இடைக்காட்டு சித்தர் பிணக்கு தீர்த்த சிம்மக்கல் ஸ்ரீ ஆதிசொக்கநாதர் திருத்தலம்.
மதுரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது இடைக்காட்டூர். சங்கத் தமிழ்ப் புலவர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் என்பவர் இங்கு வாழ்ந்து வந்தார்.
மன்னர்களைப் புகழ்ந்து பாடல் இயற்றிப் பாடி பரிசில் பெறுவது தமிழ்ப்புலவர்களின் வழக்கம். அவ்வாறே, இடைக்காட்டு சித்தரும் மதுரையை ஆண்ட குசேல பாண்டிய மன்னனின் அரசவைக்கு சென்று மன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வரலாம் என்று எண்ணி அரசவைக்கு சென்றார்.
அரசவைக்கு சென்ற இடைக்காட்டு சித்தர், அரசவையிலேயே ஒரு பாடலைப் புனைந்து பாடிக் காட்டினார்.
குசேல பாண்டியன் இடைக்காட்டு சித்தரின் பாடலை செவி மடுத்து கேட்காதது மட்டுமின்றி, அவரை அவமானப் படுத்தவும் செய்தார்.
மன்னரின் செய்கையால் மிகவும் வருத்தமடைந்த இடைக்காட்டு சித்தர், சிவபெருமானை வணங்கி, "மன்னன் என்னை இகழவில்லை உன்னையே இகழ்ந்தான்" என்று வருத்தத்துடன் கூறி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுநாள் காலை வழக்கம்போல் ஆலயத்தின் திருக்கதவைத் திறந்த அர்ச்சகர்கள், உள்ளே இறைவனைக் காணாது அதிர்ந்து போயினர்.
இறைவனைக் காணாத அர்ச்சகர்கள், மன்னனைச் சந்தித்து இறைவன் காணாமல் போனதை எடுத்துரைத்தனர்.
அதிர்ந்து போன மன்னன் மிகவும் மனவருத்தமுற்றான். அப்போது அவன் முன் அசரீரியாக தோன்றிய இறைவன், இடைக்காட்டு சித்தரைத் தாங்கள் அவமதித்ததால் தாம் வடகரை திசையில் எழுந்தருளியிருப்பதாகக் கூறி மறைந்தார்.
தனது தவறை உணர்ந்த மன்னன், இடைக்காட்டு சித்தரை அழைத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமின்றி, இடைக்காட்டு சித்தரிடம் மன்னிப்பும் கோரினார்.
அத்துடன் நில்லாது, இடைக்காட்டு சித்தருக்கு பரிசளித்து அவருடன் சென்று இறைவனை வணங்கி தனது செயலுக்கு இறைவனிடமும் மன்னிப்பு கோரினான் மன்னன்.
மன்னனை மன்னித்தருளிய சிவபெருமான், மீண்டும் தனது பழைய இடத்திற்கே திரும்பினார்.
சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் இடைக்காட்டு சித்தர் பிணக்கு தீர்த்த இந்த திருவிளையாடலும் ஒன்று.
குபேரனால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் அமைந்த திருத்தலம் சிம்மக்கல்.
புதன் பகவான் வழிபட்டதால் புதன் தோஷப் பரிகாரத் திருத்தலமாகவும் விளங்குகிறது சிம்மக்கல் திருத்தலம்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்தின் அருகில் ஸ்ரீ அங்கயற்கன்னியுடன் ஸ்ரீ ஆதி சொக்கநாதராக அருள்பலிக்கிறார் இத்திருவிளையாடலை நடத்திய சிவபெருமான்.
இங்கு இவரை வணங்கும் பக்தர்களின் மனக் குறையை தவறாது இவர் தீர்ப்பார் என்பது ஐதீகம்.
குபேரன் வணங்கிய திருத்தலமாதலால், இவரை வணங்குவோருக்கு குபேர சம்பத்தும் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
பக்தர்களே, மனக்குறை இருந்தால் சிம்மக்கல் சென்று சிவபெருமானை வணங்கி மனக்குறை தீர்ந்து குபேர சம்பத்தும் பெற்று இல்லம் திரும்புவீர்.
ஓம் நமசிவாய.