சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து, ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருந்து, மார்கழியில் மலைக்கு செல்வர். சிலர் 60 நாட்கள் கடுமையாக விரதமிருந்து மகர ஜோதி அன்று மலைக்கு செல்லும் வழக்கம் வைத்துள்ளனர். ஆனால் இவற்றில் 48 நாட்கள் விரதம் இருப்பவர்களே அதிகம்.
ஐயப்பனுக்கு மாலை அணியும் போது, கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது.
கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே தான் இம்மாதத்தின் முதல் நாளன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.
எவ்வாறு மாலை அணிய வேண்டும்?
கார்த்திகை மாதம் முதல் நாள் அல்லது 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் வகையில் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும்.
சபரிமலைக்கு மாலை அணிய விரும்புபவர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
விரதத்தை தொடங்குவதற்கு முன், 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலை அல்லது ருத்ராட்ச மாலையை ஏதேனும் ஒரு கோயிலில், குருசாமியின் திருக்கரங்களால் அணிந்து கொள்ள வேண்டும்.
குருசாமி இல்லாத பட்சத்தில் கோயிலுக்கு சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளலாம்.
மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.
மாலை அணிந்த பின் என்ன செய்ய வேண்டும்?
மாலை அணிந்த பின் கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
அதாவது இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்து கொள்ள வேண்டும். காலில் காலணிகள் இல்லாமல் நடந்து பழக வேண்டும்.
தற்போதைய சூழலில் அலுவலக கட்டுப்பாடு காரணமாக காவி உடை அணிய முடியாமல் இருக்கலாம். ஆனால் காலணிகளை கட்டாயம் அணியக்கூடாது.
எப்போதும் மனம், வாக்கு மற்றும் செயல் மூன்றிலும் ஐயப்பனை நிலை நிறுத்தி கொள்ள வேண்டும். எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். சுடு சொற்கள் சொல்லக்கூடாது.
விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம். அதனால் தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனை தொழுது, ஐயப்பன் பாடல்களை பாடலாம்.
நாள்தோறும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும். காலை, மாலை என இரு வேளைகளிலும் பஜனை வழிபாடு செய்ய வேண்டும்.
ஐயப்பனை நினைத்து விரதத்தை மேற்கொண்டால் சகல துன்பங்களையும் நீக்கி நம்மை காத்தருள்வார்.
ஐயப்ப ஸ்லோகம் :
'இதம் ஆஜ்யம், கமமண்டல
கால மகரகால பரஹமசியவ்ர
தேன ஹரிஹர புத்ர தர்ம
சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி'
பொருள் :
ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும், அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னித்து, பதினெட்டு படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.
கு பண்பரசு