தோல் நோய் அகற்றும்
அனுமனைப் போல வடை மாலை ஏற்கும் மருதம் விநாயகர்...!
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில் உள்ள விநாயகர் மிகமிக வித்தியாசமாக தோற்றம் அளிக்கிறார்.
இந்த விநாயகருக்கு தும்பிக்கை கிடையாது. மனித முகத்துடன் காணப்படும் இந்த விநாயகர், மருதம் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
பக்தர்கள் வேண்டியதைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த இந்த கணபதிக்கு, அனுமனைப்போல வடை மாலை அணிவித்து, பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.
தோல் நோய் அகற்றும் விநாயகர்
மகாகவி முத்தப்பர் (1767 - 1829) என்ற கவிஞர் நகரத்தார் மரபில், செட்டிநாட்டில் பிறந்தவர். இளமையிலேயே பாடும் திறமை பெற்றிருந்த முத்தப்பர், குன்றக்குடி முருகன் பேரில் பதிகம் பாடி அருட் புலமை பெற்றார்.
தமது குல வழக்கமான வணிகத்தில் ஈடுபடாது தமிழை வளர்ப்பதில் ஈடுபட்டார். முருகனின் அருளால் சொல்பலிதமும் ஏற்பட்டது.
பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது. தான் பாடும் பாடல்களால், மழையை வரவைக்கும் கவித்துவம் பெற்றவர்.
மகாகவி முத்தப்பர், இந்த கணபதியை வேண்டி மனமுருகி பாடிய பத்து பாடல்கள் காரணமாக, அவருக்கு இருந்த தோல் நோய்கள் நீங்கினார்.
இதனால் இன்றும் தோல் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து மருதம் விநாயகரிடம் வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள். பிள்ளைப்பேறு வேண்டி இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்.