பொதுவாக கோவில்களில் நடக்கும் ஒவ்வொரு பூஜையும் சிறப்புக்குரியது. காலை பள்ளியறை பூஜை துவங்கி, இரவு பள்ளியறை பூஜை வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இவற்றில் ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு பலன் உண்டு. அவற்றில் சகல நலன்களையும் பெற்று தரும் முக்கிய பூஜையும் உண்டு. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பூஜையும் இது தான். அது தான் பள்ளியறை பூஜை.
எல்லா கோயில்களிலும் நடக்கும் பள்ளியறை பூஜை விசேஷமானது என்றாலும் சிவன் கோவில்களில் நடக்கும் பள்ளியறை பூஜை கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும்.
அதாவது சுவாமி, தனது சன்னதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதியில் எழுந்தருளி, சிவ சக்தி ஐக்கியமாக நடத்தப்படுவது தான் இந்த பள்ளியறை பூஜை.
இந்த பள்ளியறை பூஜையின் போது சுவாமியை அவருடைய சன்னதியில் வைத்து அலங்காரம் செய்து, பல்வேறு விதமான வாத்தியங்கள் முழங்க, பல்லக்கில் வைத்து தூக்கி செல்வார்கள்.
பக்தர்கள் சிவ நாமங்கள், பாடல்களை பாடிய படி பின்னால் செல்ல, சிவ பெருமான் அம்பாள் சன்னதியில் எழுந்தருளுவார்.
அம்பாள், சிவனின் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து அழைத்து செய்வாள். பால், பழங்கள் நெய்வேத்யமாக வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தி, பாசுரங்கள் பாடி திருக்கதவுகள் மூடப்படும்.
இந்த பள்ளியறை பூஜையானது கிட்டதட்ட அரை மணி நேரம் வரை நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொள்வதை விபரம் அறிந்த சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். பலருக்கும் இந்த பூஜை பற்றி முழுவதுமாக தெரியாது.
பள்ளியறை பூஜை நடக்கும் இடத்தை தூய்மையான தண்ணீரால் சுத்தம் செய்து, கோலமிட்டு, அழகுபடுத்துதலை வழக்கமாக பல பெண்களும் செய்து வருகிறார்கள். இந்த பள்ளியறை பூஜைக்கு கோலமிட்டு வணங்கினால் மகாலட்சுமி அவர்களுடைய இல்லத்திலும், உள்ளத்திலும் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
அவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்கக் கூடிய எல்லா விதமான நலன்களும் கிடைக்கும். குழந்தை பேறு கிடைக்கும். சிலர் பள்ளியறை பூஜைக்காக பால் நெய்வேத்யமாக கொண்டு வந்து கொடுப்பார்கள்.
சுத்தமான பசும்பாலை நன்றாக காய்ச்சி, அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கொண்டு வந்து தருவார்கள். இப்படி பால் நெய்வேத்யம் செய்யக் கூடியவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக நல்ல அறிவான குழந்தைகள் பிறப்பார்கள்.
குழந்தை இல்லாதவர்களும் பாலை நெய்வேத்யமாக கொண்டு வந்து கொடுத்து, பூஜை செய்த பாலை வாங்கிக் குடித்தால் அவர்களுக்கு நிச்சயமாக நல்ல அறிவான குழந்தை பிறக்கும். செல்வந்தர்களாக்கும்.
பள்ளியறை பூஜைக்கு மலர்கள் கொண்டு வந்து கொடுக்கக் கூடியவர்களுக்கு சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். அதே போல் சுவாமியை பல்லக்கில் வைத்து சுமந்து கொண்டு வந்து, தேகத்தால் உழைப்பவர்களுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வம் வந்து சேரும்.
இந்த பிறவியில் மட்டுமின்றி, எடுக்கின்ற அத்தனை பிறவிகளும் செல்வந்தர்களாக பிறப்பார்கள். சகல நலன்களும் கிடைக்கும். இந்த பள்ளியறை பூஜையின் போது நெய், நல்லெண்ணையால் தீபமேற்றி அலங்கரித்து வழிபடக் கூடியவர்களுக்கு பெரிய, பெரிய கல்வி நிறுவனங்கள் நடத்தி, பல ஆயிரம் பேரை படிக்க வைக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
இதே போல் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த பள்ளியறை பூஜையின் போது பஞ்சவாத்தியங்கள் வாசித்துக் கொண்டும், உள்ளன்போடு சிவபுராணத்தை பாடிக் கொண்டும் வரும் அடியார்களுக்கு கைலாயத்தில் சிவகனங்களாக மாறி, சிவ பெருமானுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
என்னென்ன நலன்கள் கிடைக்கும். கணவன் - மனைவி ஒற்றை வேண்டும் என்றால் வழிபட வேண்டிய, கலந்து கொள்ள வேண்டிய ஒரே பூஜை பள்ளியறை பூஜை தான். உயர் பதவி கிடைக்க, விரைவில் திருமணம் நடைபெற, நீண்ட காலமாக இருக்கும் நோய் தீர, கல்வியில் மேம்பாடு கிடைக்க பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ளலாம்.
வாழ்க்கைழில் ஏகப்பட்ட பிரச்சனை, நிம்மதியை கிடையாது என புலம்புபவர்கள் என அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய பூஜை தான் இந்த பள்ளியறை பூஜை. மன நிம்மதியையும், மனமகிழ்ச்சியையும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் வளர்ச்சியை காட்டக் கூடிய அற்புத பூஜை இந்த பள்ளியறை பூஜை தான்.
ஒவ்வொரு பூஜையையும் ஒவ்வொரு கோவிலில் காண்பது சிறப்பு என்பார்கள். அப்படி பள்ளியறை பூஜையை சிவன் கோவில்களில், அதிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காண்பது மிக சிறப்பானது.
அன்னை மீனாட்சி, வெண் பட்டில் பக்தர்களுக்கு காட்சி அளித்து, சிவ பெருமானுக்காக காத்திருக்க, சிவ பெருமான் பக்தர்கள் புடை சூழ பல்லக்கில் எழுந்தருளி கொடி மரத்திற்கு அருகே வருவார். அங்கு மீனாட்சி அம்மன், பாத பூஜை செய்து, ஆரத்தி காட்டி, சிவ பெருமானை அழைத்துக் கொண்டு செல்வார்.
பிறகு ஊஞ்சல் சேவை நடைபெறும். இந்த அழகை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். அதை விட பள்ளியறை பூஜையை காணும் பாக்யம் அனைவருக்கும் கிடைத்து விடாது என்பார்கள். மிகப் பெரிய புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த பள்ளியறை பூஜையை காண முடியும் என பெரியோர்கள் சொல்வார்கள்.
அன்னை மீனாட்சி எட்டு வித சக்திகளில் நமக்கு காட்சி தருகிறாள். காலை திருப்பள்ளி எழுச்சி துவங்கி, இரவு பள்ளியறை பூஜை வரை மஹா ஷோடசி, பாலா, புவனேஸ்வரி, கவுரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி, ஷோடசி என எட்டு சக்திகளாக காட்சி தருகிறாள். இதில் பள்ளியறை பூஜையின் போது ஷோடசியாக நமக்கு காட்சி தருகிறாள்.