அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம் மாவட்டம்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவில்லிமேடு கிராமத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மசுவாமி கோயில். இந்த தலம் காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ. தூரத்திலும், காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தூரத்திலும், சென்னையிலிருந்து 60 கி.மீ. தூரத்திலும், அமைந்துள்ளது.
ராணியின் பணிப்பெண் (செவிலித்தாய்) இந்த கிராமத்தில் தங்கியிருந்ததாகவும், எனவே இது “செவில்லிமேடு” என்றும் அழைக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். சிலர் “செவல்லி பூக்கள்” கிராமத்தில் உள்ள குளங்களில் இருந்தன, இதனால் இந்த கிராமத்திற்கு 'செவல்லி மேடு என்று பெயர் வந்தது என்று சொல்கிறார்கள்.
இந்த கோயிலுக்கு ராஜ பரமேஸ்வர பல்லவர் சம்ப்ரோக்ஷனம் செய்தார் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த தலம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயில் 2 ஏக்கரில் அமைந்துள்ளது. 65 அடி ராஜகோபுரம் உள்ளது. பெருமாள், தாயார் மற்றும் அஞ்சநேய சுவாமிகளுக்கு தனி தனி சன்னதிகள் உள்ளன.
மூலவர் நரசிம்மர் 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்டவராக உள்ளார். உற்சவர் சௌந்தரிய வரதர் என்று அழைக்கப்படுகிறார். தயார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டவராக உள்ளார். தாயார் சௌந்திரவல்லி தாயார் என்று அழைக்கப்படுகிறார்.
திருக்கோயிலின் கருவறையில் பிரம்மாண்டமான முறையில் அருள்பாலிக்கும் நரசிம்ம மூர்த்தியின் மடியில் காண்போரை பக்தி பரவசத்துடன் கவரும் சாந்த சொரூபியாக தாயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
அந்நியர்களால் நமது நாட்டில் படையெடுப்பு நடந்தபோது இந்துக்கோவில்கள் பல சூறையாடப்பட்டும் இடித்தும் தள்ளப்பட்டன. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து செவில்லிமேட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயம் வரை சுரங்கப்பாதை அமைத்து வரதர் ஆலய உற்சவர்களை பத்திரமாக இங்கு கொண்டு வந்து வைத்தனர்.
சிலகாலம் காஞ்சிபுரம் வரதருக்கு திருமஞ்சனம், ஆராதனை, விழாக்கள் முதலியவற்றினை செவில்லிமேட்டில் உள்ள இந்த ஆலயத்தில் செய்து வந்தனர்.
இந்த சம்பவத்தை நினைவூட்டுவதற்காக இன்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சித்ரா பௌர்ணமி அன்று இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்.
இந்த தலத்தில் பலி பிடத்தைக் கடந்து உள்ளே சென்றால் சுமார் எட்டு அடி உயரமுள்ள துவார பாலகர்கள் இருபுறமும் நம்மை வரவேற்க நாம் மகிழ்ச்சியுடன் உள்ளே செல்லலாம்.
மூலவர் கருணை தவழும் முகத்தோடும் இடது தொடையில் ஸ்ரீலட்சுமியை இடது கரத்தினால் அணைத்தவாறு மிகப் பெரிய வடிவில் லட்சுமி நரசிம்மராக காண்பவர்களின் கண்களுக்கு கருணைக்கடலாக அற்புத வடிவில் காட்சி தருகிறார்.
எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவ மூர்த்தி சந்நிதியில் சௌந்தர்ய வரதர், கண்ணன், ஆண்டாள் ஆகிய சிலைகளைக் கண்டு சேவிக்கலாம்.
இங்குள்ள மகாமண்டபத்தில் மூலஸ்தானத்திற்கு நேராக பெரிய திருவடிகள் என்று போற்றப்படு வரும் பச்சைக் கல்லினால் உருவானவரும் ஆன ஸ்ரீ கருடாழ்வார் கைப்கூப்பிய நிலையில் பெருமாளை நோக்கி சேவை சாதிக்கிறார்.
ஆலயப் பிராகாரத்தைச் சுற்றி வருகின்றபோது ராமர் மேடு என்று குறிப்பிடும் மண்டபம் உள்ளது. இதில் ஆதிசங்கரர், ராமானுஜர் உருவங்களைக் காண லாம். மற்றும் ஒரு சிறிய மண்டபத்தில் ஒரு கல் தூணில் ஆஞ்ச நேயரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
நாம் எல்லோரும் செவல்லிமேடு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் பெருமானை தரிசனம் செய்து எல்லா நன்மைகளையும் பெறுவோமாக.