Breaking News :

Thursday, November 21
.

சித்தவட மடம் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், பண்ணுருட்டி


சுந்தரருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை கொடுத்த சித்தவட மடம் திருத்தலம் . 

 

1110 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது சித்தவட மடம் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்

 

வழக்கில் தற்போது கோட்டலாம்பாக்கம் என்றழைக்கப்படும் சித்தவட மடம் அமைந்திருந்த இடத்தில் தற்போது ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனாய ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் கல்வெட்டில் இவ்வூர் கொட்டிளம்பாக்கம் (தற்போதைய பெயர் கோட்டலாம்பாக்கம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இத்திருத்தலம் மேற்கு நோக்கிய சத்தியோஜன மூர்த்த திருத்தலமாகும். மேற்கு நோக்கிய சிவ திருத்தலத்தில் சிவபெருமானை ஒரு முறை தரிசித்தாலே 1000 முறை சிவபெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

கி.பி. எட்டாம் நூற்றாண்டில், இந்த இடம் சித்தர்கள் மடமாக இருந்த காலத்தில், ஸ்ரீ வீரட்டானேஸ்வரரைத் தரிசிக்கும் பொருட்டு வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென்று ஒரு சிந்தனை தோன்றியது. அது என்ன சிந்தனை தெரியுமா? திருவதிகை திருத்தலத்தில் திருநாவுக்கரசர்  பெருமானும் அவரது தமைக்கையார் திலகவதி அம்மையாரும் தங்களது திருக்கரங்களால் உழவாரத் திருப்பணி செய்துள்ளனரே அந்த இடத்தை  தான் தனது கால்களால் மிதிக்கக் கூடாது என்ற பக்தியின் மேலீட்டால், ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை சித்தவட மடத்திலிருந்தவாறே தரிசித்து விடலாம் என்று முடிவு செய்த சுந்தரமூர்த்தி நாயனார் அங்கேயே தங்கி விட்டார்.

 

தன்னை தரிசிக்க விரும்பிய தனது பக்தன் சுந்தரன் தன்னை தரிசிக்காமல் செல்லலாகாது என்று எண்ணிய ஸ்ரீ வீரட்டானேஸ்வரர், சுந்தரர் தங்கியிருந்த சித்தவட மடத்திற்கே சென்று சுந்தரருக்கு அருட்காட்சி தர விரும்பினார். உடனே முதுமைக் கோலம் பூண்ட சிவபெருமான் சித்தவட மடம் சென்று, அங்கு சுந்தரர் உறங்கிக்கொண்டிருப்பதனைக் கண்டு, அவர் அருகிலேயே சிவபெருமானும் தனது கால்கள் சுந்தரரின் தலை மீது படும்படியாகப் படுத்துக்கொண்டார். முதியவரின் கால்கள் தன் தலை மீது படுவதை உணர்ந்த சுந்தரர், பக்கத்திலேயே சற்று தள்ளி வேறு இடத்தில் படுத்துக்கொண்டார். சிவபெருமான் அவரை விட்டு விடுவாரா என்ன? சிவபெருமானும் சுந்தரர் படுத்திருந்த இடத்தருகே சென்று அவரின் கால்கள் மீண்டும் சுந்தரரின் தலை மீது படும்படியாகப் படுத்துக் கொண்டார்.

 

சுந்தரர் வன் தொண்டர் அல்லவா? வெகுண்டு எழுந்த சுந்தரர், “ஐயா, பெரியவரே, ஏன் மீண்டும் மீண்டும் இப்படிச் செய்கிறீர்?” எனக் கேட்க, “நீ வேண்டும் என்பதால் தான்” என்று முதியவர் கோலத்திலிருந்த சிவபெருமான் பதில் தர, உடனே சுந்தரர், “நீர் யார்? எந்த ஊர்?” எனக் கேட்க, அதற்கு சிவபெருமான், “நீ ஒரு சித்தன் – நீ எனது பித்தன்” என்று கூறி ரிஷப வாகனத்தில் உமையாளுடன் சுந்தரருக்கு அருட்காட்சிகொடுத்து மறைந்தார் சிவபெருமான்.

 

தன் தலை மீது தன் கால்பட தனக்கு திருவடி தீட்சை தந்தது சிவபெருமான் தான் என்பதை அப்போது தான் உணர்ந்தார் சுந்தரர்.

தம்மானை அறியாத சாதியார் உளரே

சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்

கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்

உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்

தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்

ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்

எம்மானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

என்னும் தேவாரப் பதிகத்தைப் பாடினார். இப்பாடல் திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரைக் குறித்துப் பாடப்பட்டிருப்பினும், இப்பாடல் பிறந்த இடம் சித்தவட மடம் திருத்தலமாகும்.

இந்த சித்தவட மடம் தான் தற்போது ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலாக மிளிர்கிறது. 

 

இம்மடத்தின் வரலாற்றுப் புகழை அறிந்த சோழ மன்னர்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கு திருக்கோயில் எழுபினார். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அரசாண்ட சேந்தமங்கல அரசன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் தனது 24-ஆம் ஆட்சி ஆண்டில் (1267) கருவறைப் பகுதியை கருங்கற்கலால் மாற்றி அமைத்ததாக இத்திருக்கோயில் கல்வெட்டு சான்று கூறுகிறது. கி.பி.16-ஆம் நூற்றாண்டில், சிவகாமி அம்மனின் சந்நிதிக்கு தினந்தோறும் பூமாலை அளிப்பதற்கான தானக் கல்வெட்டும் காணப்படுகிறது. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சிற்பங்கள் சோழர் காலம் மற்றும் கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

 

சுந்தரருக்கு சிவபெருமான் தம் திருவடியைச் சூட்டியதும் (திருவடி தீட்சை), ஞான சித்தர்களும், முனிவர்களும் இறவாப் புகழுடன் வாழும் சித்தவட மடத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சிவகாமி உடனுறை ஸ்ரீ சிதம்பரேஸ்வரரை தரிசித்து பலன் பெறுவோம், வாரீர்! வாரீர்!!

 

இத்திருக்கோயில், பண்ணுருட்டி நகருக்கு மேற்கே சுமார் மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பண்ணுருட்டியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

 

ஓம் நமசிவாய.!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.