இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*
மதுரை மாவட்டத்தின் மையப்பகுதியில் அதாவது, மதுரை மத்திய பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள்
இத்தல மூலவரான ஏகாம்பரேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
வடமொழியில் 'ஆம்ர" என்ற சொல்லுக்கு, தமிழில் 'மாமரம்" என்று பொருள். மாமரத்தின் அடியில் இத்தல பாணலிங்கம் தோன்றியதால் இத்தல ஈசன் ஏகாம்பரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
கோயிலின் அடுத்துள்ள மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜரும், பாணலிங்கமும் காட்சியளிக்க அவர்களுக்கு அருகே ஆதிகாலத்து உக்கிர காளி, தற்போது சாந்த சொரூப காளியாக காட்சி தருகிறாள்.
இத்தல காயத்ரி தேவி ஐந்து முகம், பத்து கைகள் மற்றும் மூன்று பாதங்களுடன் வீற்றிருக்கிறாள். இவளுக்கு அருகே ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.
இக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தனி மண்டபத்தில் வீற்றிருக்கின்றனர்.
பொதுவாக அன்னை காமாட்சியே பிற சிவ ஆலயங்களில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி காட்சியளிப்பாள். ஆனால் இங்கு காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் ஒரே இடத்தில் தரிசிப்பது மிகவும் சிறப்பம்சமாகும்.
இக்கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். கிழக்கு, வடக்கு என இரு வாயில்கள் இக்கோயிலில் இருந்தாலும் அம்மன் நோக்கியிருக்கும் வடக்கு வாசல் தான் பிரதான வாசலாக அமைந்துள்ளது.
இத்தல மண்டபத்தில் லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலில் நுழைந்தவுடன் கொடிமரம் தாண்டி உள்ள மண்டபத்தில் துவார பாலகிகள் சிறப்பாக காவல் புரிகின்றனர்.
துவார பாலகிகளுக்கு இடதுபுறம் கணபதி, சரஸ்வதி, பிரம்மா ஆகியோர் காட்சி தருகின்றனர்.
துவார பாலகிகளுக்கு வலதுபுறத்தில் முருகன், லட்சுமி, விஷ்ணு ஆகியோர் ஒரே இடத்தில் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பம்சமாகும்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
நவராத்திரி, சங்கராந்தி, திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் மற்றும் கார்த்திகை மாத திருவீதி உலா ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், துன்பம், வறுமை, தரித்திரம் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவன் மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.