Breaking News :

Thursday, November 21
.

எச்சரிக்கை: சனி பகவான் பற்றிய 53 தகவல்கள்


.

1. சனியானவர் ஜன்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில் சங்கடங்கள் சூழக் கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர் ஆவார். மந்தமாகப் பேசுவார்.

 

2. லக்னத்தில் சனி இருக்கப் பெற்று சனிக்கு அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம் ஜாதகருக்கு அமையும். ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.

 

3. மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.

 

4. ரிஷபத்தில் உள்ள சனியானவர் அது ஜன்ம லக்னமானால் சிறப்பான பலன்களைத் தருவார் என்று சில கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

5. 2-ஆம் இடத்தில் உள்ள சனி நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2-ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.

 

6. சனியானவர் 2-ஆம் இடத்தில் இருந்தாரானால் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று சுகபோகங்களையும், செல்வங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்.

 

7. 2-ல் உள்ள சனியால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தியுண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.

 

8. 2-ல் உள்ள சனிக்குச் சுபபலம் இருக்குமானால் அதாவது ஆட்சி, உச்சம் போன்ற நிலை இருக்குமானால் குறைகள் குறையவும், நிறைகள் அதிகமாகவும் சந்தர்ப்பமுண்டு.

 

நன்மைகளை வாரி வழங்கும் ராசிகளில் சனி பிறந்த பலன்கள்

 

9. 3-ஆம் இடத்தில் உள்ள சனி அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். ஆனால், மனோவியாகூலம் அவ்வப்போது உண்டாகும்.

 

10. சனியானவர் 3-ல் இருந்தால் ஜாதகருக்குத் தரும குணம் இருக்கும். ஆனாலும் செய்யும் காரியங்களில் தரக்குறைவு இருந்து கொண்டிருக்கும். 3-ல் உள்ள சனி பலம் பெற்றிருந்தாரானால் குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்.

 

11. 3-ஆம் இடத்தில் உள்ள சனி பலவீனமாக இருந்தாரானால் சகோதரர்களுக்கு நாசம் ஏற்படக்கூடும். தாய்நாட்டை விட்டு வெளிநாடு செல்லக்கூடிய நிலை ஜாதகருக்கு உண்டாக கூடும். அந்த நிலை நல்லதாக அமைவதற்கு 3-ல் உள்ள சனிபலம் பெற்றிருக்க வேண்டும்.

 

12. 4-ல் உள்ள சனி மகிழ்ச்சியைக் கெடுப்பார். அமைதியைக் குலைப்பார். கவலையைக் கொடுப்பார். குடும்பத்திலிருந்து பிரிய வைப்பார்.

 

13. -ஆம் இடத்தில் உள்ள சனியால், தந்தை வழி நலம் குறையும். சொத்துக்கள் சேர்மானம் இராது. இருதயநோய் ஏற்படக்கூடும். வயிற்றுவலியும் உண்டாகக்கூடும்.

 

14. 4-ஆம் இடத்தில் உள்ள சனியினால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும்.

 

15. பலம் பொருந்தியவராக உள்ள சனி 4-ல் இருப்பாரானால் ஜாதகருக்குச் சுபிட்சமும், செல்வமும் வாகனவசதியும் ஏற்படத் தடையிராது.

 

16. 5-ல் சனி மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம் சந்தோஷம் இவைகள் குறையும்.

 

17. 5-ல் உள்ள சனி ஜாதகருக்குப் புத்தி மந்தத்தை உண்டு பண்ணுவார். பகைவரால் தொல்லையை உண்டாக்க கூடும். மனநலம் திருப்திதராது. நேர்வழியில் சிந்தனை செல்லாது. மனோவியாதி உண்டாக கூடும்.

 

18. 5-ல் உள்ள சனியின் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம். ஆனால் பொதுவாக ஓர் உன்னதமான வாழ்க்கை பெறுவதற்குச் சந்தர்ப்பமுண்டு.

 

19. 8-ல் உள்ள சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தாரானால் கெட்ட பலன்கள் பெருமளவுக்கு குறைந்து விடும். நல்ல பலன்கள் இடம்பெறும்.

 

20. 6-ஆம் இடத்தில் சனிக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனியினால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.

 

21. 6-ல் உள்ள சனி பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.

 

22. பொதுவாக 6-ஆம் இடம் சனிக்கு ஏற்புடைய இடமாகையால் ஜாதகர் கவுரவமாகவும், செல்வ சுகங்களோடும் வாழக்கூடும். ஜீரண சக்தியும் ஜாதகருக்கு இருக்கும்.

 

23. 6-ஆம் இடத்தில் உள்ள சனியினால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்தச் சனி பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து வரும்.

 

24. 7-ல் உள்ள சனியினால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.

 

25. 7-ஆம் இடத்தில் உள்ள சனி, ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். கீழ்த்தரமான செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.

 

26. 8-ல் உள்ள சனியால் கண்பார்வை மங்கக்கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகக் கூடும்.

 

27. 8-ல் உள்ள சனி ஜாதகருக்குப் பணத்தைச் சேர்த்துத் தருவாரே தவிர மதிப்பை தர மாட்டார். ஜாதகர் அடிமைவேலை செய்ய வேண்டியிருக்கும். சுயமாக பெரிய காரியங்களை நிர்வகிக்கக்கூடிய ஆற்றல் இல்லாமல் போகும்.

 

28. 8-ல் உள்ள சனி இளம் வயதில் ஜாதகருக்கு மகிழ்ச்சியை தரமாட்டார். ஆயுளை தீர்க்கமாகக் கொடுப்பார்.

 

29. 9-ல் உள்ள சனியால் ஜாதகருக்குப் பணம் குவியும். மகிழ்ச்சி ஏற்படும். மக்களால் மகிழ்ச்சியுண்டாகும்.

 

30. சனி 9-ல் இருக்கப் பிறந்தவர்களுக்கு வேதாந்த மனப்பான்மை ஏற்படும். ஜோதிடம் போன்ற கலைகளில் பாண்டித்யம் உண்டாகும்.

 

31. 9-ல் உள்ள சனி பலவீனம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டக்குறைவு உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாதகரால் தொல்லை விளையக்கூடும்.

 

32. பெரும்பாலும் 9-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டில் யோகத்தை உண்டு பண்ணுவார்.

 

33. 10-ஆம் இடத்தில் உள்ள சனியானவர் விவசாயம் மற்றும் தானியங்கள், எண்ணெய், உரம் ஆகியவற்றின் மூலம் ஜாதகர் பொருள் திரட்ட சந்தர்ப்பத்தைத் தேடித்தருவார்.

 

34. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார். சிறந்த கல்வி ஜாதகருக்கு உண்டாகும். தைரியம் புகழும் ஜாதகரை வந்து சேரும்.

 

35. 10-ல் உள்ள சனி ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார்.

 

36. 10-ஆம் இடத்தில் சனி உள்ளவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்க முடியும். பெரிய குழுவுக்கு ஜாதகர் தலைமை தாங்கும் சக்தி ஏற்படக் கூடும்.

 

37. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.

 

38. சனி 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நிறையச் சம்பாதிப்பார். சொத்துக்கள் சேர்ப்பார். நிறைய வருமானம் அடையப் பெறுவார்.

 

39. 11-ஆம் இடத்தில் உள்ள சனி மூலம் ஜாதகர் தைரியசாலியாக வாழ முடியும். சரீர சுகம் அமையும். ஆனால் இளமையில் உடல் உபாதை ஏற்படக் கூடும்.

 

40. பொதுவாக 11-ஆம் இடத்தில் உள்ள சனியால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் விற்பன்னராக முடியும். இரும்பு, விவசாயம், எண்ணெய், உலோகங்கள் ஆகிய துறைகளின் மூலம் ஜாதகர் நிறையப் பொருள் திரட்டும் வாய்ப்பு ஏற்படும்.

 

சனி பகவான் ஸ்தான மற்றும் பார்வை பலன்கள்

 

41. 11-ஆம் இடத்தில் உள்ள சனி பல நிலைகளிலும் சிறப்பைத் தருவார். என்றாலும், குடும்பத்தில் ஜாதகருக்குச் சிறப்பை உண்டாக்க மாட்டார். ஜாதகரால் குடும்பத்தாருக்கு நலம் உண்டாகவும் விடமாட்டார்.

 

42. 12-ல் உள்ள சனி ஜாதகருக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்க மாட்டார். தொழில்களிலும் வீழ்ச்சியை உண்டு பண்ணுவார்.

 

43. 12-ல் உள்ள சனியினால் ஜாதகருக்கு கடும் செலவு உண்டாகக் கூடும். அறிவாற்றல் மங்கியிருக்கும். பகைவரால் தொல்லை விளையக்கூடும்.

 

44. 12-ஆம் இடத்தில் உள்ள சனிக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால், குறைகள் பெரும்பாலும் குறையும். சில நன்மைகள் தலைகாட்டும்.

 

45. நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.

 

46. ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2 வருட வீதம் 32 1/2 என்ற சஞ்சரிக்கும் காலம் 7 சனி காலமாகும்.

 

47. ஒருவரின் ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.

 

48. ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை கூட்டி வழங்குவார்.

 

49. இந்தியாவில் திருநள்ளாறில் தனி ஆலயமாக சனீஸ்வரன் மிகப் பிரசித்தம் பெற்று விளங்குகின்றார். இலங்கையில் திருக்கோணமலையில் மரத்தடியில் சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

 

50. சனிக்கிரகம் பூமியில் இருந்து 97 கோடியே 90 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி 3 வளையங்கள் உள்ளன. இதன் நடுவில் இருள் படலம் உள்ளது. 75000 மைல் விட்டமும் 700 பங்கு கன பரிமானம் உள்ளது. பூமியைப் போல் 100 மடங்கு எடையுள்ளது. இது ராசி மண்டலத்தைச் சுற்றிவர 29 வருடம் ஆகிறது.

 

51. சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனிலிருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.

 

52. சனீஸ்வரரின் அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது நல்லது.

 

53. சனிபகவான் தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும் என்கிறார் ஷீத்வா முனிவர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.