Breaking News :

Wednesday, February 05
.

பாடி படவேட்டம்மன் கோவில்


சென்னை பாடி பகுதியில் பிரதான சாலை ஓரத்தில் இருக்கிறது இந்த பாடி படவேட்டம்மன் கோவில்.  

 

250 வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அந்த காலத்தில் சென்னையில் இருந்து கூண்டு வண்டியில் திருப்பதிக்குப் போன சிலர், திரும்பிவரும் வழியில் சக்கரம் மாதிரியான ஒரு கல், உருண்டு போனதை பார்த்து உள்ளனர். 

 

அந்தக்கல் கொஞ்சதூரம் உருண்டு நடுசாலையில் வந்து நின்று உள்ளது. பாதையை மறித்து நின்ற கல்லை ஓரமாகபோட நினைத்து எடுத்து உள்ளனர். 

 

ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். காரணம் அது சாதாரணக்கல் இல்லை. சிரசு வரைக்குமான அம்மன் சிலை.

 

அந்த சமயத்தில் அங்கே ஆடு மேய்த்து கொண்டு இருந்த ஒரு பெண்ணுக்கு அருள் வந்து “சோழ மன்னனோட போர்ப் பாசறையான படைவீட்டுல இருந்த அம்மன் நான், என் கோவில் காலப்போக்குல மறைஞ்சுட்டதால் எனக்கான இடத்தைத்தேடி இப்படி உருண்டு வந்துகிட்டு இருக்கேன். 

 

இன்னும் கொஞ்சம் தூரம் போனா சாலை ஓரத்தல ஒரு வேப்ப மரம் இருக்கும். அங்கே வைச்சு என்னை வழிபடுங்க. உங்க வேண்டுதலை நிறைவேற்றி என்றைக்கும் நான் துணை நிற்பேன். எல்லைத் தெய்வமாக இருந்து காப்பேன்”. என்று வாக்கு சொல்லியிருக்கிறது அம்மன்”.

 

அங்கேயிருந்து அம்மன் சிலையை எடுத்துவிட்டு புறப்பட்டவர்கள் வழியில் ஒரு வேப்பமரம் இருந்ததை பார்த்துவிட்டு அதோடு வேரடியில் அம்மனை வைத்து வழிபட்டார்கள். அன்றில் இருந்து இன்று வரைக்கும் அதே இடத்தில் அதே வேப்பமரத்தின் வேர்ப்பீடத்தில் இருந்து அருள் புரிகிறாள் படைவீட்டம்மன்.

 

மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த அந்தப்பகுதி இன்றைக்கு பரபரப்பான சென்னையின் முக்கியமான ஓர் இடமானது. 

 

படைவீட்டம்மன் என்ற அம்மனோட பெயர் மருவி படவேட்டம்மன் என்றானது. ஆனால் இப்பவும் தான் அமர்ந்த பீடத்தை மாற்றாமல் அதே வேப்பமரத்தின் வேரடி பீடத்தில்தான் அமர்ந்திருக்கிறாள் படை வீட்டம்மன். 

 

அம்மன், தானே விருப்பப்பட்டு வந்து அமர்ந்து இடம் என்பதை கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது. கோவிலைப் பற்றியும், இருப்பிடத்தையும் பார்போம்...

 

சென்னை பாடி பகுதியில் பிரதான சாலை ஓரத்தில் இருக்கிறது இந்த கோவில். ராஜகோபுரம் கிடையாது. ஆனால் உயர்ந்து நிற்கிற வேப்பமரம் அந்தக்குறையைத் தீர்க்கிறது.

 

வேம்புவின் வேரடியில் பீடமாக இருப்பதால் அதை மாற்றாமல் அப்படியே சிறிய கருவறை அமைத்து இருக்கிறார்கள்.

 

சிரசு வரைக்கும் இருக்கிற அம்மனுடைய சிலையை பார்த்தால் ரேணுகா பரமேஸ்வரியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. 

 

ஆனால் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அம்மனுடைய தலையில் அக்னி ஜுவாலை மகுடமும் நாகக்குடையும் இல்லாத வித்தியாசம் தெரியும். இந்த அமைப்பினாலும் போர் வீரர்களால் வணங்கப் பட்டதாலும் இவளை துர்க்கை அம்மன் என்றும் சொல்கிறார்கள். 

 

சக்கரம் மாதிரி உருண்டு வந்த அம்மன் முகம் வட்டமான சந்திரனுக்கு நடுவில் பதிந்த மாதிரி குளுமையான பிரகாசத்தோடு இருகிறது. தினமும் அபிஷேக நேரத்தில் மட்டுமே இந்த அம்மனை தரிசிக்க முடியும். 

 

பிறகு கவசம் சாத்திடுவார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் இங்கே தினமும் அபிஷேக பூஜை நடக்கிறது. 

 

முதல் நாள் பூஜையை முடிச்சுட்டு மறுநாள் காலையில் வழிபாடு நடத்த வரும்போது ரொம்பவே கவனமாக அம்மனுடைய வஸ்திரங் களையும் நிர்மால்யப் பூக்களையும் அகற்றுவார்கள். காரணம் பல நாட்களாக இங்கே அம்மனுக்குப் பக்கத்தில் பாம்பு வந்து படுத்திருக்குமாம்.

 

ஒரே சுற்றுள்ள கோவிலில் கணபதி, சிரசு அம்மன், மாரியம்மன், பால முருகன் மற்றும் உற்சவ படவேட்டம்மனும் முழுவடிவாக பூரண சந்திரன் மாதிரி அழகு மிளிர காட்சி தருகிறார்கள். 

 

படவேட்டம் மனை ஏராளமான பக்தர்கள் குலதெய்வமாக நினைத்து பொங்கலிட்டும் புடவை சாத்தியும் வணங்கு கிறார்கள். பக்தர்கள் பொங்கலிடுவதற்கு சிறப்பான தனி இட வசதி இருக்கிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.