ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். “ஜென்ம சனி” என்றால் என்ன என்பதை குறித்தும், அதற்கான பரிகாரங்கள் குறித்தும் இங்கு அறிந்தது கொள்ளலாம்
ஒரு நபரின் ஜாதகத்தில் அவரின் லக்னத்திற்கு 12 ஆம் இடத்திலிருக்கும் சனி கிரகம் அவரது “ஜென்ம லக்னம்” ஆகிய “ஒன்றாம்” வீட்டில் பெயர்ச்சி ஆவதை “ஜென்ம சனி” என்பார்கள். இந்த ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, உடல் மற்றும் மன ரீதியான அசதி போன்றவை ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
ஜென்ம சனி காலத்தில் இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம லக்னத்திலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்வார். ஜென்ம சனி நடைபெறும் காலத்தில் சனி பகவானால் தீய பலன்கள் அதிகம் ஏற்படாமல், நற்பலன்களை சனி பகவானின் அருளால் அதிகம் பெறுவதற்கு வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, “அனுமன் சாலிசா” மற்றும் சனி பகவானுக்குரிய மூல மந்திரங்களை துதித்து வழிபடுவது நல்லது. புதன்கிழமைகளில் விநாயக பெருமானையும் வழிபட்டு வர உடல்சார்ந்த துன்பங்கள் இக்காலங்களில் ஏற்படாமல் காக்கும்.
கோவில்களுக்கு தீப எண்ணெயை தானமாக வழங்கி வரலாம். மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஒரு வேளை உணவு உண்ணாமல் சனி பகவானுக்கு விரதம் இருந்து,கோவிலுக்கு சென்று சனி பகவானின் விக்கிரகத்தின் அடியில் கருப்பு எள் கலந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். இந்த சமயங்களில் சனி பகவானின் விக்கிரகத்தை சுற்றி வந்து வழிபடுவதோ, நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வழிபடுவதோ கூடாது. துப்புரவு தொழிலாளிகள், கீழ்மட்ட நிலை பணியாளர்கள் போன்றோரிடம் மரியாதையுடன் நடந்து, அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனி பகவானின் நல்லாசிகள் உங்களுக்கு கிடைக்க செய்யும்.