பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. அவருக்கு என்று தனியாக கோவில்கள் கட்ட வேண்டும் என்பது இல்லை.அவர் எங்கும் வீற்றிருந்து அருளும் தன்மை பெற்றவர்.
வீதிகள் தோறும்,நீர்நிலைகளின் ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட அமர்ந்து அருள்புரிவார்.
பிள்ளையார் பல்வேறு மரங்களின் அடியில் வீற்றிருந்து அருள்கிறார்.
வன்னிமரப் பிள்ளையார்
வன்னிமர விநாயகர் வலஞ்சுழியாக இருப்பது பெரும்பாக்கியம்.வடக்கு நோக்கியிருப்பின் மிகவும் விசேஷமானது.
அவிட்ட நட்சத்திரம் தோறும் இந்த வன்னி மரத்தடி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சித்து,அபிஷேகம் செய்து,ஏழை கன்னிப் பெண்களுக்கு உரிய தானம் அளித்து வந்தால்,நல்ல வரன் கிடைக்கும்.
வியாபாரிகள் அவிட்ட நட்சத்திரத்தில் வன்னி விநாயகருக்குப் பொரியைப் படைத்து,அதை பிரசாதமாக குழந்தைகளுக்கு வழங்கிட தொழில் நல்ல லாபம் பெறும்.
புன்னை மரப் பிள்ளையார்
ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து,வஸ்திரங்களை அணிவித்து,பின் ஏழை நோயாளி களுக்கு உணவு,உடைகளை தானம் செய்தால்,தம்பதியர்களிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.
மகிழ மர பிள்ளையார்
மகிழ மரத்தடி பிள்ளையாருக்கு,அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால்,பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடு சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.அதே போல் நாவல் மரத்தடி விநாயகரை வழிபாடு செய்தால் குடும்ப ஒற்றுமை கூடும்.
மாமரப் பிள்ளையார்
மாமர விநாயகர் ஞான வடிவானவர்.இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதி காப்பிட்டு,ஏழை சுமங்கலி களுக்கு உடை,உணவு அளித்து வந்தால் கோபம்,பொறாமை,பகைமை மாறி,பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.
வேப்ப மரத்து விநாயகர்
வேப்ப மரத்துப் பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிபிறக்கும்.
ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும்.பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் மிஞ்சும் விதத்தில் செல்வம் வந்து சேரும்.உத்திரட்டாதி நட்சத்திர நாளில்,தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.
ஆலமரப் பிள்ளையார்
ஆலமரத்தின் கீழ்,வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு,நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து,தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வில்வ மரப் பிள்ளையார்
சித்திரை நட்சத்திரத்தன்று,இவ்விநாயகருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து,வில்வ மரத்தைச் சுற்றி வந்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.
அரசமரப் பிள்ளையார்
பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால்,விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.