Breaking News :

Thursday, November 21
.

விட்டல விட்டல பாண்டுரங்கா !


உத்தரபிரதேசம் அவந்தியில் சேனா என்ற முடி திருத்துபவர் அரண்மனையில் பணிபுரிந்தார். கிருஷ்ண பக்தரான இவர் தியானத்தில் தன்னை மறந்து ஈடுபடுவார். மன்னர் ஒருமுறை சேனாவை அவசரமாக அழைத்து வர காவலர்களை அனுப்பினார்.

சேனாவின் மனைவி அவர்களிடம், ""கணவர் வீட்டில் இல்லை. வந்தவுடன் சொல்கிறேன்,'' என்றாள். சோம்பலால் வேலைக்கு வர விரும்பாத சேனா மனைவி மூலம் பொய் சொல்வதாக கருதி காவலர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். ஆழ்ந்த தியானத்தில் இருந்த சேனாவை எழுப்ப முயன்றும் அவர்களால் முடியவில்லை.
விஷயமறிந்த மன்னர், ""என் உத்தரவுக்கு பணியாத சேனாவைக் கடலில் போடுங்கள்,'' என்றார். அப்போது அங்கு சேனா ஓடி வந்தார்.

மன்னர் சினம் தணிந்தார்.
"ஏய்! எங்கே போனாய்? உடனே எனக்கு சவரம் செய்,'' என கத்தினார்.
தங்கக் கிண்ணத்தில் தைலம் கொண்டு வரப்பட்டது. சேனா கையை தைலத்தில் வைக்க, அதில் பாண்டுரங்கன் பிம்பம் தெரிவதைக் கண்டார்.
"இதென்ன வியப்பு! சேனாவிடம் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறதே...'' என்று உணர்ந்தார்.

"சேனா.... உன்னை கடலில் வீச ஆணைஇட்ட என்னை மன்னித்துவிடு'' என்றதோடு, தன் முத்து மாலையைக் கழுத்தில் அணிவித்தார்.
சேனா மன்னரிடம், ""மன்னா! என்ன சொல்கிறீர்கள். உங்களை மன்னிக்க நான் யார்?'' என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
இந்த நேரத்தில் சேனா வீட்டில் தியானம் கலைந்து எழுந்தார்.
அவரது மனைவி மன்னர் ஆள் அனுப்பியதை தெரிவித்தாள். சேனா அரண்மனைக்கு விரைந்தோடினார்.
"மன்னா! நடந்த தவறுக்காக மன்னியுங்கள். நொடியில் உங்களுக்கு சவரம் செய்வேன்,'' என்றார்.
மன்னர் ஏதும் புரியாமல், "சற்று முன் தானே இங்கு வந்தாய்.

 பொற்கிண்ணத்தில் பாண்டுரங்கன் தரிசனம் காட்டினாய். இப்போது மீண்டும் வந்துள்ளாயே! '' என்றார்.
சேனாவின் கழுத்தில் முத்துமாலை இல்லாதது அறிந்து, "பரிசளித்த முத்துமாலை எங்கே?'' என்றார் மன்னர்.
"எந்த முத்துமாலை'' என்றார் சேனா.
பதட்டத்தில் சேனாவின் பெட்டி கீழே விழ, அதிலிருந்து முத்து மாலை விழுந்தது. "ஆ.. என் பெட்டிக்குள் மாலை எப்படி வந்தது? '' என கூக்குரலிட்டார் சேனா.
அப்போது அசரீரி, "பக்தர்களே.... நான் தான் பாண்டுரங்கன்! சேனா தியானத்தில் இருந்த போது, அவனது பணியை நானே செய்தேன். நானே பரிசு பெற்று, சேனாவின் பெட்டிக்குள் வைத்தேன்,'' என ஒலித்தது.

"பாண்டுரங்கனே! நீயே நேரில் வந்தாயா? என்னைத் தொட்டு சவரம் செய்தாயா? சேனா! உன்னால் தானே பாண்டுரங்க தரிசனம்
பெற்றேன். நானே பாக்கியசாலி... பாக்கியசாலி...,'' என சொல்லியபடி மன்னர் மயங்கி விழுந்தார்.
சேனாவின் நிலை அதை விட மோசமானது.

"பாண்டுரங்கா! மன்னருக்கு காட்சி தந்தாயே.... இந்த எளியவனுக்கு காட்சி தர மாட்டாயா?'' என அழுதார்.
பாண்டுரங்கன் சேனாவுக்கு காட்சி கொடுத்து மறைந்தார். அதன்பின், சேனாவை தன் குருநாதராக மன்னர் ஏற்றுக் கொண்டார். கிருஷ்ண பக்தரான சேனாவை ஊரார் "பக்தசேனா' என்று போற்றினர்.

விட்டல விட்டல பாண்டுரங்கா !

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.