Breaking News :

Thursday, November 21
.

புண்டரீகாட்சப் பெருமாள் - செண்பகவல்லி கோவில்


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 வைணவ திருத்தலத்தில் 4 வது திருத்தலம்

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் நான்காவது தலமாகும். பெருமாளுக்கான ஒரு பெரிய அழகான கோவில் இது. கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள்உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் கோவில் முழுவதும் எதிரொலி தெளிவாக கேட்கும்.

இக்கோவில், வெண் பாறைகளாலான 50 அடி உயர குன்றின் மேல் அமைந்துள்ளதால், வெள்ளறை என அழைக்கப்பட்டு பின் திருவெள்ளறை என பெயர்பெற்றது. இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு.

புண்டரீகாட்சன் பெருமாளைத் தரிசிக்க தலத்தின் நுழைவு வாயிலில் 18 படிகளை கடக்க வேண்டும். இந்த 18 படிகளும் 18 கீதை அத்தியாயங்களை குறிக்கிறது. கோவில் நுழைவு வாயிலைக் கடந்தால் பலிப்பீடம் உள்ளது.

இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலிபீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொண்டு, நிறைவேறிய பின் “பலிபீட திருமஞ்சனம்’ செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் “புத்ரபாக்கியம்’ நிச்சயம் .

பலி பீடத்தை சேவித்து ஐந்து படிகளை கடக்க வேண்டும். இந்த 5 படிகளும் பஞ்சபூதங்களாக வரையருக்கப்படுகிறது. அதன் பின் நாழிக் கேட்டான் வாசலை அடைய வேண்டும். கருவறைக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி தட்சிணாயனம், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி உத்தராயணம், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை திறந்திருக்கும்.

ஸ்தல வரலாறு :
திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம் என்றார். அதற்கு லட்சுமி, தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு என்றாள். இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல்.

இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்றார். இந்நிலையில் இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் சென்றபோது, ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது.

படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும்போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன்.
நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய் என்றார்.

அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுத்தார் . இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன் என்றார் பெருமாள்.

இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்றார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர், உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக’ என்றார்.

அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்றார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார்செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

50 அடி உயர குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோயிலில் காண்போரை பிரமிக்க வைக்கும் படியாக, "திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா" என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன. நந்த வனங்கள்,கிணறு இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பின் சில பகுதி குடைந்து தூண்கள் மற்றும் இரு அறைகள் காண்ப்படுகின்றன.
முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது.

புண்டசீகன் என்னும் யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அத்து அதில் வளர்ந்துவந்த துளசி இலையால் பெருமாளையும், செண்பகவல்லி அம்மையாரையும் வழிபட்டு வந்தார். ஒருநாள் யோகியின் வழிபாட்டில் மகிழ்ச்சியடைந்த பெருமாள் அவருக்கு தரிசனம் கொடுக்கவே இத்தலத்தில் தோன்றினார். அதனாலேயே இத்தல பெருமாள் புண்டரீகாட்சப் பெருமாள் என திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.

வழிபாடு:
நினைத்த நல்ல காரியங்கள் நிறைவேற பலிபீடு திருமஞ்சனம் செய்வதாக பிரார்த்தனை செய்து காரியம் நிறைவேறிய பின் பலிபீட திருமஞ்சனம் செய்து பெருமாளுக்கு, பலி பீடத்திற்கும் பொங்கல் பிரசாதம் தளிகை அமுது செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தங்களில் தீர்த்தமாடி, பின்னர் பெருமாளுக்கு பிரசாதமிட்டு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கைகூடும் .

திருவிழாக்கள்:
சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி, ஆடி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திரத்தில் ஜேஸ்டாபிஷேகம், ஆவணி மாத ஸ்ரீஜெயந்திவீதியடி புறப்பாடு, ஐப்பசியில் பெருமாள், தாயார் பிரம்மோற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்டஏகாதசி உள்ளிட்ட பெருமாளுக்கு உகந்த நாட்களில் வெகு விமர்சையாக விழா கொண்டாடப்படுகிறது.

நடைதிறப்பு:
அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில் நடை காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிக்கும். மதியம் நடை சாற்றும் முன் நடைபெரும் உச்சிப் பூஜையைக் காண பெருமாள் பக்தர்கள் அதிகளவில் கூடுவது வழக்கம்.

இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.

பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். மொத்தம் 24 பாசுரங்கள்.

திருவெள்ளறை அழகன் (பெரியாழ்வார் பாசுரம் 192 – காப்பிடல்)
இந்திரனோடு பரமன் ஈசனிமையவ ரெல்லாம்,
மந்திர மாமலர் கொண்டு மறைந்தவ ராய்வந்து நின்றார்,
சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,
அந்தியம் போதிது வாகும் அழகனே! காப்பிட வாராய்.

திருச்சி மாநகரில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோவில். திருச்சியில் இருந்து சென்னை- தேனி நெடுஞ்சாலையில் ஸ்ரீரங்கம், நொச்சியம், மண்ணச்சநல்லூர் கடந்தால் திருவெள்ளறையை அடையலாம். திருச்சி, துறையூர், திருபட்டூர் என சுற்றுவட்டாரத்தில் இருந்து இக்கோவிலுக்கு வர பேருந்துவசதிகள் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

மூலவர்- புண்டரீகாட்சன்.
தாயார் செண்பகவல்லி.
தல விருட்சம்: வில்வம்
விமானம்: விமலாக்ருதி விமானம்.

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில்
ஊர்: திருவெள்ளறை
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.