Breaking News :

Wednesday, February 05
.

அறியாமல் பாவம் செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்தே?


பாவம்… நெருப்பைப் போன்றது என்பதை விளக்கிய கிருஷ்ணன்,

அறியாமல் பாவம் செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி ஆகிறான்! குருக்ஷேக்ஷேத்திர யுத்தம் முடிந்தது. கௌரவர்கள் பூண்டோடு அழிந் தனர். பகவான் கிருஷ்ணரின் உதவியால் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அவரது வழி காட்டு தலுடனும் கருத்தொருமித்த சகோதரர்களின் ஒற்றுமையாலும் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார் தருமபுத்திரர்.

 இதையடுத்து பகவான் கிருஷ்ணரின் தலைமையில், சகோதரர்கள் புடைசூழ, தனது பெரிய தகப்ப னாரான திருதராஷ்டிரரிடம் ஆசி பெற வந்தார் தருமர். துர்க்குணம் கொண்ட துரியோதனன் முதலான கௌரவர்களுக்குத் தந்தையாக இருந்தாலும் திருதராஷ்டிரர் இயல்பிலேயே நற்குணம் மிக்கவர். தன் சகோதரனான பாண்டுவின் மைந்தர்களிடம் அன்பும் பாசமும் கொண்டவர்.

 பாண்டவர்களுக்காகத் தன் மகன்களிடம் அவர் பலமுறை பரிந்து பேசியும் பலன் இல்லை. விளைவு… யுத்தம்! அதில், மகன்கள் அனைவரையும் பறி கொடுத்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தார் திருதராஷ்டிரர்.
இந்த நிலையில்தான் அவரைச் சந்திக்க வந்தனர் பாண்டவர்கள். தம்மை வணங்கி நிற்கும் கிருஷ்ணரையும் பாண்டவர்களையும் கண்ட திருதராஷ்டிரர் துக்கம் தாளாமல் கதறி அழுதார்.

பகவான் கிருஷ்ணரும் தருமரும் நீதிநெறிகளை எடுத்துச் சொல்லி அவரைத் தேற்றினர். சற்று ஆறுதல் பெற்ற திருதராஷ்டிரர், ”கிருஷ்ணா! நீயே பரம புருஷன். இந்த உலகில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் நீயே காரணமானவன். உனையன்றி ஓர் அணுவும் அசைவதில்லை. துரோணர், பீஷ்மர் முதலான பெரியோர்களது ஆலோசனைப்படி நல்லாட்சி செய்ததால், என் தேசத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். சிறந்த அரசன் என்று பெயர் பெற்ற எனக்கு, இவ்வளவு பெரிய துன்பம் எதனால் ஏற்பட்டது?” என்று துக்கத்துடன் கேட்டார்.

உடனே, ”சக்ரவர்த்தியே, வேறு விஷயங் களைப் பேசி, துக்கத்தைக் கொஞ்சம் மறக்கலாமே!” என்ற கிருஷ்ண பரமாத்மா தன் பேச்சைத் தொடர்ந்தார்: ”பாண்டுவின் மைந்தரான தரும புத்திரர் அரச பொறுப்பு ஏற்றுள்ள இந்த தருணத்தில், அரச நீதி குறித்து எங்களுக்கு ஒரு சந்தேகம். அதை, தாங்கள்தான் களைய வேண்டும்!” என்றார் கிருஷ்ணர். ”அப்படி என்ன சந்தேகம் பரந்தாமா?”- திருதராஷ்டிரர் கேட்டார்.

”ஒரு கதை சொல்கிறேன். அதிலேயே எங்களது சந்தேகமும் அடங்கி இருக்கிறது” என்ற கிருஷ்ணர், கதையை விவரித்தார்: ”அந்த அரசன், மிக நல்லவன். நீதி-நெறி பிறழாமல் ஆட்சி புரிந்து வந்தான். சைவ நெறிப்படி வாழ்ந்தவன். ஆனால், அரண்மனையில் உணவு தயாரிக்கும் சமையற்காரனோ அசைவப் பிரியன்! அசைவம் தயாரிப்பதில் கைதேர்ந்தவன்.

 அவன் சமைக்கும் உணவைச் சாப்பிட்டுப் பார்க்கும் ஒருவருக்கு அது சைவமா, அசைவமா என்று கண்டறிய முடியாது. இந்த ஆசாமிக்கு ஒரு விபரீதமான- கொடூரமான ஆசை வந்து விட்டது. அதாவது, அசைவ உணவை சைவம் போல் தயாரித்துக் கொடுத்து அரசனைச் சாப்பிட வைக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

அரசன், தனது அரண்மனையில் சாதுவான மிருகங்களையும் பல அதிசயப் பறவைகளையும் வளர்த்து வந்தான். அவற்றில் ஓர் அன்னப் பறவையும் உண்டு. அது, தினமும் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொறித்து வந்தது. ஒரு நாள், இந்த அன்னப் பறவையின் குஞ்சு ஒன்றைப் பிடித்து வந்த சமையற்காரன், அசைவ உணவு என்று அறிய முடியாதபடி பக்குவமாகச் சமைத்து மன்னனுக்குப் பரிமாறினான். அது, அசைவ உணவு என்பதை அறியாத மன்னனும் ‘அடடா… பிரமாதம்!’ என்றபடி ரசித்து, ருசித்து, இன்னும் கேட்டுச் சாப்பிட்டான்.

 இதைக் கண்ட சமையற்காரன் மகிழ்ந்தான். அரசரையே ஏமாற்ற வைக்கும் தன் திறமையை எண்ணி வியந்தான். இதே போல் தினமும் அசைவ உணவு தயாரித்து மன்னனுக்குப் பரிமாறினான். சமையலில் அவனது கைப்பக்குவத்தைப் பாராட்டிய மன்னன், ஏராளமான பரிசு வழங்கி கௌரவித்தான்!”
– கதையைக் கூறி முடித்த கிருஷ்ணர், ”சக்ரவர்த்தியே, எங்களது சந்தேகம் இதுதான்! மன்னனை ஏமாற்றி, புலால் உணவு சாப்பிடச் செய்த சமையற்காரன் குற்றவாளியா? அல்லது அசைவம் என்று அறியாமல் புலால் உணவு சாப்பிட்ட மன்னன் குற்றவாளியா? இருவரில் தண்டனைக்குரியவர் யார்?” என்று கேட்டார். திருதராஷ்டிரர் பதில் கூறினார்:

”கண்ணா, சர்வ வியாபியான உனக்குத் தெரியாத நீதியா? குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு பரிபூரணமான நீதிநெறிகளை (கீதையை) உபதேசித்த நீ, என்னிடம் விளக்கம் கேட்கிறாயே… சரி, எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்! சமையற்காரன் செய்தது பெரிய குற்றமல்ல. வேலைக்காரர்கள், நேர்மையாகவோ அல்லது ஏமாற்றியோ தங்கள் எஜமானனை திருப்தியடையச் செய்து, பரிசுகள் பெறுவது உலக இயல்பு.

 ஆகவே, அவன் செய்தது சிறிய குற்றமே. ஆனால், மன்னனின் நிலை அப்படியல்ல. அவன், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மிக நுட்பமாக கிரகிக்க வேண்டும். தன் பணியாளர்களது செயல்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். தவறினால், எதிரிகளது சூழ்ச்சியால் நாட்டையும்… ஏன், தன் உயிரையே கூட இழக்க நேரிடும்.

கிருஷ்ணா! கதையில் நீ குறிப்பிட்ட மன்னன் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை. ஆக, அவன் கடமை தவறியது முதல் குற்றம்.

சமையற்காரன் ஒருவனிடம் ஏமாந்தது இரண்டாவது குற்றம். புலால் உண்டது மூன்றாவது குற்றம். இவற்றை அவன் அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி.
மேலும், பறவையின் கொலையில் மன்னனுக்கு மறைமுகத் தொடர்பு உள்ளதால், அவனே அதிக குற்றங்களைச் செய்தவன் ஆகிறான். எனவே, மன்னனுக்கே தண்டனை வழங்க வேண்டும்” என்றார் திருதராஷ்டிரர்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த கிருஷ்ணர், ”சக்ரவர்த்தி! தங்களிடம் நான் சொன்னது கதையல்ல; உண்மைச் சம்பவம். இந்தக் கதையின் நாயகன் தாங்களே. முற்பிறவியில் செய்த தான- தர்மத்தின் பலனால், இந்தப் பிறவியில் நல்ல மனைவி, நல்ல மந்திரிகள், வளமான நாடு, நிறைய சந்ததிகள் என்று சகலமும் வாய்க்கப் பெற்றீர்கள். இதேபோல், பாவத்தின் விளைவால் இப்போது, புத்திர சோகத்தில் தவிக்கிறீர்கள்.

சமையற்காரன் செய்த உயிர்க் கொலை, தாங்கள் அறியாமல் நடந் தது என்றாலும், அவன் சமைத்த புலால் உணவைச் சாப்பிட்டதால், கொலை செய்த பாவம் தங்களையும் ஒட்டிக் கொண்டது. ‘மன்னனே குற்றவாளி; அவனுக்கே தண்டனை’ என்ற நியாயத்தை தாங்களே சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். பாவம்… நெருப்பைப் போன்றது! நாம் அறியாமல் தொட்டாலும் நெருப்பு நம்மைச் சுட்டு விடும்.

அதே போல் அறியாமல் பாவம் செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நீங்களும் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாகவே, இப்போது புத்திரர்களை இழந்து தண்டனையை அனுபவிக்கிறீர்கள்” என்று முடித்தார் பகவான் கிருஷ்ணர். திருதராஷ்டிரர், தருமர் மற்றும் உடன் இருந்த அனைவரும் அதிர்ச்சியால் வாயடைத்துப் போயினர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.