புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளில் திருமலையப்பனுக்காக வீடுகளில் மாவிளக்கு போடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
இதன்பின்னால் ஒரு அழகான ஐதீகமும் உள்ளது.
திருமலையில் வாழ்ந்த சில முனிவர்கள் அங்கிருந்த ஒரு மரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டு வந்தார்களாம்.
அதைக் கண்ட ஒரு வேடன் அவர்களிடம் சென்று, “ஏன் இந்த மரத்தை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு முனிவர்கள், “உங்களைப் போன்ற வேடுவர்களுக்கு அருள்புரிவதற்காகவே பெருமாள் இப்படி மரத்தின் வடிவில் இங்கு காட்சி தருகிறார்!” என்று விடையளித்தார்கள்.
“என் போன்ற தாழ்ந்தவனுக்கும் அருள் புரிவதற்காக இந்த வடிவில் பெருமாள் வந்திருக்கிறாரா?” என்றெண்ணிப் பரவசப்பட்ட அந்த வேடன்,
அடுத்த நாள் முதல் வேட்டைக்கு வருகையில், தேனும் தினைமாவும் கொண்டு வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டான்.
மலையப்பனின் அருளால் அந்த வேடனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மகனுக்கு விவரம் வந்த பின் அவனையும் தன்னோடு மலைக்கு அழைத்து வந்து மரத்தி லுள்ள பெருமாளுக்குத் தேனும் தினைமாவும் சமர்ப்பித்து வந்தான் வேடன்.
இந்நிலையில் ஒருநாள் வேடன் தேன் கொண்டு செல்ல மறந்துவிட்டான்.
மரத்துக்கு அருகில் சென்று தன் பையைப் பிரித்துப் பார்த்த போது, தினைமாவு மட்டுமே இருப்பதைக் கண்ட வேடன், அந்தப் பையைத் தன் மகனிடம் கொடுத்து,
“இங்கேயே இரு! நான் தேன் கொண்டு வந்து விடுகிறேன்! தேனையும் தினைமாவையும் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன்பின் நாம் சாப்பிடுவோம்!” என்று சொல்லிவிட்டுத் தேனைத் தேடிச் சென்றான்.
வேடுவன் வருவதற்கு நீண்ட நேரம் ஆனபடியால், பசி தாங்காத அவனது மகன், வெறும் தினைமாவைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு, அதை உண்ணப் போனான்.
அப்போது தேனுடன் வந்த வேடன் மகனின் செயலைக் கண்டு கோபம் கொண்டு அவனை அடிக்கப் போனான்.
ஆனால் பின்னால் இருந்து ஒரு கை வேடுவனின் கையைத் தடுத்தது.
திரும்பிப் பார்த்தால் சாட்சாத் திருவேங்கட முடையானே அங்கு நின்று கொண்டிருந்தார்.
“உன் மகன் தேன் கலக்கவில்லை என்று யார் சொன்னது? அவன் தினைமாவோடு சேர்த்து, பக்தி என்னும் தேனைக் கலந்து எனக்கு அர்ப்பணித்தான். அதை நான் ஆனந்தமாக உண்டுவிட்டேன்!” என்று கூறினார்.
திருமாலைத் தரிசித்துப் பரவசமடைந்த வேடுவனும் அவன் மகனும் திருமலையப்பனின் திருவடிகளில் விழுந்து பணிந்து அருள் பெற்றார்கள் என்பது வரலாறு.
இந்தச் சம்பவம் நடைபெற்ற நாள் புரட்டாசி மாதச் சனிக்கிழமை ஆகும்.
அதனால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில், அந்த வேடுவன் சமர்ப்பித்த தினைமாவுக்கு இணையாக அரிசி மாவும், தேனுக்கு இணையாக வெல்லமும் கலந்து மாவிளக்கு போடும் வழக்கம் ஏற்பட்டது.
ஓம் நமோ வேங்கடேசாய !