Breaking News :

Thursday, November 21
.

*செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில், கோவில்பட்டி


கோவில்பட்டி நகரில் செண்பகவல்லி அம்பாள் 7 அடி உயரத்தில் நின்ற போல் அருள்பாலிக்கிறார்.

இறைவன் பூவனநாதர் என்ற பெயரில் லிங்கத் திருமேனியுடன் அருள்புரிகிறார்.

கோயிலில் உள்ள ‘இறைவன் தோன்றி களாமரம்’ இன்றும் உயிர் மரமாக பேணி பாதுகாக்கப்படுகிறது.

உற்சவ மூர்த்திகள் சன்னதியில் முன்புறம் அமைந்துள்ள இந்த தல விருட்சத்தினை சுற்றி கருங்கல்லினால் மேடை அமைக்கப்பட்டு அதில் ஒரே பீடத்தில் விநாயகர், நாகர்கள், நந்தியுடன் சுவாமி, அம்மன், சாஸ்தா ஆகிய திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில் தீர்த்தம் அகத்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது. இதனால் இது அகத்தியர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

ராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமை உடைய கோயில் இதுவாகும். சங்கன், மதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்கள் இறைவனை பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் பூவனநாதர் எனப் பெயர் பெற்றார்.

ஈசன் திருமணத்தின்போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில் உலகை சமன் செய்யும் பொருட்டு இறைவன் ஆணைப்படி அகத்தியர் பொதிகை மலை நோக்கி பயணித்தார்.

வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் வில்வனன் ஆகியோரை வதைத்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகத்தியர் பொன்மலை களாவனத்தில் எழுந்தருளியுள்ள பூவனநாதரைப் பூசித்து தோஷம் நீங்கப்பெற்றார்.

பொன்மலை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தார்.

வெள்ளிமலை சிவகுழு உறுப்பினர் வாமனன் என்பவன் நந்திதேவர் சாபத்தால் வெம்பக்கோட்டையில் வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான்.

இறைவன் அவன் கனவில் தோன்றி உரைத்த ஆணைப்படி கோயிற்புரியையும் பூவனநாதருக்கு கோயிலும் அமைத்து சாப நிவர்த்தி பெற்றான்.

செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்டதால் இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள்.

இங்கு நின்ற நிலையில் இருக்கும் அம்பாளை அமர்ந்த நிலையில் இருப்பது போல் அலங்காரம் செய்வார்கள்.

இது இங்கு மட்டுமே நடக்கும் சிறப்பு ஆகும். இக்கோயிலில் பங்குனித்திருவிழா, சித்திரை திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், ஆடிப்பூரம் வளைகாப்பு விழா, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்த சஷ்டி, மார்கழி திருவாதிரை, மாசி மக சிவராத்திரி போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

*பூஜை நேரம்*

தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.30 வரையிலும் நடை திறந்திருக்கும். ஆகமப்படி தினமும் 5 கால பூஜைகள் நடக்கின்றன.

*அமைவிடம்*

திருநெல்வேலி – மதுரை சாலையில் கோவில்பட்டி நகரில் செண்பகவல்லி அம்பாள் கோவில் அமைந்துள்ளது .

**ஸ்ரீ லலிதாம்பாள் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*
*அடியேன்*
*ஆதித்யா*

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.