சோழ நாட்டின் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பாண்டிய நாட்டுக்குக் குடியேறி, "காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்"களாய்த் தமக்கெனத் தனிப் பண்பாட்டையும் அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருகிற தமிழ்க்குடிமக்களே "நாட்டுக்கோட்டைச் செட்டியார்" அல்லது "நகரத்தார்" என்று அறியப்படுகிறார்கள்.
இவர்கள் "செட்டி" என்ற குலப்பெயராலும் அறியப்படுகிறார்கள்.
பண்டைத் தமிழ் இலக்கியக் குறிப்பு:
இந்தக் குலத்து மக்கள் சிலருடைய பெயர்களை முதன்முதலாகப் பண்டைத் தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காணலாம்.
சிலப்பதிகார வரந்தரு காதையில் அரட்டன் செட்டி என்பவர் குறிக்கப்படுகிறார். இந்த அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்கள் கண்ணகிக்குச் சேரன் எடுத்த விழாவைக் காண வருகிறார்கள். இவர்கள் முற்பிறவியில் கண்ணகியின் தாயும் கோவலனின் தாயும் ஆக இருந்தமை தெரிகிறது.
"கம்பளச்செட்டி" என்ற பெயர் மணிமேகலைக் காப்பியத்தில் உள்ளது. இந்தக் "கம்பளச்செட்டி"யின் இயற்பெயர் என்ன என்று தெரியவில்லை. ஆனால், நாகநாட்டுப் பீலிவளை என்பவள் சோழ அரசனுடன் தான் கொண்ட உறவினால் பிறந்த குழந்தையைக் கம்பளச்செட்டியிடம் ஒப்படைத்துச் சோழ நாட்டில் சேர்ப்பித்துவிடும்படி வேண்டுகிறாள் என்று தெரிகிறது.
இது தவிர, மணிமேகலை "ஒன்பது செட்டி"களைப் பற்றியும் குறிக்கிறது. ஆபுத்திரன் மணிபல்லவத் தீவில் கோமுகிப் பொய்கையில் அமுதசுரபியை இட்டுவிட்டு உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர்விடுகிறான். ஆபுத்திரனைத் தேடி வருகிறார்கள் ஒன்பது செட்டிகள். அந்த ஒன்பது செட்டிகளும் ஆபுத்திரன் உயிர் நீங்கியதைப் பார்த்துத் தாங்களும் அவனைப்போலவே உயிர்விடுகிறார்கள்.
இந்தக் குறிப்புக்களால் பண்டைக் காலத்தில் செட்டியார் கடல் கடந்து சென்றனர் என்று தெரிகிறது.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய இந்த வணிக மக்கள் சொற்பழுது இல்லாத வணிககுலம் எனப் போற்றப்பட்டனர்.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்கள் சேர்ந்த பகுதியைச் "செட்டிநாடு" என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் சேர்ந்து "செட்டிநாடு" என்று குறிக்கப்படுகிறது. இந்த ஊர்களில் காரைக்குடி, தேவகோட்டை பெரிய ஊர்கள். மற்றவை: கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி போன்ற இன்னும் சில ஊர்கள் உள்ளது.
நகரத்தார் குலத்தவர் 9 ஊர்களில் சிவன் கோயில்கள் அமைத்து அக்கோவில்கள் சார்ந்த குடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த ஒன்பது நகரக் கோவில்கள்:
1) இளையாத்தங்குடி (பிரிவுகள் உண்டு)
2). இரணிக்கோவில் (பிரிவுகள் உண்டு)
3). சூரக்குடி
4). மாத்தூர் (பிரிவுகள் உண்டு)
5). பிள்ளையார் பட்டி,
6) வைரவன்கோயில்
(பிரிவுகள் உண்டு)
7). நேமங்கோவில்,
இலுப்பைக்குடி
9). வேலங்குடி..
ஒரு கோவிலைச் சார்ந்தவர்கள் அனைவரும் பங்காளிகள். பொதுவாக, பங்காளிகளுக்குள் திருமணத்தொடர்பு இல்லை. இளையாத்தங்குடி, மாத்தூர்க் கோவில்களில் மட்டும் உட்பிரிவுகளில் திருமணத்தொடர்பு உண்டு.
முதலில் செட்டிநாடு முழுவதும் 96 ஊர்களில் வாழ்ந்து வந்த நகரத்தார் காலப்போக்கில் இப்போது 75 ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
நகரத்தார் சமுதாயத்தினர் வாழ்ந்த ஊர்கள் அவர்களால் வட்டகை எனும் பிரிவில் பிரிக்கப்பட்டுள்ளன. மேலவட்டகை, கீழப்பதூர் வட்டகை, கீழ வட்டகை, மேலபதூர் வட்டகை, பதினாறு வட்டகை, உறுதிக்கோட்டை வட்டகை போன்றவை.
இந்த உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்கள் சுமார் 203 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரிவினையில், மொத்தம் உள்ள 9 நகரத்தார் கோவில் பிரிவைச் சார்ந்தவர்களில் 4 கோவிலைச் சார்ந்த சில புள்ளிகள் பிரிந்து வந்து உறுதிக்கோட்டை வட்டகையை உருவாக்கினார்கள். இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகையைத் தவிர வேறு வட்டகையிலோ,வேறு சமுதாயத்திலோ கொள்வினை, கொடுப்பினை (திருமண உறவுகள்) செய்வது கிடையாது.
நகரத்தார்களோடு கலப்பு ஏன் சாத்தியம் இல்லை.
பிரிவுகள் இல்லாத கோவில்களில் ,மாப்பிள்ளை, பெண் ஒரே கோவில் எனில் பங்காளிகள் (சகோதர உறவாகும்) திருமணம் செய்து கொள்ள கூடாது.
பிரிவுகள் உள்ள கோவில் எனில் ,ஒரே கோவில் என்றாலும் ஒரே பிரிவு மட்டுமே பங்காளிகள் ,எனவே ஒரே கோவில் என்றாலும் அதற்குள் வேறு பிரிவிலும் மணம் செய்து கொள்ள முடியும்.
ஒன்பது கோவில்களிலும் தனி தனியாக திருமணம் ஆனவர்கள் பற்றிய புள்ளிகள் கணக்கு நிர்வாகிக்கப்படுகிறது.
96 (இப்போது 75) நகரத்தார் ஊர்களில் உள்ள அந்தந்த கோவிலை சேர்ந்தவர்கள் பற்றிய முதல் விலாசம் துவங்கி வரிசை படுத்தி பதிந்து இருப்பார்கள்.
உதாரணமாக,
இலுப்பகுடி மாப்பிளை ,ஊர் நாச்சியாபுரம் என்றால் திருமணத்துக்கு மூன்று நாள் முன்பு இலுப்பக்குடி கோவிலுக்கு சென்று அங்குள்ள நகர சத்திரத்தில் கணக்கப்பிள்ளை இருப்பார்,
அவரிடம் வெற்றிலை பாக்கு வைத்து திருமண பத்திரிக்கை வைத்து விவரம் சொல்ல வேண்டும், இதற்கு 'கோவிலில் பாக்கு வைப்பது என்று பெயர்.அவர்கள் தங்கள் பெரேட்டில் ,நாச்சியாபுரம் பக்கத்தில் திருமண பத்திரிக்கையில் உள்ள மாப்பிளை வீட்டு விலாசத்தில் அப்பா பெயர் வரை இருப்பதை சரி பார்த்துக்கொண்டு,பெண் எந்த கோவில் எந்த ஊர் போன்ற விவரங்களை குறித்துக்கொண்டு , ₹1 மாலைக்கு பெற்றுக்கொண்டு ,வந்து போகும் செலவுக்கும் சேர்த்து ரசீது தருவார்கள்,
திருமணம் நடைபெறும் இடத்துக்கு மண நாள் அன்றோ,முதல் நாளோ கோவிலில் இருந்து மாலை வைராவி என்ற பணியாள் மூலம் அனுப்பி வைப்பார்கள்.
திருமணம் முடிந்ததை உறுதி செய்து திருமணம் ஆன மாப்பிள்ளை பெயர் பேரெட்டில் எழுதுவார்கள்,இப்போ அவரும் நகரத்தார்கள் புள்ளி ஆகிறார்.
பெண் வீட்டிலும் இப்படியே ,அவர்கள் கோவில் எதுவோ அங்கு இந்த முறைப்படி மாலையை மணம் நடைபெறும் இடத்துக்கு அனுப்புவார்கள்.
இருவர் குடும்பமும் நகரத்தார்களாக இருந்தால் மட்டுமே கோவில் மாலை வாங்க முடியும்.
இது போக நகரத்தார் ஊர்களில் உள்ள சிவன் கோவிலில் அந்த ஊர் நகரத்தார் பற்றிய விவரங்கள் கோவில் வாரியாக முன் விலாசம் முதல் இருந்து வரும்.
அங்கும் பாக்கு வைத்து பணம் எழுத வேண்டும். நகரத்தார்களுக்கு மட்டுமே இங்கும் கணக்கு உண்டு.
மேலும் அந்த கோவில் பங்காளிகள் இருவர் இதை உறுதி படுத்த வேண்டும்.
திருமணம் நடைபெறும் நாள் ,மொய்ப்பண ஏடு என்ற புத்தகத்தில் ,பங்காளிகள் பணம் எழுதுவார்கள்.அதில் விலாசம் வாரியாக பங்காளிகள் பெயர்கள் எழுதப்பட்டு ,அய்யாக்கள் வீடு களுக்கு ₹5ம்,பங்காளிகளுக்கு ₹1ம் பணம் வாங்கி வரவு வைப்பார்கள்.
இதிலும் நகரத்தார்கள் மட்டுமே இடம் பெற முடியும்.
இது மாப்பிள்ளை, பெண் இரு வீடுகளை சேர்ந்தவர்களும் தனி தனியாக செய்து கொள்வார்கள்.
இன்றும் திருமணம் பதிவு செய்யபடுகிறது.
இசைவு பிடிமானம் என்ற ஏட்டில் ,
மாப்பிளை கோவில்,ஊர்,விலாசம் அதே போல் பெண் கோவில்,ஊர்,விலாசம் உட்பட எழுதி ,பெண் வீட்டார் ஒன்றும் மாப்பிள்ளை வீட்டார் ஒன்றும் தனி தனியாக எழுதுவார்கள்,
அதில் மாப்பிள்ளை தகப்பனார் அல்லது தாயார் அல்லது உடன் பங்காளி கையெழுத்து செய்து அதேபோல் பெண் வீட்டிலும் செய்து ,இரண்டு பக்கமும் இந்த ஏடுகளை மாற்றிக்கொள்வார்கள்.
எனவே அந்நியர் உள்ளே நுழைவது சாத்தியமே இல்லை, ஒருக்காலும் இந்த நடைமுறை மாற்ற இயலாது,மாறாது.
#நகரத்தார்கள் #திருமணம்
பெண் பார்த்துப் பேசி முறைச்சிட்டை எழுதிக் கொள்வதை ”கெட்டி பண்ணிக் கொள்ளுதல்” என்பார்கள்.
திருமணத்துக்கு முதல்நாள் பெண் வீட்டாரிடம் இருந்து மனகோலம், முறுக்குவடை, அதிரசம், டயர் முறுக்கு, மாவுருண்டை, தேன்குழல் போன்ற பலகாரங்கள் வரும். அதை உறவினர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்வார்கள். உறவினர் அனைவரும் கூடி ஆக்கி உண்பார்கள். 4 வேளையும் பலகாரம், சாப்பாடு அமர்க்களமாக இருக்கும். மாலைப் பலகாரத்தை இடவேளைப் பலகாரம் என்பார்கள்.
முதல் நாள் மாப்பிள்ளைக்குத் தாய்மாமன் மிஞ்சி ( கால் மோதிரம் ) அணிவிப்பார். அதன் பின் திருமணம் முடிந்தபின் தான் மாப்பிள்ளை வெளியே செல்ல முடியும்.
நாதஸ்வர மேளக்காரர்கள் வந்ததும் மாலையில் சிறிது நேரம் கொழுமி மேளம் இசைப்பார்கள். வண்ணார் வந்து மணவறையின் பக்கம் நீலமாத்துக் கட்டுவார். கல்யாணக் கொட்டகை அலங்கரிக்கப்படும்.
கழுத்துருவுக்குப் பொன் தட்ட பொற்கொல்லர் வருவார். திருமணம் செய்ய நகரத்தார் கழுத்துரு என்ற திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் கோர்த்துக் கட்டுவார்கள். மொத்தம் 36 உருப்படி இருக்கும். இதைப் பெண் வீட்டில் வாங்கப் போவார்கள்.
கழுத்துருவைக் கொடுக்க மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் ஆண்களுடன் சில பெண்கள் சென்று மாப்பிள்ளைக்குத் திருமணத்துக்கு பொருட்களைப் பரப்புவார்கள்.
அதே போல் மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்கு பொருட்களை பரப்புவார்கள
இதே போல பெண் வீட்டில் மாமியாருக்கு சாமான் வைப்பார்கள். அதில் பொங்கல் தவலை , அடுப்பு ( இப்போது காஸ் அடுப்பு ) , கோலக்கூட்டு, சம்புடங்கள் என்று இருக்கும்.
இதில் ஸ்ரீதனப் பணம் என்று பெண்ணுக்கு ஒரு பங்கும், மாமியாருக்கு என்று ஒரு பங்கும் இந்த வரதட்சணையில் இடம் பெறும். பெண்ணுக்கான பணத்தைப் பெண், மாப்பிள்ளை பெயரிலேயே டெப்பாசிட் செய்து விடுவார்கள்.
திருமணத்தன்று காலை ஐயரைக் கூப்பிட்டு பெண்ணைக் காவல் காக்கும் பூரம் என்னும் தெய்வத்திடம் பெண்ணைக் காக்க மணமகன் வருவதாக் கூறிக் கழிப்பார்கள். அதன் பின் தாய்மாமன் காப்புக் கட்டுவார். மூத்த பிள்ளை திருமணமாக இருந்தால் மாம வேவு என்று ஆயா வீட்டுச் சீர் செய்வார்கள்.
பக்கத்துக் கோயிலில் இருந்து மாப்பிள்ளைக்கு தங்க கைக்கெடிகாரம், கைச்சங்கிலி, கழுத்துச் சங்கிலி, மோதிரம் ( இவை வசதி பொறுத்து வைரத்திலும் இருக்கும் ) அணிவித்து மாலை பூச்செண்டு கொடுத்து மாப்பிள்ளை அழைப்பார்கள். ஸ்லேட்டு விளக்கு வைத்து அழகு ஆலத்தி எடுத்து வீட்டு வாசலில் பெண் எடுக்கிக் காண்பிப்பார்கள். ( அந்தக் காலத்தில் பெண் அவ்வளவு சின்னக் குழந்தையாக இருந்ததால் இடுப்பில் எடுக்கிக் காண்பிப்பார்களாம். )
மணவறையில் மாப்பிள்ளையின் உறவினர்கள் பகவணம் செய்ய ( பாலில் போட்ட பூவால் அர்ச்சித்தல்) மாப்பிள்ளையின் தாய் மாமன் மாப்பிள்ளைக்குக் காப்புக் கட்டுவார். ( இரண்டு நாட்களுக்கு முன்பே ஊறவைத்த நவதானியங்கள் முளைவிட்டிருக்கும். இதை முளைப்பாரி என்பார்கள். இதை ) அரசாணிக்காலில் முளைப்பாரியை எடுத்துப் போடுவார்கள்.
பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்த சீதனப் பட்டைக் கட்டித் திருப்பூட்டுவார்கள். இதில் மணவறையில் பெண் மணவறைப் பலகையில் கிழக்குப் பார்த்து நிற்க மணமகன் கீழே நின்று திருப்பூட்டுவார். முதலில் பெண்ணுக்கு அவரவர் நகரக் கோயிலிலிருந்து வந்த விபூதி, குங்குமத்தை வைத்து கோயில் மாலையைப் போட்டு பின் கழுத்துருவைக் கட்டுவார். இதில் இரு முடிச்சுக்கள் அவர் போட மூன்றாம் முடிச்சை நாத்தனார் அல்லது மாமியார் போடுவார்கள்.
பின் மணவறைச் சடங்கை மாமியார் , நாத்தனார் செய்து கொள்வார்கள். இதில் சடங்குத்தட்டு, நிறைநாழி, கத்திரிக்காய், சிலேட்டு விளக்கு, குழவி ( குலம் வாழும் பிள்ளை ) போன்றவை வைத்து சடங்கு செய்வார்கள். பின் கல்யாண வேவு எடுப்பார்கள். இது வேவுக்கடகாம் என்ற பாத்திரத்தில் நெல் அரிசி வைத்து எடுக்கப்படும். பொதுவாக திருமணத்தில் உபயோகிக்கப்படும் இந்தப் பொருட்கள் எல்லாமே வெள்ளியில் இருக்கும்.
இதன் பின் பங்காளிகள் பால் சட்டி வைத்து பணத்திருப்பேடு ( வருகைப் பதிவு ) எழுதுவார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் மாப்பிள்ளை பெண்ணின் அப்பத்தா வீட்டு ஐயாக்களோ அல்லது தகப்பனார்களோ இந்தத் திருமணத்தைப் பதிவு செய்து இசைகுடிமானம் என்ற பத்திரத்தில் கையெழுத்திட்டுப் பதிவு செய்து ஒருவருக்கொருவர் மாற்றி வைத்துக் கொள்வார்கள்.
மாப்பிள்ளையும் பெண்ணும் மாமக்காரருடன் மணவறையைச் சுற்றி வந்து கோட்டையைக் கடந்து ( நெல் வைத்து வைக்கோல் பிரியால் சுற்றிய பை ) சாமிவீட்டுக்குள் சென்று சாமியை வணங்கி வருவார்கள். மாப்பிள்ளையுடன் மாப்பிள்ளைத் தோழர் ஒருவர் வள்ளுவப்பை என்ற ஒன்றை வைத்திருப்பார்.
திரைசீலையில் முடிதல், மாப்பிள்ளைக்கு சாப்பாடு போடுதல், ஐயர் செய்யும் மணவறைச் சடங்குகள், மஞ்சள் நீராடுதல், காப்புக் கழட்டிக் கால்மோதிரம் இடுதல் ஆகியன நடைபெறும்.
திருப்பூட்டியவுடன் அனைவரையும் வணங்கி வருவார்கள் மணமக்கள். இதன் பின் கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல் என்று அனைவரிடமும் கும்பிட்டு விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். அதன் பின் குலம் வாழும்பிள்ளையைக் கொடுத்துவாங்கிக் கொள்வார் மணப் பெண். பின் சொல்லிக் கொள்ளுதல். அதன் பின் பெண்ணழைத்து விடுதல் நடைபெறும்.
மாப்பிள்ளை வீடு வெளியூரில் இருந்தால் கட்டுச் சோறு கட்டி அதை ஒரு ஊரணிக்கரை அல்லது குளக்கரையில் உண்பார்கள். மாப்பிள்ளை வீட்டில் மாலையில் பெண்ணழைத்துக் கொள்வார்கள் . அங்கேயும் குடத்தில் குலம் வாழும் பிள்ளையை எடுத்து மாப்பிள்ளை பெண்ணின் கையில் கொடுக்கவேண்டும். அதன் பின் பெண்ணளைத்த சடங்கு செய்வார்கள். அதன்பின் பெண் வீட்டுக்காரர்கள் சொல்லிக் கொள்வார்கள்.
மறுநாள் படைப்பு, குச்சி தும்பு துவாலை கட்டல், முதல் வழி, மறு வழி, பால்பழம் சாப்பிடுதல் , குலதெய்வம் கும்பிடுதல் என அனைத்தும் நடைபெறும்.
திருமணத்தை ஆதி காலம் தொட்டே பதிவு செய்தவர்கள் மட்டுமல்ல. திருமணச் சடங்குகளில் எல்லா சாதியினரின் ( ஐயர், நாவிதர், வண்ணார், பண்டாரம், குலதெய்வக் கோயில் வேளார்,) ஒத்துழைப்பையும் பெற்று சிறப்புறச் செய்தவர்களும் இவர்களே.
நகரத்தார்கள்
குடும்பப் பெயர்கள்
தந்தை-அப்பச்சி
தாய்-ஆத்தாள்
மருமகள் - மகம்மிண்டி
அண்ணன் மனைவி- அண்ணமிண்டி
தம்பி- மனைவி-தம்பியொண்டி
பேரன்-பேரன், பேரன்மனைவி-பேரம்பிண்டி
மாமா-அம்மான்,
மாமா மனைவி-அம்மாம்மிண்டி
அத்தை-அயித்தை, அத்தைமகள்-அயித்தியாண்டி
கணவனின் தம்பி
கொழுந்தனார் - கொழுந்தனாவண்டி
மாமானார்-சம்பந்தியான், மாமியார்-சம்பந்தியாள்
எட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் #செட்டிநாட்டு_சாப்பாடு
பாசிப்பருப்பு மசியலுக்கு
பக்குவமாய் உப்பிட்டு
உருக்கி நெய் ஊத்தி
சீரகமும் பூண்டும் அதில
சிக்கனமாத் தட்டிப்போட்டு
கருவேப்பிலை கிள்ளிப் போட்டு
கடைஞ்சு வச்சா சாப்பாடு..ஆஹா!
முறுக்கா ஆரம்பிக்கும்!
முதல்ருசியே மூக்கை இழுக்கும்!!
அம்மியில்லாத ஆச்சிவீடு உண்டா?!
அம்மியில அரச்சுப்போட்டு
ஆச்சிவச்ச கறிக்குழம்பு
கம்மியாவே இருந்தாலும்
களிப்பூட்டும் ருசியிருக்கும்!
பலாக்காயில பருப்புப்போட்ட
கூட்டுக் கறிவச்சா....
ஆட்டுக் கறிகூட
அதுக்குஇணையில்லை
அவரைக்காய் இளங்குழம்பு
அதுக்கு ஒரு தனி பக்குவம்
சீரகமும் கசகசாவும்
பூண்டும்வச்சு அம்மியில
புதுசாத்தட்டிப் போட்டு..
ஆஹா..
இதுவல்லோ இளங்குழம்பு!
புடலங்காய்த் துவட்டலுக்கு
துவரம்பருப்பு அரைவேக்காட்டில்!
அடடா! அருசுவை!
பலகாய் போட்டு ஒரு மண்டிவைப்பார்!
உலகமெலாம் விரும்புகின்ற
ருசியான மண்டியப்பா!
பறங்கிக்காய்
புளிக்கறியும்
பக்குவமாய்க் கருணையிலே
படுருசியாய் மசியலும்
இங்கிலீசு கய்கறியில்
இதமாகக் காரமிட்டு
பிரட்டல் வைப்பார்கள்
பிடித்தபடி சாப்பிடலாம்!
அமிர்தத்தைப் போல
அரிசிப் பரமான்னம்!
அப்பளமும் பொரிச்சுவைப்பார்
அதுவல்லோ ஆனந்தம்!
வத்தல் வகை
வத்தலிலே வகைவகையாய்
வறுத்து வைப்பார்கள்!
கிள்ளிக்கிள்ளிக் காயவைத்த
கிள்ளுவத்தல்!
வத்தக்குழலில் பிழிஞ்சுவச்ச
தேங்குழ வத்தல்
வண்ணம்கலந்து காயவைத்த
ரொசாப்பூ வத்தல்!
துணியில் ஊத்திக் காயவைத்த
கேப்பை வத்தல்!
மோருக்குள்ள போட்டுவச்ச
மொளகாவத்தல்! சுண்டவத்தல்!
பலகாயும் மோருக்குள்ள
பக்குவமாப் போட்டுவச்ச
காய்கறிவத்தல்!
பலகார வகையும் தொட்டுக்கொள்ளுவதும்
வெள்ளைப் பணியாரத்துக்கு
வரமிளகாய்த் துவையல்!
மசாலைப் பணியாரத்துக்கு
கதம்பத் துவையல்!
உளுந்தவடை சுட்டாக்க
தேங்காய்ச் சட்டினி!
மசால்வடை சுட்டாக்க
இஞ்சி சேத்த சட்டினி!
பொங்கல் போட்டாக்க
முருங்கைக்காய் சாம்பார்!
இடியாப்பம் செஞ்சாக்க
கத்தரிக்காய் கோசமல்லி!
ரவா உப்புமாவுக்கு
பாசிப்பருப்பு பச்சடி!
அடைத்தோசை சுட்டாக்க
பொரிச்சுக்கொட்டித் துவையல்!
இளந்தோசை சுட்டாக்க
வெங்காயக் கோசு!
அஞ்சரிசித் தோசைக்கு
வெங்காயம் பூண்டுவச்சு
தேங்காய்த் துவையல்
ஊத்தப்பம் தொட்டுக்க
துவரம்பருப்பு சட்டினி!
அரிசி உப்புமாவுக்கு
அரைச்ச மல்லித்துவையல்!
பூரிக்கு கிழங்கு!
சப்பாத்திக்கு குருமா!
இட்டலிக்கு டாங்கரு!
சும்மா குளம்பும் வைக்கலாம்!
புளிமிளகாய் கரைக்கலாம்!!
இனிப்பு வகை
கருப்பட்டியும் நெய்யும்சேத்த
ஆடிக்கூழு கும்மாயம்!
தேடிவாங்கிச்சாப்பிடலாம்
திகட்டாத பலகாரம்
வெல்லம்போட்டு ஏலம்சேத்து
ஆட்டிச்சுட்ட கந்தரப்பம்
இனிப்புச்சீயம்!
தேங்காய்திருவி நெய்போட்டு
வேகவச்ச கவுனரிசி!
பசங்கவிரும்பிச் சாப்பிடுற
பால்பணியார மாவு
பக்குவமா அரைக்கலைன்னா
படபடன்னு வெடிச்சிரும்!
ரெங்கூன்புட்டு சாப்பிட்டதும்[மனசு]
ரெக்கை கட்டிப்பறக்கும்!
உக்காரை ருசியில
ஒலகமே மறந்துரும்!
கருப்பட்டிப் பணியாரம்
விருப்பம்போல சாப்பிடலாம்!
குருவை அரிசிப் பணியாரம்
குசியாகச் சாப்பிடலாம்!
முகம் மலர வரவேற்று
மூச்சுமுட்ட அன்னமிடும்
நகரத்தார் பண்பாட்டை
நாடே வியந்தறியும்...
நகரத்தார்கள் சொலவடை
1)ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.
-- நகரத்தார் வாழ்ந்த 96 ஊர்களில் ( தற்போது 75 ) மிக மிகக் கடைசியான ஊர் உலகம்பட்டி. அதனால் அங்கே இருந்து பெண்ணெடுத்தாலோ பெண் கொடுத்தாலோ ஊருக்குக் கடைசி உலகம்பட்டியிலா எடுத்தீர்கள் என்பார்கள்.
2).நல்ல பாம்பு ஆடுதுன்னு நாக்ளாம்பூச்சி ஆடமுடியுமா.
-- நல்ல பாம்பு படம் எடுக்குதுன்னு மண்புழுவும் நாக்ளாம் பூச்சி படம் எடுக்க முடியுமா. தகுதிக்கேற்ப செயல்படணும் என்பதற்காகச் சொல்லப்பட்டது.
3).துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி சட்டி ஒண்ணு எட்டுத் துட்டுன்னு விற்றாலும் வட்டிக்கு ஈடாகுமா. ?
-- செட்டியார்களின் கணக்கு அறிவுக்கு சொல்லப்படும் பழமொழி இது. ஒரு துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கி ஒவ்வொரு சட்டியையும் எட்டு துட்டுக்கு வித்தாலும் வட்டித் தொழிலில் சம்பாதிப்பதற்கு ஈடாகாது எனச் சொல்வதாம்.
நகரத்தார் மரபில் வந்த வரகவி முத்தப்ப செட்டியாரின் பாடல் இவர்கள் வீடுகளில் புழங்குகிறது.
வாக்குப்பலிதம் உள்ள அவர் சொற்கள் தங்கள் வீடுகளின் செல்வச் செழிப்புக்குக் காரணம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு உண்டு.
நாடுபோற்றும் நகரத்தார்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.