1. சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.
2. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற ஐயப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.
3. ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.
4. சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.
5. கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே ஐயப்பன் விரும்புகிறார்.
6. கடன் வாங்கியாவது சபரிமலைக்கு வா... என்று தன் பக்தர்களுக்கு ஐயப்பன் ஒரு போதும் சொன்னதே இல்லை.
7. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் ஐயப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
8. ஐயப்பன் தன் அவதாரத்தின் போது தன் படைகளுடன் ஆடியபடி காட்டுக்குள் சென்றார். அதை நினைவுபடுத்தவே ``சாமி திந்தக்கத்தோம்.... ஐயப்ப திந்தக்கத்தோம்...'' என்ற பேட்டைத் துள்ளல் நடக்கிறது.
9. மகிஷியை வதம் செய்த சாஸ்தா அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு. இதை நினைவு கூறும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.
10. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பொது இடங்களில் வைத்து அதிக பணத்தை மற்றவர்கள் பார்க்கும் வகையில் எடுக்கக் கூடாது. பணத்தை நிறைய கையில் வைத்திருப்பதற்கு பதில் பம்பையில் உள்ள ஏடிஎம்களை பயன்படுத்தலாம்.
11. தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்ரிலேண்ட் சுப்பிரமணியம் என்பவர் ``சுவாமி ஐயப்பன்'' என்று ஒரு படம் தயாரித்தார். அந்த படம் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு, பம்பையில் இருந்து நீளமலை ஏற ஆரம்பிக்கும் போது இடது புறம் காணப்படும் ஏற்றமான பகுதியில் இருந்து சபரிமலை வரை பாதை அமைத்தார். இதனால் அந்த பாதை சுப்பிரமணியர் பாதை என்று அழைக்கப்படுகிறது.
12. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.
13. பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை ஐயப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள். இது ரொம்ப முக்கியம்.
14. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ``தத்துவமசி'' எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், ``நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்'' என்று பொருள்.
15. சபரிமலை பதினெட்டு படிகளும் பல நூறு ஆண்டுகளாக கற்களாகவே உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் அதில் தேங்காய் உடைத்ததால் படிகள் சிதலமடையும் ஆபத்து ஏற்பட்டது. இதனால் 1985-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் பதினெட்டுப் படிகளும் பஞ்சலோகத்தால் மூடப்பட்டது.
16. சபரிமலை ஐயப்பன் கோவில் கோபுரம், விமானங்களை பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லய்யா தங்கக் கவசமாக மாற்றிக் கொடுத்தார்.
17. ஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.
18. சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
19. சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.
20. சபரிமலை சென்று வந்தவர்கள் ஐயப்பனின் அருள் பிரசாதத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி கொடுத்தால்தான் யாத்திரை பூரணத்துவம் பெறும் என்பது ஐதீகம்.
21. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு சென்று வரலாம்.
22. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவணைப் பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவணைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.
23. பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.
24. சபரிமலையில் ஜனவரி 19-ந்தேதி மண்டலபூஜை நிறைவு பெறும். அன்று தண்ணீரில் குங்குமம் கலந்து மஞ்சமாதா சன்னதியில் பூஜை செய்வார்கள். இதற்கு குருதி பூஜை என்று பெயர்.
25. சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.
26. சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.
27. சபரிமலைக்குள் செல்போனில் பேச தடை உள்ளது. எனவே நடைபந்தல் தொடங்கும் முன்பு செல்போன்களை பத்திரமாக கொடுத்து விடுவது நல்லது.
28. ஐயப்பா சேவா சங்கம் சார்பில் செய்யப்பட்டுள்ள, செய்யப்பட்டு வரும் சேவைகள் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
29. சபரிமலையில் மஞ்சமாதா கோவில் அருகில் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள தபால்களில் 18 படி தபால்முத்திரை பதிக்கப்படும்.
30. சபரிமலையில் விழாக்காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதிபதி ஒருவரை கேரளா ஐகோர்ட்டு நியமனம் செய்யும். இந்த நீதிபதிக்கு எல்லா அதிகாரமும் வழங்கப்படும்.
31. சபரிமலை நடைபந்தல் அருகே டாடா நிறுவனம் மருத்துவமனையைக் கட்டி கொடுத்துள்ளது. மண்டல பூஜை நாட்களில் ஏராளமான மருத்துவர்கள் இங்கு வந்து சேவை செய்வது குறிப்பிடத்தக்கது.
32. சபரிமலையில் எல்லா இடங்களிலும் தண்ணீர் குடிக்காதீர்கள். தேவஸ்தானம் தரும் சுக்கு தண்ணீரை வாங்கிக் குடிப்பது நல்லது.
33. சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.
34. நடிகர் எம்.என்.நம்பியார் சபரிமலை தேவஸ்தானம் அனுமதி பெற்று பல கட்டிடங்கள் கட்டினார். அதன் பிறகே சபரிமலை சன்னிதானம் நகரம் போல மாறியது.
35. கேரள கவர்னராக இருந்த பி.வி.கிரி நடந்து மலையேற இயலாத நிலையில் இருந்ததால் அவரை ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கி சன்னிதானத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகே பிரம்பு நாற்காலி-கம்பு கட்டிய டோலி முறை நடைமுறைக்கு வந்தது.
36. ஐயப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.
37. ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.
38. ஐயப்பனுக்கு 1973-ம் ஆண்டு சித்திரை திருநாள் மகாராஜா, தங்க அங்கி தயாரித்து காணிக்கையாகச் கொடுத்தார். 420 பவுன் கொண்ட இந்த தங்க அங்கி மண்டல பூஜை கடைசி நாள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும்.
39. சபரிமலை ஐயப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் ஐயப்ப உற்சவரை தரிசிக்கலாம்.
40. தஞ்சை மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்த முருகையன் குருசாமி 50 ஆண்டுக்கும் மேல் சபரிமலை சென்று வந்தவர் ஆவார்.
41. சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டு சபரிமலைக்கு செல்லவது வழக்கம்.
42. இராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
43. பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.
44. வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.
45. சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.
46. ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.
47. ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.
48. சென்னை பாரிமுனை அரண்மனைக் கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சன்னதி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரையில் சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்ட, தனியாக சன்னதி அமைக்கப்பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறை கடைபிடிக்கப்படுகின்றன.
49. ஸ்ரீகிருஷ்ண அவதாரத் திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.
50. குளத்து புழா ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
சுவாமியே சரணம் ஐயப்பன்.