கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான உதயம் செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது 111.2 அடி உயர சிவலிங்கம். இதன் உட்பகுதியில் பக்தர்கள் சென்று பார்க்கும் வகையில் கட்டமைப்பு பணி நடந்தபோதே, இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, ஆசியா புக் ஆப் ரிக்கார்டு ஆகிய புத்தகங்களில் இடம்பெற்றுவிட்டது. கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் சிவலிங்கத்தை திறந்து வைத்தார்.
உலகிலேயே உயரமான 111.2 அடி உயரம், தரையில் உள்ள பீடம் 13 மீட்டர் சுற்றளவு கொண்ட சிவலிங்கத்தை உருவாக்கும் பணி 2012-ம் ஆண்டு தொடங்கியது. தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக 6 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டது. சிவலிங்கத்தின் உட்பகுதி 8 மாடிகளை கொண்டு குகை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசிக்கலாம். உட்பகுதி நடைபாதை ஓரங்களில் சித்தர்கள், சிவனடியார்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
108 சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. லிங்கத்தின் உட்பகுதியில் 8-வது நிலையில் கைலாச மலையில் சிவன், பார்வதி பக்தர்களுக்கு காட்சி தருவது போன்ற சிற்பம் கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் அருகே கம்மசந்த்ரா கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 108 அடி உயர சிவலிங்கம் இருப்பது குறிப்பிட்டத்தக்கது.