Breaking News :

Sunday, December 22
.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஏன்?


புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு இருப்பது மிகவும் நல்லது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனிபகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்ட நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும். 

பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

*#விரத_பலன்கள்.*

புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருளாதார பிரச்சனைகளும் தீரும். செல்வம் செழிக்கும். அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். 

சனி தோஷம் இருப்பவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலிற்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர். 

அதோடு அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிரார்த்திப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.

புரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல் நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும்.

புரட்டாசி 3வது சனிக்கிழமையான நாளை நாம் விரதத்தை மேற்கொண்டு; பெருமாள் மற்றும் குலதெய்வத்தின் அருளைப் பெறுவோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.