இந்துக்களைப் போல பிரபஞ்ச அசைவுகளை கவனித்தவர்கள் யாருமில்லை. மானிடரைத் தாண்டி எல்லா லோகங்களையும் அதன் இயக்கங்களையும் அங்கு வாழும் சக்திமிக்க வடிவங்களையும் தங்கள் ஞானத்தால் உணர்ந்தவர்கள் இந்து ரிஷிகள்.
தாங்கள் உணர்ந்ததை வேதமாக, உபநிஷமாக, புராணமாக எழுதிவைத்தார்கள், அத்தோடு அவர்கள் தங்கள் பணி முடிந்ததென விலகவில்லை. மானிடர்மேல் மிக மிக அன்புகொண்ட அவர்கள் இப்பூமியில் மானிடர் நலமாக வாழ பல இதர உலக சக்திகளின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, அந்த சக்திகளின் ஆசியினை எப்படி மானுடன் வாங்குவது என்பதை பல வடிவங்களில் சொல்லிக் கொடுத்தார்கள்.
இந்துமதம் என்பது எப்போதும் சூட்சும வடிவங்களை மானிடரை அண்டியிருக்கும் சில உயிர்களோடு, அதன் தன்மையோடு சுட்டிக்காட்டி இந்த வடிவில் வணங்க சொல்லும் மதம்.
காரணம், மனிதனுக்கு சில விஷயங்கள் புரியாது, உதாரணமாக, இன்றுள்ள மின்சக்திக்கோ, மின் காந்த அலை சக்திக்கோ அவனால் உருவம் கொடுக்க முடியாது. அதுவே சிரமம்; அப்படிக் கொடுத்தாலும் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. மானிட வாழ்விலும் அதனால் லவுகீக பலன் இல்லை
இதனாலே எப்போதும் கண்ணுக்குத் தெரியாத உருவமில்லாத சூட்சும சக்திகளுக்கு வடிவம் கொடுக்கும் போது, மானிட லவுகீக உயிர்கள் ஒன்றின் இயக்கமும் அந்த சக்தியின் இயல்பும் பொருந்திப் போவதை கண்டு மிக நுணுக்கமாக அதற்கு அச்சக்தியின் பெயரைச் சுட்டிக்காட்டினார்கள்.
இதனால் மானிடருக்கு சூட்சும சக்திகளின் ஆசியும் கிடைத்தது, அப்படியே லவுகீக காரியங்களும் செழித்தன.
உதாரணமாக, அது காளையினை சிவ வாகனம் நந்தி“தேவர்” என்றது, பசுவினை கோ”மாதா” என்றது.
இதனால் மானிடர் காளையினை தெய்வமாக வணங்கி தங்கள் மனோசக்தியால் சிவ அருள் பெற்றனர். அப்படியே அது காக்கப்பட்டு காளையினம் வலுவானதாக உருவாக்கப்பட்டு வண்டி, உழவு, விவசாயப்பணி என காளைகள் மானிடருக்கு உதவின.
பசுவும் அவ்வாறே.
இப்படித்தான் காகம், சேவல், யானை என எல்லாவற்றையும் குறிப்பிட்ட சக்திகளின் பெயராகச் சொல்லி அந்த சக்திகளின் அருளையும் அப்படியே லவுகீக பூலோக நலன்களையும் காத்துக்கொண்டது இந்துமதம்.
காகத்தால் பித்ருக்கள் ஆசி கிடைத்தது. அப்படியே சுற்றுச்சூழல் சீரானது, யானையினால் காடுகள் பெருகின, இன்னும் பலன்களும் அதிகரித்தன.
இன்னும் இம்மாதிரி விலங்குகள் பறவைகளின் தன்மை பல அந்த சூட்சும சக்திகளின் குணங்களை ஒத்திருப்பதால், அவைகளே இதனுள் இறங்கி வரவும் வாய்ப்பு உண்டு என்பதை இந்துமதம் சொல்லிற்று.
இன்னும் இவைகள் வடிவில் அந்த சக்திகளை வணங்கி அருள்பெறவும் இந்துமதம் வழிகாட்டிற்று.
அப்படி அது சொன்ன ஒரு வழிபாடுதான் நாக வழிபாடு, நாகங்கள் என பூலோக சர்ப்பத்தை காட்டி இன்னொரு சூட்சும உலகின் சக்திகளின் பலனைப் பெறும் பெரும் வழிபாடு.
இந்தப் பிரபஞ்சத்தை ஆழ கவனித்த இந்துமதம் 108 அண்டங்கள் இருப்பதைச் சொன்னது, அப்படியே 20 வகையான சக்திமிக்க இனம் இருப்பதைச் சொன்னது.
யக்ஷர்கள், ராக்ஷசர்கள் தொடங்கி தேவர்கள், மானிடர்கள் என இருபது பேரை அது சொன்னது.
இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பதுதான் நாகசக்தி எனும் நாக உலகம். அது ஒரு தனி சக்தி.
இந்த சக்தியிடம் பல சூட்சும வரங்கள் உண்டு, பெரும் சக்தி உண்டு, இவைகளின் ஆசி மானிடருக்கு அவசியம், அந்த ஆசி இல்லையென்றால் பெரும் குழப்பம் மானிட வாழ்வில் வரும்.
அதே நேரம் இவர்கள் ஆசீர்வாதம் இருந்தால் மாபெரும் வாழ்வினை வாழலாம்.
இந்த சக்தி பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கின்றது. எல்லா உலகையும் ஆட்டிவைக்கின்றது. மானிட வாழ்விலும் அது அரூபமாக சூட்சுமமாக நிற்கின்றது, கோள்கள், சஞ்சாரம் என பல வகையில் அது ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை அறிந்தார்கள் இந்து ஞானியர்.
இன்னும் ஆழமாகச் சொன்னால் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு; அமுதும் உண்டு, விஷமும் உண்டு; வெளிச்சமும் உண்டு, பகலும் உண்டு; வெப்பமும் உண்டு, குளிர்ச்சியும் உண்டு.
இந்த சமநிலை சரியாக இருத்தல் அவசியம்; இந்த சமநிலை தவறினால் ஏதோ ஒன்று மிக அதிகமாகி குழப்பம் அதிகரிக்கும். இவை சரியாக தராசின் முள்போல இருந்தால்தான் தெளிவும், ஞானமும், அமைதியும் வாய்க்கும்.
இது பிரபஞ்ச இயக்கத்தில் உண்டு, பூமியில் உண்டு, மானிட மனதில் உண்டு, உடலிலும் உண்டு.
உதாரணமாக, ஒவ்வொருவர் உடலிலும் ஒரு விஷத்தன்மை உணவிலோ, இல்லை இதர வடிவிலோ உருவாகும். இந்த விஷம் மிஞ்சிப் போகும்போது அது நோயாகின்றது.
மனதின் விஷமான கவலை உள்ளிட்டவை முற்றும்போது, அது மன சஞ்சலமாகின்றது.
இது இன்னும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடத்திலும் இப்படி மாறும்போது தீமையோ விஷத்தன்மையோ அதிகரிக்கும்போது குழப்பமே உண்டாகின்றது.
இதனால், இவற்றை எல்லாம் சீர்ப்படுத்தவும், இந்த விஷத்தன்மை எனும் எதிர்தன்மையினை தன்னுள் வாங்கி, தன்னை வணங்கும் உயிர்களைக் காக்கும் பணியினைச் செய்யவும் ஒரு மகா சக்தியினை பரம்பொருள் உருவாக்கியது.
அவர்களுக்கென தனி உலகமும், தனி பலமும் வரமும் உண்டு, அவர்கள்தான் நாக தேவதைகள். இவர்கள் அரசன் நாகராஜா. இவர்கள் வாழும் உலகம் நாகலோகம்.
இது ஒரு சக்தி, தனி சக்தி, யாரும் காணமுடியாத அரூப சக்தி, இந்த உலகின் சமநிலை குறையாமல் காக்கும் ஒரு சக்தி, எதுவும் மிதமிஞ்சி போகும் போது கட்டுப்படுத்தும் சக்தி.
(விஞ்ஞானம் இதனை நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி என வகுக்கும். இந்த சமநிலை சரியாக இருந்தாலே சக்தி கிடைக்கும், அந்த சக்தி மனம் முதல் அண்டவெளிவரை பரவியிருக்கின்றது என்கின்றது விஞ்ஞானம்.
இந்துக்கள் இதனை தேவர், அசுரர் என்றார்கள். இன்னும் கருடன், நாகம் என்றார்கள், இந்த இரு சக்திகளின் சமநிலைதான் சரியான இயக்கத்துக்கு அவசியம்.)
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பதுபடி மனதையும், உடலையும் காக்கும் சக்தி.
இந்த சக்தி, பூமியில் உள்ள எந்த உயிர்களோடு சரிவரும்? எதனைச் சுட்டிகாட்டமுடியும்? எனத் தேடிய ஞானிகள், சர்ப்பம் எனும் பாம்பின் வடிவினைக் கண்டார்கள்.
அது பல வகைகளில் ஒரு பலனைக் கொடுத்தது.
முதலில் பாம்பு விவசாயிகளின் நண்பன்; அது செய்யும் பலன்கள் ஏராளம். வயலில் எலிகளை கட்டுப்பாடாய் வைப்பது, புற்றுமண் என வளமான மண்ணைக் கொடுப்பது. இன்னும் அதன் விஷம் ஒரு மருந்து, நாகரத்தினம் ஒரு மருந்து என அதன் பலன்கள் ஏராளம்.
சூட்சும சக்தி கொண்ட பாம்புகள் ஏகப்பட்ட பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தன. அதனால் அவை மானிடர் வாழ்வில் அவசியம் என்பதை உணர்ந்தார்கள்.
இன்னும் அதன் வடிவம் பல சூட்சும உண்மைகளை சொன்னது, அண்டவெளி முதல் மானிட மரபணு வரை பல வகைகளில் ஒரு குறியீட்டு ஒற்றுமை இருந்தது.
சித்தர்கள் உடலில் மறைந்திருக்கும் மகா சக்திக்கும், மண்ணில் மறைந்திருக்கும் நாகத்திற்கும் பெரும் தொடர்பினை உருவகமாகக் கண்டார்கள்.
விரைவாகச் செல்லும் தன்மை. . உடன் தோன்றுவதும் உடன் மறைவதுமான வேகம், இடுகாடு, சுடுகாடு, பொந்துள்ள மரங்கள், பழைய சுவர்கள், கரையான் புற்று ஆகிய இடங்களில் வாழும் தத்துவக் குறியீடு, மலைப்பாம்பு போல் வளைத்து சுருட்டும் ஆற்றல், பல்வேறு வகை வண்ணங்கள், வண்ணக்கலப்புக்கள், கடுங்குளிரையும் கடும் வெயிலையும் தாங்கும் ஆற்றல், நிலத்தில் விரைந்து ஓடுவதும் நீரில் விரைந்து நீந்துதலும் என நிறைய அதன் சிறப்பான தனித்துவம் உண்டு.
பாம்பிற்குள்ள இமையா விழிகளும் தொலைநோக்கும் மிக சிறப்பானவை விழித்திருத்தலுக்கு அவை எக்காலமும் எடுத்துகாட்டு,
பின்னிக்கொண்டு இனப்பெருக்கம் செய்தல் என்பதில் அப்படியே பாம்புக்கும் மானுட சாதிக்கும் ஒற்றுமை அதிகம், அந்த பிணைப்பு மனிதனுக்கும் பாம்புக்கும் அடிப்படை ஒற்றுமை.
முக்கியமாக அழகாகப் படம் விரித்து ஆடுதல் என்பது நாகத்தின் சிறப்பு.
மண்ணில் சுருண்டிருக்கும் பாம்பு சட்டென 90 பாகை நேர்கோட்டில் மேல் நோக்கி எழும்புவதை அவதானித்தார்கள், அந்த சக்தி மண்ணில் எந்த விலங்குக்குமில்லை.
ஒரு நாகத்தால் 90 பாகை மேல் எழமுடியும், அப்படியே நிற்க முடியும், தன் தலையினை வேல் போல மாற்ற முடியும்.
இந்துக்கள் மரபில் நாக வடிவம் முக்கியமானது, அதாவது வேல், தீபம் போன்றவையின் அந்த உருவம் மகத்துவமானது.
ஒரே நேர்கோட்டில் வரும் சக்தி ஒரு பிரிவாக பிரிந்து அகன்று பின் மேலே கூடும் தத்துவம் அது.
இன்னும் ஆழமாகச் சொன்னால் இடகலை பிங்கலை என இரு மூச்சுக்கள் அகன்று ஓடி கடைசியில் சுழுமுனை நாடி எனும் நெற்றியில் இணைவதைச் சொல்லும் தத்துவம் அது.
வேல் தத்துவம், தீப தத்துவம், நாக படமெடுக்கும் தத்துவமெல்லாம் அதுதான்.
இதனால் குண்டலி சக்தியின் அடையாளமாக நாகத்தை சொன்னார்கள், இன்னும் மானுட உயிரின் மரபணு மூலமும், பிரபஞ்ச பல வடிவமும் நாகத்தின் சாயலில் இருப்பதைச் சொன்னார்கள்
இதனால் வெகு ஞானமாக பூலோக நாகத்தைக் காட்டி நாகலோக நாகங்களை வழிபடச் சொன்னார்கள். இதனால் பிரபஞ்ச சூட்சும சக்தியோடு புவியில் மானிடரின் லவுகீக பலன்களும் விவசாயம், மருத்துவம், காவல் என கிடைத்தன.
பாம்புக்கும் மனிதனுக்குமான பந்தம் இங்கிருந்துதான் உருவானது, ரிஷிகள் அதை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
பாம்பும் யானைபோல், மாடுபோல், மானுடருடன் நெருங்கும் சக்தி கொண்டது, அது விஷம் கொண்டதாயினும் மானுடர் மனமறியும் சூட்சுமம் கொண்டது. அதற்கும் பிரபஞ்சத்தின் மகா சக்திக்கும் தொடர்பு உண்டு என்பதை ஞானத்தால் அறிந்த ரிஷிகள் அந்த நாக வழிபாட்டை தோற்றுவித்தார்கள்.
இதனால் மானிடர் லவுகீக பலமும் பெற்றார்கள், பிரபஞ்ச சூட்சும பலமும் பெற்றார்கள்.
இந்துமதம் இன்னும் இதனை அழுத்திச் சொன்னது, இந்த வழிபாட்டை ஊக்குவிக்க இந்து தெய்வங்களையெல்லாம் நாகங்களோடே நிறுத்திற்று.
சிவனுக்கு கழுத்தில் நாகம் கொடுத்த இந்துமதம், விஷ்ணுவுக்கு அதனையே படுக்கை ஆக்கிற்று, முருகனோ , பிள்ளையாரோ, அம்மனோ எந்த தெய்வம் என்றாலும் பாம்போடுதான் நிறுத்திற்று.
நாக வடிவங்களை அப்படி வழிபட சொன்னமதம் இந்துமதம்.
உலகெல்லாம் இந்துமதம் பரவியிருந்த காலத்தில் எல்லா இனத்தவரிடையேயும் அந்த நாக வழிபாடு இருந்தது.
சீனாவில் அது டிராகன் என உண்டு, ஜப்பானில் உண்டு, எகிப்தில் இருந்தது ஐரோப்பாவில் இருந்தது. கம்போடியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்தது. இன்னும் பல இடங்களில் உண்டு.
நாகத்தை வணங்குதல் அப்படி பெரும் வழிபாடாக இருந்தது, பின்னாளில் இந்தியாவிலும் சீனாவிலும் அது நிலைத்தது, சீனா நெருப்பை உமிழும் பாம்பை தன் தேசிய அடையாளமாக கொண்டிருப்பதும் புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் அவர்களின் பாம்பு நடனம் நடப்பதும் உலகம் அறிந்தது.
வேதங்கள் பாம்பு பற்றி சொல்கின்றன. வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். யஜுர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது.
பழங்கால பாஞ்சல தேசத்தின் தலைநகரம் அஹீசத்திரமாகும். அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம். இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.
அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன.
நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது. அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது. கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும், புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.
பாம்புகளை பொறுத்த வரை என்றும் எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும். பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகைகளும் காட்டப்படுகிறார்கள். இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள்.
இந்துமதம் அதனை இன்றும் தொடர்கின்றது, பழமையான அம்மதம் அந்த பாரம்பரியத்தை கைவிடாமல் பற்றி வருகின்றது.
பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பணிப்பெண்ணாக கருதுகிறார்கள்.
மகாபாரதத்தில் அனுஷாசன பர்வத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.
கிரிஸ் நாட்டில் வணங்கப்பட்ட நாக தேவதையின் பெயர் மினோவான் என்பது.
எகிப்தில் படமெடுத்தாடும் பாம்பு தலையுடன் கூடிய நாகம்மா தெய்வமாக உண்டு, அவளை சூரியக் கடவுளின் கண்களாகவும் போற்றினர்.
இத்தாலியில் நோயை சுகமாக்கும் கடவுளாக நாகம்மாவை வணங்கினர். அவளுக்கு அன்கிதியா என்று பெயர்.
ஜெர்மனியில் பல குடும்பங்களுக்கு நாகம் குல தெய்வமாக இருந்து அவர்களின் ஆடு மாடுகளைப் பாதுகாத்தது. நாகம் இங்கு ஆணும் பெண்ணும் என ஜோடியாக இருந்து தமது குடும்பங்களைக் காப்பதாக நம்பினர்.
ஜப்பானில் மத்சுரா யோஹிமே என்ற பெயரில் நாகம்மாவை வழிபட்டனர்.
கொரியாவில் இயோப்ஷின் என்ற நாகம்மா செல்வத்துக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டாள். இவள் காதுகளுடன் கூடிய பாம்பு ரூபத்தில் இருந்தாள். இவளுக்கு ஏழு மகள்கள் உண்டு. ஏழு பேரும் பாம்புகள்.
பைபிளில் கூட யூத தெய்வம் நோயுற்ற மக்களை காக்க பாம்பை வணங்க சொல்லிற்று. அந்த பாம்பு வடிவம்தான் இன்று உலக மருத்துவ அடையாளமாகவும் விளங்குகின்றது.
ஆம், நாக தத்துவம் இந்த உடலிலும் உண்டு, ஆரோக்கியத்திலும் உண்டு.
இன்று உலகின் எல்லா இனத்திலும் பாம்பு வழிபாட்டின் தாக்கம் உண்டு. அதைத் தொடங்கி வைத்தது மதங்களுக்கெல்லாம் தாயான, ஆதி தாயான இந்துமதம்.
உலகெல்லாம் இந்துமதமும் அதன் நாக வழிபாடும் இருந்த காட்சியே இன்று உலகின் பல இடங்களில் காணபட்டாலும் அதன் மூலம் இந்து மதமே.
இப்படியான நாக வழிபாட்டைச் சொன்ன இந்துமதம் ஏழு முக்கிய நாகங்கள் இந்த பிரபஞ்சத்தை இயக்குவதாகச் சொன்னார்கள்.
எட்டு வகையாக நாகங்களை பிரித்தார்கள், இவை அஷ்ட லக்ஷ்மி சாயலில் ஒவ்வொரு வளம் தருவதாக சொன்னார்கள்.
அனந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன் என எட்டுவகை நாகங்களைச் சொன்னார்கள்.
அனந்தன் என்பவன் ஆதிஷேஷன், பூமியினை தாங்கி நிற்பவன். திருமால் பள்ளி கொண்டிருப்பதும் இந்த அனந்தன் மேலே.
சேஷன் என்றால் தொண்டன் எனப் பொருள், அனந்தனும் அதே பொருள்.
இப்படி அனந்தன் மேல் படுத்திருப்பதாலேயே, அவர் அனந்த சயனப் பெருமாள், திருவனந்தபுரம் எனும் பெயர் இப்படி வந்ததே.
இவர் உலகை தாங்குவார், பிரபஞ்ச இயக்கத்தை தாங்குவார் என்பது நம்பிக்கை.
(இன்றும் பூமிக்கும் இதர கோள்களுக்கும், ஒரு அண்டத்துக்கும் இன்னொரு அண்டத்துக்கும் இடையே கண்ணுக்கு தெரியா நெளிந்த வளைந்து செல்லும் பாதை இருப்பதாக விஞ்ஞானம் சொல்கின்றது, இந்த நெளிவுமிக்க அந்த இணைப்பில்தான் இந்த பிரபஞ்சம் இயங்குவதாகவும் அது சொல்கின்றது.
அதைத்தான் ஆதிஷேஷன் என்றார்கள் இந்துக்கள்)
வாசுகி என்பது அமிர்தம் கடைய பயன்பட்டது என்பது ஐதீகம், அதாவது அமிர்தம் எனும் ஞானம் தரும் நாகம் அது.
தக்கன் எனும் நாகம் எதிரிகளை அழிக்கும் வரம் தரும். பாகவத புராணத்தில் பரீக்ஷித் கதையில் இந்த பாம்பு வரும்.
கார்க்கோடகன் எனும் நாகம் சாபங்களை தீர்க்கும். நளன் கதையில் இதனைக் காணலாம்.
பதுமனும் சங்கபாலனும் குபேர சம்பத்து நாகங்கள். சங்கநிதி பதுமநிதி எல்லாம் இவர்கள் கொடுக்கும் வரம்.
சங்கபாலன் அரச யோகங்களைத் தரும், சோம்பலை ஒழிக்கும், பெரும் அறிவும் பொருளும் ஒருங்கே தரும்.
குளிகன் எனும் நாகம் நோய் தீர்க்கும், உடல், மன ஆரோக்கியத்தை தரும்.
இப்படி எட்டு நாகங்களைச் சொல்லி, இவை உலகையும் மானிட மனத்தையும் உடலையும் காக்கும் வரத்தைத் தரும் எனச் சொன்னமதம் இந்துமதம்.
இந்த நாகங்களின் நச்சுத்தன்மை என்பது அழிவை தருவது அல்ல, மிதமிஞ்சிய தீமைகளை அவை எடுத்துக்கொள்ளும். ஒரு மனிதனுக்கு என்ன விழிப்பு நிலை அவசியமோ அதைத் தரும் என்பது.
அதைத்தான் இங்கே குறியீடாக வைத்தார்கள்.
அப்படியே ஜோதிடத்தில் ராகு, கேது எனும் இரு கிரகங்களை வைத்தார்கள், இந்த இரு கிரகங்களின் அருள் இல்லாமல், அதாவது இந்த நாகங்களின் அருள் இல்லாமல் எந்த ஜாதகமும் இல்லை என்பதை சொல்லியும் வைத்தார்கள்.
பாம்புக்கும் மனிதனுக்குமான சூட்சும உறவை சித்தர்கள் ஞானக்கண்ணால் அறிந்தார்கள். பாம்புபோல் ஒரு சக்தி உடலில் உறங்குவதைக் கண்டார்கள்.
அது விழித்தெழ சில பயிற்சி அவசியம் என்றார்கள். அதை யோகக்கலை என்றார்கள்.
யோகத்தில் செய்யும் பல பயிற்சிகள் பாம்பின் அசைவை ஒத்திருப்பதை காணலாம். அதை செய்யச் செய்ய ஆரோக்கியம் கூடும், ஞானம் பெருகும்.
கிராமங்களில் அல்லது பெரும் திருவிழாக்களில் சாமியாடிகளின் உடல் அசைவினை கவனித்தால், அருள்வாக்கோ தெய்வ நிலைக்கு செல்லும் சாமான்ய மனிதர்களைக் கண்டால் பாம்பின் அசைவுகள், நெளிவுகள் அங்கே தெரிவதை எளிதாகக் காணமுடியும்.
ஆம், மானிடனில் ஒரு சக்தி எழுவதையும் அவர்கள் இன்னொரு பரிமாணத்துக்கு செல்வதையும் பாம்பின் அசைவினோடு பொருந்துவதை காணமுடியும்.
இதைத்தான் நாகவழிபாட்டின் அவசியம் என்றார்கள் சித்தர்கள்.
இந்தியாவின் பரதக் கலையிலும் பாம்பின் தத்துவம் இருந்தது, பாம்பின் அடிபாகம் போல் கால்கள் உறுதியாக இருத்தல் அவசியம், இடுப்புக்கு மேல் பாம்பு போல் பெண் நடனமாட வேண்டும் என்பதும் இலக்கணம்.
ஆம் இந்தியாவின் பரதம் ஒரு யோக நடனம், அந்த நடனம் யோக சக்தியினை அதிகரிக்கும். அதனாலே அதை பாம்பின் சாயலில் ஆடச் சொன்னார்கள்.
பதஞ்சலி முனிவர் பாதி பாம்பாக போன தத்துவம் அதுதான், பாம்பின் அசைவில் மானிடன் இறைவனை உணரமுடியும் என்பது.
ஆம், நாகங்களை வழிபட்டால் எல்லா பலன்களும் சூட்சுமமாக, அரூபமாக வரும் என்றார்கள் இந்துக்கள். இன்னும் முன்னோர்கள் காக வடிவில் வருவது போல, சித்தர்கள் பாம்புவடிவில் வருவார்கள் என்பது நம்பிக்கை.
இதனாலே பாம்புகளைத் தொழச் சொன்னார்கள்.
உண்மையில் பாம்புகள் அறிவானவை, சூட்சுமமானவை. அவைகளை புரிந்துகொண்டு பழகினால் உரிய வகையில் மந்திரங்களோ இல்லை இதர வகையில் அவைகளை நெருங்கினால், யானை பாகனுக்கு கட்டுப்படுவது போல், அவைகளும் மானிடருக்கு கட்டுபட்டு நிற்பவை.
ஒரு காலத்தில் இந்துஸ்தானின் காவலாக பாம்புகளே இருந்திருக்கின்றன, அலெக்ஸ்டாண்டர் இந்தியாவில் நுழையாமல் திரும்பிப் போக நாகங்களே காரணம்.
நாகங்களை பழக்கும் வித்தை இந்தியரிடையே உண்டு, அவர்கள் கட்டளையிட்டால் நாகங்கள் தாக்குகின்றன என கிரேக்கர்கள் அஞ்சியிருக்கின்றார்கள்.
இந்தியாவில் நாகங்களைப் பழக்கி காவல் வைப்பதும் அவற்றின் நஞ்சினில் சில ஆயுதங்கள் செய்வதும் வழமையாய் இருந்திருக்கின்றன, அம்பிலோ ஈட்டியிலோ நாக நஞ்சினை தடவி எறிந்தால் எதிராளி நிச்சயம் காலி.
நாகஙகள் விலை உயர்ந்த பொருளுக்கு காவலாக வைக்கப்பட்டிருக்கின்றன.
பின்னாளில் பவுத்தத்தால் பல வகை சீரழிவுகள் வந்து, இவை எல்லாம் மறைந்தாலும் கேரளாவில் அது தொடர்ந்திருக்கின்றது, கடைசிவரை ஆப்கானியரால், மொகலாயரால் மலையாள பூமி ஆளப்படாமலே போக அவர்களை யாரும் வெற்றிகொள்ள முடியாமல் போக முக்கிய காரணம் இந்த நாகங்கள்.
கேரளத்தின் நாகங்கள் அப்படி காவல் இருந்திருக்கின்றன. எஜமானர்கள் உத்தரவிட்டால் மாபெரும் நாகங்கள் அணி திரண்டு தாக்கியிருக்கின்றன, இதெல்லாம் கண்டு அஞ்சித்தான் அங்கே ஆப்கானிகள் செல்லவில்லை.
மாலிக்காபூரோ, துக்ளக்கோ, மொகலாயரோ யாரும் நுழைய அஞ்சியிருக்கின்றார்கள்,
அப்படிப்பட்ட பூமியாய் இந்துஸ்தானம் இருந்திருக்கின்றது.
இங்கு நாகவழிபாடு எக்காலமும் உண்டு, நாகவழிபாடு சிறந்திருந்த வரை இந்துமதம் சீரும் சிறப்புமாக இருந்தது, நாகங்களை வழிபடும் வரை இந்தியாவில் வளமைக்கும் செழுமைக்கும் குறைவில்லை.
நாக வழிபாடு என்பது சந்ததிப் பெருக்கத்துக்கு முக்கியம். அதன் பின்னிப் பிணையும் சக்தி போல மானிட சுபாவமும் உண்டு.
நாகத்தின் சாபமே குழந்தையின்மை என்பதும், கர்மவினை காரணமாக மாய சர்ப்பம் கருமுட்டையினை தின்றுவிடும் என்பதும் இந்துக்கள் என்றோ அறிந்த ஒன்று.
இதனால் எல்லா வரங்களை போலவே குழந்தை வரத்துக்கும் நாகத்தை வணங்கினார்கள், மகப்பேறு வரத்தில் முக்கிய பங்கு நாகத்துக்கு உண்டு.
இதனாலேயே பாம்பினை வணங்கும் இந்திய, சீன தேசங்கள் எப்போதும் மக்கள் தொகை மிகுந்து காணப்பட்டன, இன்றும் அந்த வளம் உண்டு.
நாகங்கள் மக்கட்வரம் மட்டுமல்ல, எல்லா வரங்களையும் அருளும், இந்தியாவின் நாக வழிபாடு உச்சத்தில் இருந்தவரை எல்லா வளமும் இருந்தது.
நாக வழிபாடு சரிய, குறைய எல்லாமும் குறைந்து போனது.
இந்துமதம் வாழ, இந்துஸ்தானம் வாழ, இந்துக்கள் இந்துக்களாய் வாழ, நாக வழிபாடு அவசியம்.
நாக வழிபாட்டால் எல்லா நலன்களையும் ஒருவன் பெறமுடியும்.
செல்வம், செழுமை, அதிகாரம், உடல் நலம், மனநலம், யோக மேன்மை, ஞானம் என எல்லாமும் அடைய முடியும்.
பாம்பே ஞானத்தின் அடையாளமானது, கேது எனும் கிரகம் ஞானத்தை வழங்கும் கிரகமாக கருதப்பட்டு, நாகம் பிள்ளையாரின் பூனூலாகவும் ஆனது.
இந்துமரபில் பூனூல் அணிவதும் நாக வடிவக் குறியீடே, அதுதான் நெற்றியில் நீண்ட திலகமாகவும் வந்தது, நெற்றியில் ஆற்றல் சுருண்டிருக்கின்றது எனும் வட்ட வடிவ பொட்டாகவும் வந்தது.
இங்கு எல்லாமே நாக தத்துவம், அதுவன்றி வேறல்ல.
மிகபெரிய ரகசியம் ஒன்றை இந்துக்கள் பாம்பில் வைத்தார்கள் ஒரு மாபெரும் தத்துவத்தை சொன்னார்கள், அது உலக இயக்கம் உடல் இயக்கம் இன்னும் எலல இயக்கத்துக்குமான ஒற்றுமை.
ஆம், இங்கே எல்லாமே அலை வடிவில் இயங்குகின்றது, இந்த பிரபஞ்சமே ஒருவித அலைவரிசையில் இயங்குவதாக் விஞ்ஞானம் சொல்கின்றது.
ஏறி இறங்கி செல்லும் ஒரு அலை அது, சக்தியின் இயக்கம் அலை அலையாக இயங்குகின்றது
இந்த அலைவடிவத்தை வரைபடத்தில் வரைந்தால் ஏறி இறங்கி ஏறி இறங்கி செல்வதை காணமுடியும், அதனை நன்றாக கவனித்தால் அது பாம்பு நெளிந்ததை போல் இருக்கும்.
இந்த பிரபஞ்சம் அப்படி அலையால் இயங்குகின்றது, மானிட உடலில் ரத்தம் அப்படி அலை அலையாய் பாய்கின்றது, காற்றும் கடலும் எல்லா இயக்கமும் அந்த அலை போன்ற இயக்கத்திலேதான் இயங்குகின்றன.
(மின்சாரம் கூட அந்த இயக்கமே, மின்னணு கருவிகளும் அந்த இயக்கமே, இதனாலே வரைபடங்களில் அலை அலையான வடிவங்களை நாகம் போல் காணமுடியும்.
இதுதான் நாகதத்துவம்)
இந்த சூட்சுமத்தை உணர்ந்த ரிஷிகள் ஏழு பெரும் சக்திகள் உலகை இயக்குவததை உணர்ந்து அதை ஏழு பெரும் நாகங்கள் என்றார்கள்.
மானிட மனதில் அலை அலையாய் எழும் சிந்தனைகளுக்கும் அந்த இயக்கத்துக்கும் ஒற்றுமையினை உணர்ந்தார்கள்.
இந்த சலனம் இந்த இயக்கத்தை கட்டுபடுத்தும் ஒரே சக்தி அந்த பரம்பொருள் என்றார்கள்
அந்த பரம்பொருளே இந்த இயக்கத்துக்கெல்லாம் அதிபதி எல்லாமே அவன் கட்டுப்பாடு என சொல்ல இறைவனை அந்த நாகத்தோடு சொன்னார்கள்.
இயக்கம் இறைவனுக்கு கட்டுபட்டது என சொல்ல விஷ்ணுவினை பாம்பின் மேல் படுக்க வைத்தார்கள் நாகம் அவனுக்கு சுருண்டு கட்டுபட்டது என்பது இயக்கத்தை கட்டுபடுத்துவது பரமாத்மா என்றார்கள்
சிவனுக்கு அப்படியே கழுத்தில் நாகமிட்டு சொன்னார்கள், முருகனுக்கும் விநாயகனுக்கும் சூரியனுக்கும் அன்னை சக்திக்கும் சொன்னார்கள்.
எல்லா இயக்கத்தையும் நாக வடிவில் சொல்லி அதனை கட்டுபடுத்துவது இறைவன் என்றார்கள்
இன்னொன்றை சூசகமாக சொன்னார்கள், இயக்கத்தை கட்டுபடுத்தும் அந்த சலனமற்ற நிலையே இறைநிலை என்றார்கள், பாம்பு என்பது இயக்கம் அதை கட்டுபடுத்துவது இறை நிலை,மனதை கட்டுபடுத்தினால் இறைநிலை அடையலாம் என அழகாக சொன்னார்கள்.
இந்துஸ்தானில் நாக அடையாளமில்லாமல் வழிபாடே இல்லை, கோவில்கள் இல்லை, பூஜைகள் இல்லை, எதுவுமில்லை.
நாகங்களும் சூட்சுமமானவை, அவைகளும் தர்மத்துக்கு கட்டுபட்டவை
யானைகளுடன் பேசமுடியும் என்பதை உணர்ந்து பேசிய மனிதன் நாகத்துடனும் உறவாடினான் நாகத்தை பழக்கும் வித்தையும் அவனுக்கு வந்தது.
மனிதனின் மனதை உணரும் சக்தி பாம்புக்கும் உண்டு.
அது யாரையும் தேடி சென்று கொல்லாது அது ஒதுங்கித்தான் செல்லும் கர்மவினை இல்லாமல் யார் முன்னால் கூட வராது.
மந்திரத்துக்கு அது கட்டுபடும் என்பது மந்திரத்தால் அல்ல, மனதை ஒருமுகபடுத்த தெரிந்தவனால் அதன் ஆழ்மனதை தொடமுடியும் பேசமுடியும் அந்த அலைவரிசைக்கு செல்லும்போது பாம்பின் மனமும் அவன் மனமும் ஒரே புள்ளிக்கு வரும்போது அவன் சொன்னதையெல்லாம் அது கேட்கும்.
மந்திரம் என்பது மனதை ஒருமுகபடுத்தும் விஷயமே.
அப்படி இந்துக்கள் நாகங்களில் பிரபஞ்ச இயக்கம் கண்டார்கள், உடல் நலனை கண்டார்கள் உடலின் செல் முதல் விந்துமுதல், ரத்தகுழாய், மரபணு முதல் நரம்பு நாடி குடல் வரை பாம்பின் சாயலை கண்டார்கள்
மூலத்தில் சுருண்டிருக்கும் சக்தி எழும்பி தலையில் விரியும் அந்த இயக்கத்தை நாகமென உணர்ந்தார்கள்
பாரதம் முழுக்க, அதன் வரலாறு முழுக்க, அதன் ஆலய வழிபாடு முழுக்க, நாகத்தின் அடையாளமாக ஏகப்பட்ட இடங்களும் குறியீடுகளும் உண்டு. அவைகளில் முக்கியமானவற்றைக் காணலாம்.
பிரம்ம ரிஷியார்