Breaking News :

Thursday, November 21
.

நிறம் மாறும் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், திருநல்லூர்


திருவானைக்காவல் ஆலயத்தில் உள்ள ஜம்புலிங்கப் பெருமானை, தனது முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்டவன். இந்த மன்னன், சிவபெருமானுக்கு யானை ஏறாத மாடமாக எழுபது கோவில்களை அமைத்தான்.

அப்படி அமைத்த கோவில்களில் பெரிய அளவில் அமைந்த கோவிலே, திருநல்லூரில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலாகும். கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தைத் தவிர, சவுந்திர நாயகர், சுந்தரநாதர், பஞ்சவர்ணேஸ்வரர், அமிர்தலிங்கர், திருநல்லூர் உடைய நாயனார் என பலப்பெயர்களிலும் இத்தல இறைவன் போற்றி வழிபடப்படுகிறார்.

இக்கோவிலில் உள்ள லிங்கத்தின் பாணம், இன்ன பொருளால் உருவாக்கப்பட்டது என்று கூற இயலாத வகையில் தாமிர நிறத்தில் காணப்படுகிறது. இங்குள்ள இறைவன் இன்றும் ஐந்து வகையான நிறத்துடன் தினந்தோறும் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாக இருக்கிறது.

*சுயம்புவான இந்த லிங்கம் 6 நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறும் தன்மை கொண்டதாகும். காலை 6 மணி முதல் 8.25 மணி வரை தாமிர நிறத்திலும், 8.26 மணி முதல் 10.48 மணி வரை இளம் சிவப்பு நிறத்திலும், 10.49 மணி முதல் பகல் 1.12 மணி வரை உருக்கிய தங்கம் போன்ற நிறத்திலும், 1.13 மணி முதல் 3.36 மணி வரை நவரத்தின பச்சை நிறத்திலும், மாலை 3.37 மணி முதல் 6 மணி வரையிலும் இன்ன நிறம் என்று அறிய முடியாத வண்ணத்திலும் இறைவன் காட்சி தருவார்.

இந்த அற்புதம் வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத இறையருள் காட்சியாகும். இந்த மூல லிங்கத்தின் அமைப்பில் மற்றொரு சிறப்பும் இருக்கிறது. அது யாதெனில், இந்த லிங்கத்தின் ஆவுடையார், தென்வடலில் மிக நீண்ட சயனக்கோல் வடிவானது.

மேலும் ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் உள்ளன. இப்படி இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. மூலவர் லிங்கம் அமைந்த கருவறையில், சுதை வடிவில் அமர்ந்த கோலத்தில் சிவபெருமானும், அம்பாளும் இருக்க, இருபுறமும் திருமாலும், பிரம்மதேவரும் நின்ற கோலத்தில் உள்ளனர்.

கோவிலில் உள்ள அம்பாளின் பெயர் கிரிசுந்தரி என்பதாகும். மலை அழகி, திருமலைச் சொக்கி என்ற திருநாமத்திலும் அம்பாள் அழைக்கப்படுகிறாள். மிகப்பெரிய வடிவில், பேரழகு கொண்டவளாக சுவாமிக்கு வடகிழக்கில் தனிக்கோவிலில் தென்முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள், இத்தலத்து அன்னை.

ஆலயமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும், கொடிமரத்துப் பிள்ளையார், கொடிமரம், பலிபீடம், இட்டத் தேவரின் சன்னிதி ஆகியவை உள்ளன. கொடிமரத்தின் இடதுபுறத்தில் அமர் நீதியார் தராசு மண்டபமும், வலது புறம் உற்சவ மண்டபமும் அமையப்பெற்றுள்ளன.

அதைத் தொடர்ந்து மூன்று நிலைகளுடன் கூடிய உட்கோபுரம் உள்ளது. உள்ளே இடதுபுறம் தேவர்கள் பூஜை செய்த லிங்கங்களும், வலதுபுறம் சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இதையடுத்துள்ள காசி பிள்ளையாரைக் கடந்து சென்றால், அழகிய மண்டபம் இருக்கிறது.

அதன் வலதுபுறம் கிரிசுந்தரி அம்பாளின் சன்னிதியும், அம்பாள் சன்னிதியின் எதிரில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னிதியும் அமைந்துள்ளன. தேவக் கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

உட்பிரகாரத்தின் மேற்கு திசையில் சப்தமாதர்கள், தேவர்கள் பூஜித்த சிவலிங்க திருமேனிகள், முருகப்பெருமாள், மகாலட்சுமி ஆகியோரின் திருமேனிகளும், வடக்கு பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மூவர், நடராஜர் ஆகியோரின் திருமேனிகளும் அமையப்பெற்றுள்ளன.  

இந்த ஆலயம் மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. எனவே யானை ஒன்று பெருமான் இருப்பிடத்தை சென்று அடைய முடியாதபடி, பல படிக்கட்டுகளுடன் உயர்ந்து நேர் வாசல் இன்றி, இக்கோவில் அமைந்துள்ளது.ஆகையால் இங்கு மூல லிங்கம் 14 அடி உயர மேற்பரப்பில் மிக உயர்ந்த விமானத்துடன் கிழக்கு நோக்கியும், அம்பாளின் சன்னிதியின் விமானம் சற்றே சிறியதாகவும் உள்ளது.

இவ்விரண்டு சன்னிதிகளுக்கும் செல்லும் வாசல்படி உள் திருச்சுற்றின் தென்பக்கம் கிழக்கு நோக்கி ஏறும் படிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு திருச்சுற்றுகளைக் கொண்ட இந்த ஆலயம் 316 அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது. திருநல்லூர் திருத்தலத்தில் மேற்கு கோபுர வாசலின் மேற்புறம் பலிபீட வடிவில் இருக்கும் கணநாதரின் திருவுருவம் இங்கும் காசியிலும் மட்டுமே காணக்கூடிய சிறப்பு பெற்றதாகும்.  ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ‘கணநாதர் பூஜை’ என்னும் சிறப்பு வழிபாட்டின்போது, திருநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உள்ள பசுக்கள் ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே ஆலயத்திற்கு கொண்டு வந்து கொடுத்து, இறை வழிபாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

சப்த சாகரம், அக்னி தீர்த்தம், நாக கன்னி தீர்த்தம், தர்ம தீர்த்தம், தேவ தீர்த்தம், பிரம குண்டம், ஐராவத தீர்த்தம், சந்திர தீர்த்தம், காவிரி தீர்த்தம் என பல தீர்த்தங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன. தல விருட்சம் வில்வ மரமாகும். பிரம்மதேவர், சிவபெருமானை பூஜித்து வழிபட்ட தலம் இதுவாகும்.  ஆம்! பிரம்மதேவருக்கும், திருமாலுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி நடைபெற்றது. அதில் சிவபெருமானுடைய முடியைக் கண்டேன் என்று பொய் உரைத்தார் பிரம்மதேவர். அந்தத் தீவினையைப் போக்கிக் கொள்ள இந்தத் தலத்தில் தன் பெயரால் பொய்கை ஒன்றை ஏற்படுத்தி, அதில் நீராடி ஈசனை பூஜித்து பேறுபெற்றார்.

அவர் நிறுவிய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்றானது. இது தற்போது சப்த சாகரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி, இத்தலத்தை வந்தடைந்தபோது, நாரத முனிவரை சந்தித்தாள். அன்று மாசி மகம் என்பதால் கடலில் நீராடுவது மிகவும் புண்ணியம் என்று குந்தியிடம் நாரதர் கூறினார்.

 குந்திதேவி இறைவனிடம் வேண்டினாள். இதையடுத்து சிவபெருமான், குந்திதேவிக்காக உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்த நீர் ஆகிய ஏழு கடல்களையும் பிரம்ம தீர்த்தத்தில் சேருமாறு அருளினார். அதில் குந்திதேவி நீராடி சிறப்படைந்தாள்.

தஞ்சாவூர்– கும்பகோணம் சாலையில் உள்ளது பாபநாசம்.

இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநல்லூர் திருத்தலம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.