கிருஷ்ணர் நிரந்தரமாக அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க தலங்கள் 5 உள்ளன. அந்த ஐந்து கோவில்களும் ‘பஞ்ச கிருஷ்ண தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
கிருஷ்ணர் நிரந்தரமாக அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க தலங்கள் 5 உள்ளன. அந்த ஐந்து கோவில்களும் ‘பஞ்ச கிருஷ்ண தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூர், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கபிஸ்தலம் ஆகியவையே அந்த ஐந்து தலங்களாகும். இந்தக் கோவில்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.
திருக்கண்ணங்குடி
நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆழியூர் பள்ளிவாசல். இங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றால் திருக்கண்ணங்குடியை அடையலாம்.
இங்கு லோகநாதப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீதேவி-பூதேவி உடனாய லோகநாதர், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் லோகநாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறாள்.
உற்சவர்கள் தாமோதர நாராயணன், அரவிந்தநாயகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.
முன் காலத்தில் வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு வந்த வசிஷ்ட முனிவர், வெண்ணெயில் கிருஷ்ணரை செய்து வழிபட்டார்.
அந்த பக்தியில் மயங்கிய கண்ணன், வெண்ணெயில் இருந்து சிறுவனாக வெளிப்பட்டார். பின்னர் வசிஷ்டருக்கும், மற்ற முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தார். இங்கேயே நிரந்தரமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்ற முனிவர்களின் கோரிக்கையை ஏற்று கண்ணன் குடியமர்ந்த இடம், ‘கண்ணன்குடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி தற்போது ‘திருக்கண்ணங்குடி’ என்று வழங்கப்படுகிறது.
திருக்கண்ணமங்கை
திருவாரூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்கண்ணமங்கை. இங்குள்ளது பக்தவச்சலப் பெருமாள் திருக்கோவில். முன்காலத்தில் இந்த இடம் ‘கிருஷ்ணாரண்யம்’ என்று அழைக்கப்பட்டது.
இந்த வனத்தில் வசித்த பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள், லட்சுமி தேவி. இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய அந்த தேவியை தரிசிக்க, தேவர்கள் அனைவரும் கூடினார்கள்.
ஐராவதம் என்னும் வெள்ளை யானை, தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து லட்சுமிக்கு அபிஷேகம் செய்தது. அதானாலேயே இங்குள்ள தாயார், ‘அபிஷேகவல்லி’ என்று அழைக்கப்படுகிறாள்.
பிருகு முனிவரோ, தன் மகளை ‘கிருஷ்ண மங்கை’ என்று அழைத்தார். இதுவே பிற்காலத்தில் ‘திருக்கண்ணமங்கை’ என்று இத்தலம் பெயர் பெறக்காரணம்.
‘மகளை, பகவான் கிருஷ்ணருக்கே மணம் முடிக்க வேண்டும்’ என்று காத்திருந்தார் பிருகு முனிவர். அதன்படியே பக்தவத்சலன் என்ற திருப்பெயரோடு வந்த இறைவன், லட்சுமிதேவியை மணந்துகொண்டார்.
இங்கு இறைவனும், இறைவியும் மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். கிருஷ்ணருக்கும், லட்சுமிக்கும் திருமணம் நடைபெற்ற தலம் என்பதால், அதைக் காண தேவர்கள் பலரும் குவிந்தனர்.
மேலும் இங்குள்ள இறைவனின் கல்யாண கோலத்தை அனுதினமும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, தேவர்கள் அனைவரும், தேனீக்களாக உருவெடுத்து கூடுகட்டி, அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்வதாக ஐதீகம். இன்றும் தாயார் சன்னிதியின் வடக்கு பக்கம் உள்ள சாளரத்தின் மீது தேன் கூடு இருப்பதை காண முடியும்.
திருக்கோவிலூர்
விழுப்புரத்தில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருக்கோவிலூர். இங்கு உலகளந்த பெருமாள் திருக்கோவில் (திரிவிக்ரமர்) உள்ளது. இத்தல தாயாரின் திருநாமம் ‘பூங்கோவல் நாச்சியார்’.
முன் காலத்தில் மிருகண்டு முனிவர் என்பவர், வாமன மற்றும் திரிவிக்ரம அவதாரக் கோலங்களைக் காண வேண்டும் என்பதற்காக கடுமையாக தவத்தை மேற்கொண்டார். அவரது தவத்தைக் கண்டு பிரம்மன் வியப்படைந்தார்.
உடனே மிருகண்டு முனிவரின் முன்பாகத் தோன்றி, “முனிவரே.. தாங்கள் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில், கிருஷ்ணன் என்ற திருநாமத்தோடு இறைவன் வீற்றிருக்கும் தலத்திற்குச் சென்று தவம் செய்யுங்கள்” என்று பணித்தார்.
அதன்படியே அந்த தலத்திற்குச் சென்று தவம் இருந்த மிருகண்டு முனிவருக்கு, வாமன மற்றும் திரிவிக்ரம தரிசனம் கிடைத்தது.
இத்தலம் முன்காலத்தில் ‘கிருஷ்ணன் கோவில்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. மிருகண்டு முனிவருக்கு, திரிவிக்ரமராக தரிசனம் தரும் முன்பு இருந்த கிருஷ்ணன் சன்னிதி, தற்போதும் இந்த ஆலயத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது.
சாளக்கிராமத்தால் ஆன திருமேனியைக் கொண்ட ஆதிகிருஷ்ணர், இங்கு ஆனந்த கோலத்தில் அருள்புரிகிறார். இதை அறிந்த துர்க்கையும், விந்திய மலையில் இருந்து புறப்பட்டு இங்கு வந்து கோவில் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது.
இங்கு எழுந்தருளியுள்ள திரிவிக்ரமன், தனது இடது கரத்தில் சக்கரமும், வலது கரத்தில் சங்கும் ஏந்தி அருள்பாலிக்கிறார். அவரது திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், கண்டத்தில் கவுஸ்துபமும், காதுகளில் குண்டலமும் காணப்படுகின்றன. இந்த ஆலயம் முக்தி தலமாகவும் திகழ்கின்றது.
திருக்கண்ணபுரம்
கண்வ முனிவர் என்பவர், நாரதரிடம், “நாராயணனின் நாமத்தை எந்த தலத்தில் அமர்ந்து சொன்னால், அவனது தரிசனம் கிடைக்கும்?” என்று கேட்டார். அதன்படி நாரதர் சுட்டிக்காட்டிய இடமே, தற்போதைய திருக்கண்ணபுரம்.
திருவாரூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தத் திருத்தலத்தில் நீலமேகப்பெருமாளாக அருள்பாலிக்கிறார். இங்கு வந்து தவம் இயற்றி தன்னை வழிபட்ட கண்வ முனிவருக்கு, அதிசுந்தரனாக பெருமாள் திருக்காட்சி கொடுத்தார்.
எனவே இத்தலம் ‘கண்வபுரம்’ என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘திருக்கண்ணபுரம்’ ஆனது.
திருவரங்கத்திற்குச் சென்று வழிபட்ட விபீஷணன், “கிடந்த கோலத்தை கண்டேன்.. நடையழகை காண்பேனோ?” என்று கேட்டார்.
அதற்காக பெருமாள், நடையழகு காண்பித்தருளிய தலம் இதுவாகும். கோவில் அர்ச்சகர் ஒருவர், தன் காதலிக்கு சூட்டிய மாலையை பெருமாளுக்கு சாற்றி விட்டார். மேலும் அந்த மாலையை கோவிலுக்கு வந்திருந்த சோழ மன்னனுக்கு வழங்கினார்.
அதில் இருந்த நீளமான முடியைக் கண்ட மன்னன், கோபத்துடன் அதுபற்றி அர்ச்சகரிடம் விசாரித்தான். அதற்கு அந்த அர்ச்சகர், “பெருமாளுக்குரிய முடி (சவுரி)தான் அது” என்று பொய் பேசினார். பின்னர் கோவிலுக்குச் சென்று இறைவனிடம் தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார்.
மறுநாள் மன்னன் ஆலயத்திற்கு வந்தபோது, உண்மையிலேயே பெருமாளின் பின்புறம் நீளமான முடி இருந்தது. இதன் காரணமாகவே இத்தல இறைவன், ‘சவுரிராஜப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.
திருக்கபிஸ்தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கபிஸ்தலம். இங்குள்ள கஜேந்திர வரதர் திருக்கோவிலில், கஜேந்திர வரதப் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
தாயாரின் திருநாமம், லோகநாயகி என்பதாகும். கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலம் இது. இந்திரத்யும்னன் என்னும் மன்னன், விஷ்ணுவின் மீது அதீத பக்தி வைத்திருந்தான்.
அதன்காரணமாக ஒரு முறை அங்கு வந்த துர்வாச முனிவரை கவனிக்கத் தவறினான். இதனால், அவனை மதம் பிடித்த யானையாக மாறும்படி முனிவர் சபித்துவிட்டார். யானையாக மாறினாலும், அந்த மன்னனுக்கு விஷ்ணுவின் மீதான பக்தி அப்படியே இருந்தது.
கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட அந்த யானை, ஒரு நாள் குளத்தில் நீர்குடிக்க இறங்கியது. அப்போது அந்த குளத்திற்குள் இருந்த முதலை, யானையின் காலை கவ்விப் பிடித்துக்கொண்டது.
இந்த முதலையும், முன் ஜென்மத்தில் கந்தர்வனாக இருந்து சாபம் பெற்றவன்தான். முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் யானை பிளிறியது.
ஒரு கட்டத்தில் ‘ஆதிமூலமே..’ என்று யானை கூப்பிடவும், கருட வாகனத்தில் வந்த விஷ்ணு பகவான், யானைக்கும், முதலைக்கும் சுய உருவைக் கொடுத்து அருள்பாலித்தார். அனுமன், சுக்ரீவன் மற்றும் பிற வானரங்கள் வழிபட்ட தலம் என்பதால், இது ‘கபிஸ்தலம்’ என்றானது. ‘கபி’ என்பதற்கு ‘வானரம்’ என்று பெயர்.