Breaking News :

Thursday, November 21
.

லிங்கத்திருமேனியாக சிவபெருமான் கோயில், சுருட்டப்பள்ளி


சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் வழியில் ஊத்துக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது சுருட்டப்பள்ளி எனும் திருத்தலம். இந்தத் தலத்தில் இரண்டு விசேஷங்கள். அனைத்து சிவாலயங்களிலும் லிங்கத்திருமேனியாக சிவபெருமானைத் தரிசிப்போம்.

அதேபோல், திருமாலின் திருக்கோலங்களில், சயனத்திருக்கோலமும் ஒன்று. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல தலங்களில், சயனித்திருக்கும் பெருமாளை தரிசிக்கலாம். இங்கே... இந்தத் தலத்தில், சிவபெருமானை லிங்கத் திருமேனியாகவும் தரிசிக்கலாம்; சயனத் திருக்கோலத்திலும் தரிசிக்கலாம்.

இன்னொரு சிறப்பு... அனைத்து சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்தி, கோஷ்டத்தில் இருப்பார். அதேபோல் இங்கேயும் தரிசனம் தருகிறார். ஆனால்... தேவியுடன் அருள்பாலிப்பவராக, தாம்பத்ய தட்சிணாமூர்த்தி எனும் திருநாமத்துடன் அபூர்வ தரிசனம் தந்தருள்கிறார்.

அதாவது, அனைத்து சிவாலயங்களிலும் கருவறையின் தென்புறக்கோஷ்டத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். சிவனாரின் 64 திருமேனி வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம் 32-வது வடிவமாகச் சொல்லப்பட்டுள்ளது.

தன் தந்தை தட்சன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்தான். அப்போது, சிவனாரையும் மீறி அங்கு சென்ற பார்வதிதேவி தந்தையால் அவமானப்படுத்தப்பட்டாள். தட்சனின் மகள் என்னும் பொருள் கொண்ட தாட்சாயணி என்ற தன் பெயரை விடுவிக்க வேண்டி மீண்டும் இமவான் மகளாகப் பிறந்து, சிவபெருமானை அடைவதற்காகக் கடும் தவம் மேற்கொண்டாள் என்கிறது புராணம்.

கயிலையில் தனியே அமர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்த சிவபெருமானை சனகாதி முனிவர்கள் அணுகி, தங்களுக்கு ஞானத்தை உபதேசிக்க வேண்டினர். தட்சிணாமூர்த்தி சின்முத்திரை காட்டி அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்து அருளினார். இந்த வடிவத்தைத்தான் அனைத்து சிவாலயங்களிலும் தரிசிக்கலாம். சாஸ்திரங்கள், வீணை, யோகம் மற்றும் ஞானம் ஆகியவற்றை உபதேசிக்கின்ற தட்சிணாமூர்த்தி வடிவமாக சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

பெரும்பாலும் முயலகன் மீது கால் வைத்து சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கின்ற தட்சிணாமூர்த்தியை அதிக அளவில் தரிசிப்போம்.

அபூர்வமாக யோக பட்டம் அணிந்த யோக தட்சிணாமூர்த்தி, வீணையைக் கையிலேந்திய வீணாதர தட்சிணாமூர்த்தி, ஞானத்தை போதிக்கும் ஞான தட்சிணாமூர்த்தி வடிவங்களை ஒருசில ஆலயங்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

சிவபெருமானின் திருமேனிகளைக் குறித்த நூல்களில் 65 வகை தட்சிணாமூர்த்தி வடிவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் பார்வதி தேவியோடு இணைந்து அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வர வீணாதர தட்சிணாமூர்த்தி, கௌரி ஆலிங்கன தட்சிணாமூர்த்தி போன்ற திருவுருவங்களும் உள்ளதாக விவரிக்கின்றன ஞானநூல்கள்.

தவமிருந்து வரம் பெற்று, மீண்டும் சிவனாரை கணவனாகப் பெற்ற கெளரி எனும் பார்வதிதேவி, தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்ற வகையில் தட்சிணாமூர்த்தியாக தவமியற்றிய சிவபெருமானை ஆலிங்கனம் செய்துகொண்டிருக்கும் திருமேனியை ஸ்ரீகெளரி ஆலிங்கன தட்சிணாமூர்த்தி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த தட்சிணாமூர்த்தியைத்தான், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சுருட்டப்பள்ளியில் கண்ணாரத் தரிசிக்கலாம்.

சுருட்டப்பள்ளி ஆலயம் பல்வேறு வகைகளில் பிரசித்தி பெற்றது. ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமான், விஷம் உண்ட மயக்கம் தீர பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து சயனித்திருப்பது போன்ற அரிய திருவுருவத்தைக் கருவறையில் கொண்ட திருத்தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.இங்கே சிவபெருமான் சுருண்டு பள்ளிகொண்டிருப்பதால்,

இந்தத் தலத்துக்கு சுருட்டப்பள்ளி எனும் பெயர் அமைந்தது.

துவாரபாலகர்களுக்கு பதிலாக, குபேரனுடன் சங்க நிதி, பதும நிதி அமைந்திருக்கும் விசேஷமான தலம் இது! மேலும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராகக் காட்சி தருகின்ற தலம் இது என்கிறது ஸ்தல வரலாறு.

தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வணங்கினால், குடும்பத்தில் நிம்மதி நிலவும்; கணவன் மனைவிக்குள் இருக்கிற கருத்து வேற்றுமைகள் அகலும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.