அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோவில், அரியலூர்.
பல்லவ மன்னர்களால் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சோழர் மற்றும் விஜயநகர மன்னர்களால் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் இது.
அரியலூரில் அமைந்துள்ள வைணவக் கோயிலாகும். இக்கோயிலில் தசாவாதரச் சிற்பங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பெருமாள் கோதண்டராமசாமி என அழைக்கப்படுகிறார்.
கருவறையில் ஶ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி மூலவரையும் உற்சவரையும் தரிசிக்கும்போது மனம் நிறைகிறது. அலமேலு மங்கைத் தாயார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கோயிலின் பெயருக்கு காரணமான கோதண்டராமர், இனியவளும் இளையவனும் உடனிருக்க அனுமன் திருப்பாதம் பணிய எழிலாகத் தோற்றமளிக்கிறார், மலர் மகளுக்கு மட்டும் தான் இராமாவதாரத்தில் இடம் உண்டு என்றாலும், இங்கே பூமகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கே உள்ள ராம விக்ரகம் பூமித்தாயால் சுமந்து தரப்பட்டது என்பதுதான் அது.
வைகுண்ட ஏகாதசி விழாவில் நாச்சியார் திருக்கோலத்துக்குப் பிறகு கோதண்டராமர் மோகினி அலங்காரத்துடன் விதியுலா செல்கிறார்.