27 பூதகண வேதாளங்கள்.. இரண்டு நுழைவு வாயில்..!!
இந்த கோயில் எங்கு உள்ளது?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யூர் என்னும் ஊரில் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் செய்யூர் என்னும் ஊர் உள்ளது. செய்யூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தல மூலவர் கந்தசுவாமி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
வெளிப்பிரகாரத்தில் இருந்து முன் மண்டபத்திற்குள் நுழைந்ததும், இடப்புறத்தில் சோமநாதர் மற்றும் மீனாட்சியம்மை சன்னதியும், அதன் அருகில் பள்ளியறையும் இருப்பதைக் காணலாம்.
இச்சன்னதியின் முன் நந்தி தேவர் வீற்றிருக்க அவரின் இருபுறமும் பிரம்மாவும், விஷ்ணுவும் காட்சியளிக்கின்றனர்.
கொடி மரத்துக்கு வடக்கில் அம்மன் சன்னதியும், அதற்கு முன் சர்வ வாத்திய மண்டபமும் அமைந்துள்ளன.
வெளிப்பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூதகண வேதாளங்கள் இக்கோயிலைச் சுற்றி அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
இக்கோயில் தெற்கு, கிழக்கு என இரண்டு நுழைவு வாயில்களை கொண்டுள்ளது.
வேறென்ன சிறப்பு?
இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார்.
வெளிப்பிரகாரத்தில் பிரதட்சிணமாக வரும்போது முதலில் விநாயகர் சன்னதியும், மூலஸ்தானத்திற்கு வடக்கே நந்தவனமும் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிப்பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் பழமையான கல் தீபஸ்தம்பமும், கொடி மரமும் மூலஸ்தானத்தை நோக்கியவாறு காட்சியளிக்கின்றன.
இக்கோயிலின் கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்ரமணிய ரூபங்களாகவே காட்சியளிப்பது சிறப்பாகும்.
வழக்கமாக கோயில்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை விளங்குவர். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்தஸ்கந்தரும், தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணு மாடத்தில் பாலஸ்கந்தரும், பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், வைகாசி விசாகம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?*
தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள முருகனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி (ganesanmatrimony.com) பார்க்கவும்