தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது.
மூலவர் : சாரபரமேஸ்வரர் என்கிற செந்நெறியப்பர்.
தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லி.
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் அமைத்து வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆவார். வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆவார்.
இத்தலத்தில் மட்டுமே சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று துர்க்கைகள் ஒரே சன்னதியில் காட்சியளிக்கின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் காலை சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுவது சிறப்பாகும்.
கோயில் வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பக்கம் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவரது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.