Breaking News :

Saturday, April 12
.

விஷ்ணு கோயில்களும் பலன்களும்!


திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான் தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு ‘தண்ணீர் சேவை’ என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு ‘பந்த சேவை’ என்று பெயர்.

திருவள்ளூரை அடுத்துள்ளது, சோளிங்கர் என்ற திருத்தலம். இங்கு நரசிம்மர் யோக நிலையில் காட்சி தரும் ஆலயம் மலை மேல் அமைந்துள்ளது. சப்த ரிஷிகள் அனைவரும் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் (24 நிமிடங்கள்) பொழுது என்பதால் இவ்வூர் ‘கடிகாசலம்’ என்றும் வழங்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக இங்கே தேங்காய் உடைக்கப்படுவதில்லை. தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.

திருக்கழுக்குன்றம், திருப்பைஞ்ஞீலி ஆகிய சிவ தலங்களில் வாழை மரம் தான் தல விருட்சம். அதே போல் வைணவத் திருப்பதிகளில் திருக்கரம்பனூர் மற்றும் திருவெள்ளியங்குடி ஆகிய கோவில்களிலும் வாழை மரம் தல விருட்சமாக அமையப்பெற்றுள்ளது.

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தட்சிணாயன வாசல், உத்ராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. திருவெள்ளறை தலத்தில் தட்சிணாயனம், உத்திராயனம் என்று இரண்டு படிகள் அமைந்துள்ளன.

தஞ்சாவூர் தெற்கு வீதியில் கலியுக வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நவக்கிரகங்களின் சன்னிதி இடம் பெற்றுள்ளது. பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் இடம் பெறுவது மிகவும் அபூர்வம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.