கண்களாக சூரிய சந்திரர்கள், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதி, தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவம் கொண்டு அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்க சென்றார்.

 

அந்த அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்கவே உலகம் இருள் அகன்று ஒளி உண்டாகியது. அசுரர்கள் கை பட்டதால் பெருமை குன்றியதாக வேதங்கள் நினைத்தன. எனவே தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரை முகத்துடன் இருந்த பெருமாள் உச்சி முகர்ந்தார்.

 

இதனால் அவரது மூச்சுக்காற்றால் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களிடம் போரிட்டதன் காரணமாக ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்ததால் அவரை குளிர்விக்க லட்சுமியை அவரது மடியில் அமர்த்தினார். இதனால் அவர் லட்சுமி ஹயக்ரீவர் என அழைக்கப்படுகிறார். வேதங்களை மீட்டவர் என்பதால் அவர் கல்விக்கு தெய்வமாகின் றார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால் லட்சுமியை இடது பக்கம் அமர்த்தியிருக்கிறார்.

 

சரஸ்வதியின் குரு

 

கல்விக் கடவுள் என அறியப்படுபவர் சரஸ்வதி. அந்த சரஸ்வதிக்கே கல்வி அறிவை கொடுத்தவர் ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். அவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர். எனவே தங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ, கல்வியறிவு பெருக வேண்டி விரும்பினால் மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஹயக்ரீவருக்கு நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

 

மேலும் நோட்டு, பேனா, தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன் வந்து ஹயக்ரீவருக்கு சாத்தி பூஜையில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யலாம். இதில் அபிஷேகம் செய்த தேனை தோஷம் உள்ள குழந்தைக்கு கொடுத்து தொடர்ந்து ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும். மேலும் பூஜையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்ட தேனை குழந்தைகளின் நாவில் தடவிவிட்டு ஹயக்ரீவரர் மந்திரத்தை தொடர்ந்து மனதில் செபிக்க செய்தால் குழந்தைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து வருவர்.

 

மந்திரம்

 

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்கிருதிம், ஆதாரம் ஸர்வவித்யானாம், ஹயக்ரீவ முபாஸ்மஹே

 

பொருள்: ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக, மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியுடன் எல்லா கலைகளுக்கும் உறைவிடமாக குதிரை போன்ற திருக்கழுத்தை உடைய எம்பெருமானை வணங்குகிறோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.