காளி தேவி, சிவனை தனது காலுக்கடியில் போட்டு மிதித்துக் கொண்டிருப்பது போல நிறைய படங்களில் பார்த்திருப்போம். இதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியுமா?
ஒரு சமயம் ரக்தபீஜா என்னும் அரக்கன் கடுமையான தவமிருந்து பிரம்ம தேவனிடமிருந்து ஒரு வரத்தை வாங்குகிறான். ‘தன்னுடைய ஒரு துளி இரத்தம் சிந்தும்போது தன்னுடைய பலம் ஆயிரம் மடங்கு அதிகரிக்க வேண்டும்’ என்ற வரத்தை பெறுகிறான். பிறகு தன்னை அழிக்க யாருமில்லை என்ற ஆணவத்தில் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்துகிறான்.
ரக்தபீஜாவை அழிக்க துர்கா தேவி தன்னுடைய வாளை வீசுகிறாள். அவனுடைய ஒரு துளி இரத்தம் தரையில் விழுந்ததும், அவனுடைய ஆயிரம் வடிவங்கள் வெளிப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த துர்கா தேவி மஹாகாளியாக அவதாரம் எடுத்து, அனைத்து அரக்கர்களையும் கொன்று அவர்களின் இரத்தம் தரையில் சிந்தாதவாறு அனைத்தையும் குடிக்கிறாள்.
இதனால் உக்கிரமான காளி தேவி ஆவேசமாக நடனமாடத் தொடங்குகிறார். அவள் கால் வைக்கும் இடமெல்லாம் அழிவு ஏற்படுகிறது. உலகத்தை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமான் காளி தேவி வரும் பாதையில் சென்று படுத்துக் கொள்கிறார். காளி தேவியின் பாதம் சிவபெருமான் மீது பட்டதுமே ஆக்ரோஷமாக இருந்த காளி தேவி இயல்பு நிலைக்கு வருகிறார். தன்னுடைய காலுக்குக் கீழே இருப்பது தனது கணவன் என்பது தெரிந்ததுமே வருத்தப்பட்டு நாக்கை நீட்டி சிவபெருமான் மீது இருக்கும் தனது பாதத்தை எடுக்கிறாள் காளி தேவி.
இப்படி, காளி தேவியின் கோபத்தைத் தணிக்கத்தான் சிவபெருமான் தானாகவே காளி தேவியின் காலடியில் வந்து படுத்துக் கிடப்பதாக ஐதீகம். ‘காளி’ என்றால் காலத்தை ஆள்பவள் என்ற பொருள் உண்டு. நவக்கிரகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈஸ்வரனே, காளி தேவியின் காலடியில் இருப்பதால், காளி தேவியை வழிபட்டால் நவக்கிரக தோஷம் எல்லாமே நீங்கும் என்று நம்பப்படுகிறது. யார் தன்னை வேண்டி எதைக் கேட்டாலும் அதைக் கொடுப்பவள் அன்னை பத்ரகாளி. யாருக்கும் கட்டுப்படாத அன்னையை வணங்கும்போது, நமக்கு எதற்கும் அஞ்சாத வலிமையைக் கொடுப்பாள்.
ராகு பகவானின் அதிபதியான காளி தேவியை ராகு காலத்தில் வழிபடுவது மேலும் சிறப்பாகும். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி தன்னுடைய குலதெய்வமான காளி தேவியை வணங்கிவிட்டுத்தான் போருக்குச் சென்று பல வெற்றிகளை பெற்றார் என்று சொல்லப்படுகிறது.
மகாபாரதத்திலும் பாண்டவர்கள் காளி தேவிக்கு அரவாணை பலியிட்ட பிறகுதான் போரில் வெற்றி பெற்றார்கள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு காளி தேவிக்காகக் கட்டப்பட்ட கோயில்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.