Breaking News :

Thursday, November 21
.

அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில்


அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில், பிட்டாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தம்மன் கோயில். பேச்சு வழக்கில் புட்டார்த்தியம்மன் என அழைப்பார்கள். இந்த அம்மனுக்கு பிட்டாபுரத்தி, வடவாயில் செல்வி, நெல்லை மாகாளி என பல பெயர்கள் உள்ளன.

இந்த அம்மன் அனைத்து மதத்தினருக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குகிறாள். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இத்தலத்திற்கு கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

அருணாசலக்கவிராயர் தன் வாழ்நாளின் தொடக்கத்தில் இந்த அம்மனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்திருக்கிறார்.

கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் உள்ள அம்மனை பார்க்கும் போது, அம்மனைப் பிரதிட்டை செய்த பின் கருவறை கட்டியிருக்க வேண்டும் என தோன்றுகிறது.
ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் பேருருவாக காட்சி தருகிறாள்.

பீடத்தின் மேல் வலது காலை தூக்கி வைத்து, இடது காலை மடக்கி, வலது கையில் கீழ் நோக்கிய சூலம் வைத்து காலுக்கடியில் அசுரனுடன் அருள்பாலிக்கிறாள்.

கொடி மர மண்டபத்தின் தென்மேற்கு முகமாக சிதைவுற்ற பிள்ளையார் அதிக சக்தியுடன் விளங்குகிறார். இதன் முன்பு அமர்ந்தபடிதான் பூசாரிகள் நோயுற்ற குழந்தைகளுக்கு திருநீறு பூசி, அம்பாளின் அபிசேக நீரைத் தெளிக்கிறார்கள். பிட்டாபுரத்து தேவிக்கு “பிட்டு” நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

இங்கு பிள்ளையார், மாடன், மாடத்தி, பிரம்மராட்சசி, பேச்சி, 14 கன்னியர்கள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். வழிபாட்டில் இந்த கோயில் நெல்லையப்பர் கோயிலோடு மிகுந்த தொடர்புடையதாக உள்ளது.

வைகாசியில் பிட்டாபுரத்து அம்மனுக்கு தேர் திருவிழா முடிந்த பின் தான் ஆனி மாதத்தில் நெல்லையப்பருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

வைகாசி மாதத்தில் 10 நாள் திருவிழாவும், கடைசிநாளில் தேரோட்டமும் நடத்தப்படுகிறது. ஆடி, தை மாதங்களின் கடைசி செவ்வாய் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். கார்த்திகை தீபமும், தைமாத பத்ர தீபமும், கஞ்சிப்படையலும் சிறப்பு.

பிள்ளைகளுக்கு பயத்தால் வரக்கூடிய 64 வகையான சீர் நோய்களுக்கு வேர்கட்டி மை இடுவார்கள்.

குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், நோய்கள் தீரவும் பெண்கள் இத்தலத்தை சுற்றி வருகிறார்கள்.

பிறந்த குழந்தைகளைக் கூட இத்தலத்திற்குள் கொண்டு வரலாம். எந்த தீட்டும் கிடையாது. திருநீறு, நீர் தெளித்தல் ஆகியன நடக்கிறது. இதனால் சிறப்பான பலன் உள்ளது என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு திருமுழுக்காட்டு செய்து, ஆராதனை செய்து, புத்தாடை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

மூலவர்   –   பிட்டாபுரத்து அம்மன்
பழமை   –   500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர்   –   பிட்டாபுரம்
மாவட்டம்   –   திருநெல்வேலி
மாநிலம்   –   தமிழ்நாடு

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.