கர்நாடகா, மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு என்னும் ஊரில் அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
மைசூரில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் நஞ்சன்கூடு என்னும் ஊர் உள்ளது.
நஞ்சன்கூட்டில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்குள்ள வீரபத்திரர் மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவர் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு வைத்து காட்சியளிக்கிறார்.
வீரபத்திரர் கோயில்களில் சுவாமியுடன், பத்திரகாளிதான் பிரதான அம்பிகையாக இருப்பாள்.
ஆனால் இங்கு சுவாமியின் இடப்புறம் தாட்சாயணி வலக்கையில் தாமரை மொட்டு வைத்த படியும், சுவாமியின் வலப்புறம் உள்ள தட்சன் ஆகிய மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றவாரு காட்சியளிக்கின்றனர்.
சிவலிங்கத்தில், பரசுராமரால் வெட்டப்பட்ட தழும்பு இருக்கிறது.
சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால் இங்கு தினசரி பூஜையின்போது அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
மேலும் இவருக்கு சுக்கு, வெண்ணெய், சர்க்கரை ஆகிய மூன்றும் கலந்த 'சுகண்டித சர்க்கரை" என்னும் மருந்தை பிரதானமாக படைப்பதும் விசேஷம் ஆகும்.
நோய்களை குணமாக்குபவராக அருளுவதால் மூலவருக்கு 'ராஜ வைத்தியர்" என்றும் பெயருண்டு.
அம்பாள் பார்வதி சிவனுக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.
இருவரது சன்னதிக்கும் மத்தியில் நாராயணர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
சிவனின் விசேஷமான 24 மூர்த்தங்கள், திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம், வெண்ணெய் கணபதி, நாகத்தின் மத்தியில் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பத்மாசனத்தில் ஆயுதங்களுடன் நவகிரக சன்னதி ஆகியவை அமைந்துள்ளன.
இத்தலத்து சிவன், ஈசானிய (வடகிழக்கு) திசையை பார்த்திருப்பதாக ஐதீகம். எனவே நந்தி இவரது பார்வையில் படும்படியாக வடகிழக்காக சற்று தள்ளி உள்ளது.
இங்குள்ள கோபுரமே லிங்கமாக கருதப்படுவதால் கோயிலுக்கு வெளியிலும் ஒரு நந்தி இருக்கிறது.
இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி 14 சீடர்களுடன் காட்சி தருவது விசேஷம்.
சிவராத்திரி, கார்த்திகை மற்றும் பங்குனியில் பிரம்மோற்சவம், ஆடியில் சிவனுக்கும், ஆவணியில் பெருமாளுக்கும் திருக்கல்யாண விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முன்வினை பாவம் நீங்க, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
விஷக்கடி பட்டவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவன் மற்றும் அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.