Breaking News :

Thursday, November 21
.

கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில், கோமல்


அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில், கோமல்,  குத்தாலம் தாலுக்கா,  நாகப்பட்டினம் மாவட்டம்.

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் –  கிருபாகூபாரேச்வரர்
தாயார் –  அன்னபூரணி
தல விருட்சம் –  வில்வம்
ஆகமம் –  காரண ஆகமம்
பழமை –  1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் –  கோபுரி
ஊர் –  கோமல்
மாவட்டம் –  நாகப்பட்டினம்
மாநிலம் –  தமிழ்நாடு

சிவபெருமான் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் என்பதை அறிய பார்வதிதேவி விரும்பினாள். இதுபற்றி அவரிடமே கேட்டாள். அப்போது, சிவன் ஒரு திருவிளையாடல் செய்தார். பார்வதி தன்னை மறந்து விளையாட்டாக தனது கண்களை பொத்தும்படி செய்தார். அந்த நொடியில் உலக இயக்கம் நின்று போனது. இதைக்கண்டு அதிர்ந்து போன பார்வதி, தன்னால் நிகழ்ந்த இந்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். அதற்கு சிவன், “உன் கரத்தினால் என் கண்ணைப் பொத்தி இந்த பிரபஞ்சத்தை இருளாக்கினாய்.

இப்போது என் கரத்தில் இருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப்போகிறேன். நீ பசுவாக மாறி இந்த ஜோதி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து என்னை வந்து சேர்வாய்” என கூறி மறைந்தார்.

சிவனைக்காணாத பார்வதி, அவரது ஆணைப்படி பசு உருவம் கொண்டு, தன் சகோதரரான திருமாலுடன், சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தாள். பார்வதி மீது கிருபை கொண்டார் சிவன். ஒரு அஸ்த நட்சத்திர நாளில், ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றியது. இதை கோமளீய ஜோதி என்றும் சொல்வர். பார்வதி மனம் மகிழ்ந்து அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். பார்வதிக்கு கிருபை செய்த, இந்த சம்பவத்தின் அடிப்படையில் கோமலில் ஒரு கோயில் எழுப்பப்பட்டது. கிருபை செய்த சிவனுக்கு, கிருபா கூபாரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாளுக்கு அன்னபூரணி என பெயர்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது அஸ்தம் நட்சத்திர நாளிலோ இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர்களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம்.

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு நைவேத்யம் செய்து, கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் அஸ்த நட்சத்திர நாளில் கரங்கள் கூப்பியபடி வலம் வந்தால் இறைவனின் பரிபூரண அருளைப்பெறலாம். கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கை அமைய ஏங்குபவர்களும் திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

பார்வதி பசுவாக மாறி இங்கு வழிபாடு செய்ததால் இத்தலம் கோபுரி என்றும் கோமல் என்றும் வழங்கப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.

திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை.

கோரிக்கைகள்:
அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அதிக அளவில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற பசு, கன்றுடன் இக்கோயிலை வலம்வந்து வணங்குகிறார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.