Breaking News :

Saturday, December 21
.

முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்


‘எட்டினால் எல்லாமே கிட்டி நிற்கும்; எட்டினால் எட்டாததே கிடையாது’ என்கிறார் சுவாமி தேசிகன்.

 

எட்டு என்பது பகவான் நாமாவான ஓம் நமோ நாராயணாய என்பதைக் குறிக்கிறது. எதையெல்லாம் அது தருகிறது என்று கேட்டால்,

குலம் தரும் செல்வம் தந்திடும்

அடியார்படுதுயர் ஆயினவெல்லாம்

நிலம் தரம் செய்யும் நீள்விசும்பருளும்

அருளொடு பெருநிலமளிக்கும்

வலம் தரும் மற்றும் தந்திடும்

பெற்றதாயினும் ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

 

நாராயணா என்னும் நாமம்.

 

எல்லோருக்கும் நலத்தைக் கொடுக்கும்படியான சொல் நாராயணா என்னும் நாமம். அதை நான் இன்று கண்டுகொண்டேன். அன்று தெரியாமல் இருந்ததை இன்று தெரிந்து கொண்டேன். இனிமேல் உன்னை விடுவேனா…. சிக்கெனப் பிடித்துக் கொள்ள மாட்டேனா..? என்று கேட்கிறார் ஆழ்வார்.

 

இதற்கு அர்த்தம் என்ன? இத்தனை நாள் பிறர்க்கே உழைத்து ஏழையானேன். ‘தாயே, தந்தை என்றும் தாரமே…கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தேன்…தெரியேன்; பாலகனாய் பல தீமைகள் செய்து விட்டேன். பெரியேனாயின பின்னும் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்…’ என்கிறார்.

 

‘ஐயோ! ஜன்மம் மொத்தம் வீணாகப் போய் விட்டதே! என்பது ஆழ்வாருடைய அனுபவம்.

 

‘இப்பொழுது சொல்லலாம், பகவான் நாமாவை’ என்றால், ஒரு வார்த்தை பேச முடியவில்லை. பல் ஒவ்வொன்றாகக் கீழே விழுகிற காலம்! ‘இந்தக் கண் என்னுடையதில்லை என்று ஆகிவிட்டதே! இத்தனை நாட்களாக இதை அபிமானித்துக் கொண்டிருந்தேனே… இந்டக் கண்ணை எவ்வளவு போற்றிப் புகழ்ந்தேன்! இந்த சிரஸ் இப்படிப் போய்விட்டதே; காது துளியும் கேட்கவில்லையே… இந்தச் செவி என்னுடையது என்று எவ்வளவு மமகாரமாய் இருந்தேன்! இந்த வார்த்தை நம்முடையது சொல்வதைக் கேட்கலையே… இத்தனைப் புலன்களும் நம்முடையதில்லையென்றல்லவா ஆகிவிட்டது!

 

இதைப் புரிந்து கொள்வதற்குள் ஜன்மாவே அல்லவா முடிந்து போய்விட்டது! இத்தனையும் உத்தேசித்துத்தான் சொன்னார்! ‘பிறர்க்கே உழைத்து ஏழையானேன்!

 

பிறர்க்கே என்ற சொல்லின் ஏவகாரத்துக்கு ஏகப்பட்ட பொருள்.

 

சுகபிரும்ம மஹரிஷி, பரீஷித் மகாராஜாவுக்கு இதை ரொம்ப அழகாக எடுத்துச் சொல்கிறார்.

 

கொம்புக்கெல்லாம் வர்ணம் அடித்து, தொப்பு போட்டு, சலங்கை மாட்டி, அழகான எருது, எத்தனை அழகாய் ஓடுகிறது! ஏரிலோ, வண்டியிலோ பூட்டி பலவாறாக வேலை வாங்கி, வேலை வாங்கி, இப்போது வேலையே செய்ய முடியாமல் ஓடாகத் தேய்ந்து போன நிலை!

 

எருதின் கன்னத்தில் பெரிதாக குழி விழுந்திருக்கிறது. கண் இரண்டும் ஒதுங்கி நிற்கிறது. வாயிலிருந்து நுரையாகக் கொட்டுகிறது. விலா எலும்பெல்லாம் தெரிகிறது. அதன் பின்னங்கால்கள் தட்டுகின்றன. வண்டியிலே கொண்டு போய் அதைப் பூட்டினால், எருதால் இழுக்க முடியவில்லை. அப்படியே படுத்துவிட்டது.

 

‘சரி, இனிமேல் இந்த எருதினால் பிரயோஜனமில்லை’ என்று கொட்டகைக்கு அப்பால் உள்ள இடத்திலே கொண்டு கட்டி வைக்கிறான் அதன் சொந்தக்காரன்.

 

அவன் கட்டிய இடத்திலே வெயில் கொளுத்துகிறது! இத்தனை நாளாக நிழலில் நின்ற பிராணி வெயிலில் காய்கிறது. அதற்குத் தீனி என்று ஒன்றுமே போடுவதில்லை. எப்போதாவது தோன்றினால் ஒரு பிடி புல்லைக் கொண்டு போய்ப் போடுவான். ஜலத்துக்காக அது கத்தும். அவஸ்தைப் படும். ஆனால் அதனால் இனிமேல் பிரயோஜனமில்லை என்று அவன் தீர்மானம் பண்ணிவிட்டான்! தகாத இடத்திலே அதை விற்றான். அநியாயமாக அடிபட்டு மாண்டுபோனது அது.

 

இத்தனை சிரமப்பட்டு அவனுக்கு உழைத்த எருது கடைசியில் இப்படி ஒன்றுமில்லாமல் போயிற்றே.

 

சுகபிரும்ம மஹரிஷி சொன்ன இந்த கதையைக் கேட்டு பரீஷித் மஹாராஜாவுக்கு கண்ணிலே ஜலம் வந்ததாம்.

 

‘ஒரு எருதின் கதை இப்படியிருக்கிறதே! என்று வருந்தினான் ராஜா.

 

உடனே சுகபிரும்ம மகரிஷி, ‘இது எருதின் கதையில்லையப்பா..நம் கதை தான்’ என்கிறார்.

 

நரம்புகள் முறுக்கேறி மிடுக்குடன் இருக்கிற சமயத்திலே ஏகப்பட்ட காரியங்கள் பண்ணுகிறோம். எல்லோரும் நம் உழைப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். கடைசியில் சுவாஸம் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறது. உட்கார முடியவில்லை. எழுந்திருக்க முடியவில்லை. வீட்டில் இருப்பவர்கள் ‘என்னத்திற்கு இப்படி அலைகிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.

இந்தக் கேள்வி எருதைக் கொண்டு போய் வெயிலில் கட்டியதற்குச் சமம். இத்தனை நாட்களாக அவர் அலைந்ததால் தானே இப்போது நாம் சௌக்யமாயிருக்கிறோம் என்பது மறந்து போய்விடுகிறது. பெரியவரை உட்கார வைத்து விடுகிறார்கள்

 

அவர் சாப்பிட உள்ளே வருகிறார், பாவம்!

‘நாங்க அங்கே கொண்டு தரமாட்டோமா? என்று கேட்கிறார்கள். எல்லாம் அவருக்கு அங்கேயே வர ஆரம்பிக்கிறது. அந்த சமயத்தில் சுற்றியிருப்பவர்கள் நாட்களை எண்ண ஆரம்பிக்கிறார்களாம்.. ‘இவர் எப்போது போய் சேருவார்? என்று.

 

இந்த மாதிரி ஒரு நிலை நமக்கு அந்திமக் காலத்திலே வருகிறதே என்று நாம் யோசிக்க வேண்டாமா?"

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.