கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றான, மும்மூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஜோதியாக காட்சி கொடுத்த இடமான, ஒரே நாளில் முப்பெரும் தேவியராக காட்சி தரும் தலமான, பேய்களை விரட்டியடிக்கும்
சோட்டானிக்கரை.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் அமைந்துள்ளது சோற்றானிக்கரை பகவதி அம்மன் கோவில். லட்சக்கணக்கான பக்தர்களைத்தன் வசம் ஈர்த்து, அவர்களின் இன்னல்களைக் களைந்து, இடர்பாடுகளைத் தரும் நோய்களை குணப்படுத்தி அருள்பாலிக்கும் இந்த அம்மன் கோவிலில் தான் கேரளத்திலேயே பேய்களை விரட்டியடிப்பதில் பிரசிதிபெற்றது.
'கடவுளின் தேசம்' என எல்லோராலும் அழைக்கப்படும் கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சோற்றானிக்கரை (சோட்டானிக்கரை) பகவதியம்மன் அம்மன் ஆலயம். குருவாயூர், சபரிமலை, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் போலவே சோற்றானிக்கரை பகவதி அம்மனும் புகழ்பெற்ற ஆலயமாகும். கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் எப்போதும் வந்த வண்ணம் உள்ளனர்.
(ஜோதின்னக்கரை என்ற பெயரின் மழுவல் அதாவது பராசக்தி ஜோதி உருவில் நின்று மும்மூர்த்திகளுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுத்த இடம்) கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ஆகும். இந்தக் கோவில் தென்னிந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் என்ற இடத்தின் அருகிலுள்ளது. இக்கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலைப் போலவே மிகவும் பெயர் பெற்ற கோவிலாகும்.
இந்த இடத்தில் பகவதி வழிபாடு மிகவும் பிரபலமானதாகும், மேலும் அன்னை பகவதியை இறைவன் திருமாலுடன் சேர்த்து "அம்மே நாராயணா" என இந்தக் கோவிலில் பக்தர்கள் வழிபடுகின்றனர் அதாவது நாராயணியும் நானே நாராயணனும் நானே எனப்பொருள், மேலும் அன்னை பகவதி ஒவ்வொரு நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; மாலையில் சௌபாக்கியம் தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; இரவில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல வண்ண உடையிலும், நண்பகல் உச்சபூஜையிலும் இரவு உச்சபூஜையிலும் மகாகாளியாக காட்சி தந்து பக்தர்களை உய்வித்து அருள்பாலித்து வருகிறாள்.
புராண வரலாறு:
சோட்டானிக்கரை பகுதி பண்டைய காலத்தில் கொடுங்காடாக இருந்தது. இங்குள்ள ஆதிவாசிகளுக்கு தலைவனாக கண்ணப்பன் என்பவர் விளங்கி வந்தார். மிக கொடூரனாக விளங்கிய இவன் பக்கத்து கிராமங்களில் உள்ள பசுக்களைத் திருடி வந்து இறைச்சியாக்கி சாப்பிட்டதோடு நண்பர்களுக்கும் கொடுத்து வந்தான். இந்த கொடூரனுக்கு ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் வழக்கம் போல் ஒரு பசுவை கொல்ல முயன்ற போது, அது கட்டை அறுத்து விட்டு காட்டுக்குள் ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு கண்ணப்பனும் காட்டுக்குள் ஓடினான். ஆனால் பசு கிடைக்கவில்லை. கடும் கோபத்துடன் வீட்டுக்கு திரும்பிய போது, அங்கு தன் மகளுடன் பசு நிற்பதை கண்டதும் கண்ணப்பனுக்கு கோபம் தலைக்கேறியது. அரிவாளால் ஓங்கி வெட்ட முயன்ற போது குறுக்கிட்ட மகள், இந்த பசு எனக்கு சொந்தமானது, இதை வெட்டக்கூடாது என தந்தையின் காலில் விழுந்தாள். மகள் மீது பாசம் கொண்டிருந்த கண்ணப்பன் பசுவை கொல்லாமல் விட்டான். அதுமுதல் உயிர்களைக் கொல்லாமல் கண்ணப்பன் திருந்தினான். என்றாலும் முன்னர் செய்த பாவங்கள் கண்ணப்பனை விடவில்லை. அவன் அன்பு பாராட்டி வளர்த்த மகள் இறந்தாள். கண்ணப்பனுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது.
ஒருநாள் கண்ணப்பனின் கனவில் மகள் காப்பாற்றிய பசு தோன்றியது. அந்த பசு, நான் சாட்சாத் ஜகதம்மா (தேவி). நாளை முதல் நான் ஓரிடத்தில் சிலையாக இருப்பேன். என் பக்கத்தில் மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கும் என்று கூறியது. அடுத்த நாள் காலையில் கனவில் கண்டதைப் போல நடந்தது. உடனே கண்ணப்பன் அந்த மாட்டு தொழுவத்தை காவாக (மரங்களின் நடுவில் கடவுள் விக்ரகம் இருக்கும் இடம்) மாற்றினான். கண்ணப்பன் இறந்தபின் ஆதிவாசி மக்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இதனால் அந்த இடம் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறியது. ஒருநாள் பெண் ஒருவர் புல் வெட்டிக் கொண்டிருந்த போது அவரது அரிவாள் விக்ரகம் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இதனால் பதட்டம் அடைந்த பெண் பிரசித்தி பெற்ற எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விஷயத்தை கூறினார். அவர் வந்து பார்த்து விட்டு விளக்கேற்றி பூஜை நடத்தினார். அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் வந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறாள்.
இத்தலத்திற்கு மற்றொரு புராணக் கதையும் கூறப்படுகிறது. சரசுவதி தேவியின் திருவருளால் உலகத்தை வியக்க வைத்து அத்வைத மதத்தை மஹாச் செய்த ஜகத்குரு சங்கராச்சாரியார் மைசூரிலிலுள்ள சாமுண்டீஸ்வரியை கேரளத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்கான தவமும் இருந்தார். அவரின் தவத்திற்காக வாணிதேவி அவர் முன் தோன்றினார். கேரள நாட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்ற தனது வேண்டுகோளை விடுத்தார். அம்பாள் அதற்கு மகனே ! நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே - எனது சொல்லை மீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன். என்ற நிபந்தனையை அம்பாள் கூறினாள். எனவே ஆதிசங்கரர் நடக்க துவங்கினார்.
தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒரு நாள் காலையில் பின்னாள் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லை. அவர் தொடர்ந்து முன்னரே நடந்து சென்றிருக்கலாம் என்று தோன்றியது. எனவே அவர் சிலம்பொலி கேட்காததால் ஐயப்பாட்டுடன் திரும்பினார். என்ன விந்தை! பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். நின்ற இடம் தற்போது கொல்லூர் முகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மை ! சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே! தங்களின் கொலுசு ஒலியாலேயே முன்னே நடந்து சென்றேன். ஒலி கேட்காததால் ஒரு வேளை தாங்கள் பிந்திவிட்டீர்களோ என்றறிவதற்காக சற்று பின்புறமாக திரும்பி விட்டேன், மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார்.
தேவி மகனே! வார்த்தை தவறுவது முறையன்று. இதுவும் கேரள பூமி தான். நான் இங்கு தான் இருப்பேன். நீ வேண்டிய உன் நாட்டிற்குத் தான் வந்திருக்கிறேன். கன்னியாக்குமரி முதல் கோகர்ணம் வரையிலும் கேரளமே. இன்று அம்மை இருக்குமிடம் முன்பு கேரளத்தை சார்ந்ததேயாகும். தேவியின் திருமொழி சங்கரருக்கு திருப்தியளிக்கவில்லை. அம்மையே ஆலப்புழைக்கு அருகிலுள்ள வேந்தனாட்டிற்கு தாங்கள் எழுந்தருள வேண்டும். என் தவத்தை வீணாக்கி விடக்கூடாது தாயே, அம்மை அங்கு கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று சங்கரர் மீண்டும் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சங்கரா உன்னுடைய கட்டாய வேண்டுதலினால் தினமும் காலை மூன்று மணி முதல் ஏழரை மணி வரை சோற்றானிக்கரையில் தரிசனம் தருகிறேன்.
எல்லா நாட்களும் பிரம்ம முகூர்த்ததில் நான் சோற்றாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன். என்று ஆனையிட்டு தந்து சங்கரரை அனுப்பி வைத்தாள். சங்கரர் நாட்டிற்கு விரைந்து வந்தார். அம்மையின் திருவாய் மொழியின்படி சோற்றானிக்கரை ஆலயத்திற்கு சென்றார். அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். சங்கரரோடு ஜோதி ரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தினுள் ஜோதி ரூபத்தில் கலந்து விட்டாள். அவ்வாறு ஜோதியானக்கரை இன்று சோட்டானிக்கரை என்ற பெயரில் விளங்குகிறது. இவ்வாறு காலை 7.00 மணிவரை அம்மை சோற்றானிக்கரை ஆலயத்தில் சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
முன்னொரு காலத்தில் வேடன் ஒருவனும், அவனது மகளும் இணைந்து கன்றுக்குட்டி ஒன்றை வளர்த்து வந்தனர். ஒரு நாள் மகள் உயிரிழந்தாள். யாருமற்ற தந்தை அந்த பசுமாட்டு கன்றுக் குட்டியின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்து வளர்த்து வந்தார். ஒரு நாள் இரவு வடனின் தூக்கத்தில் பசுமாடு காணாமல் போவது போல் கனவு வந்தது. உடனே விழித்த வேடனோ பசுமாட்டை பார்த்தபோது அது அங்கேயே இருந்தது. ஆனால், விடிந்ததும் அந்த பசு காணாமல் போயிற்று. பசு கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்தில் அதே அளவில் ஒரு கல் இருந்தது. இந்நிலையில், அங்கே வந்த துறவி ஒருவர் அந்தப் பசு மகாலட்சுமி என்றும் உன் கனவில் வந்தது மகாவிஷ்ணு என்றும் விளக்கினார். பின், வேடனின் இறப்பிற்குப் பின் அந்தக் கல் கவணிப்பாரின்றி போனது.
சோதி ஆன கரை:
இச்சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு காட்டுக்குள் ஒரு நாள், பெண் ஒருவர் புல் வெட்டும் கத்தியை ஒரு பாறையில் தேய்க்க, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. பயந்து போன அவர் கூச்சலிட்டு ஊர் மக்களை அழித்தார். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் அங்கு பராசக்தியின் பேரொளி பரவியிருப்பதை அறிந்து, அந்தக் கற்சிலை பகவதிதான் என்றும், அதை சரஸ்வதி, லட்சுமி, துர்காவாக வழிபட வேண்டும் என்றும், அருகிலுள்ள சிறிய கல் மகா விஷ்ணுவினுடையது என்றும் கூறினார். அன்னை தன்னை ஜோதி வடிவில் வெளிப்படுத்திக் காட்டியருளியதால் அது சோதி ஆன கரை ஆயிற்று. பின்னர் காலப்போக்கில் சோற்றானிக்கரையாக மருவியது.
முற்காலத்தில் மலையாளதேசம் வனங்கள் அடர்ந்த கானகப் பகுதியாக இருந்தது. அங்கே, கண்ணப்பன் என்னும் வேடுவன் வாழ்ந்துவந்தான். மனைவி இல்லாததால், தனது மகள் பவளத்துடன் வசித்துவந்தான். கண்ணப்பனோ வனதேவதையை அனுதினமும் வணங்கும் தீவிர பக்தன். அருகாமையிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று அங்கு மந்தையிலிருக்கும் மாட்டையோ அல்லது வனத்துக்குள் மேய்ச்சலுக்கு வரும் மாடுகளில் ஏதேனும் ஒரு மாட்டையோ திருடி வந்து பலிகொடுத்துவிட்டு, தன் கூட்டத்தாரோடு தானும் சாப்பிடுவது வழக்கம். கண்ணப்பனின் வீட்டிலும் மாடு ஒன்று, கன்றை ஈன்று பால்கொடுத்துவந்தது. கன்றுகுட்டியின் மீது மகள் பவளத்துக்கு அலாதிப்பிரியம் எப்போதும் அதை பிடித்துக்கொண்டு விளையாடுவாள்.
ஒரு நாள் வனதேவதைக்குப் பலியிட எந்த மாடும் கிடைக்கவில்லை. அதனால், தன் வீட்டிலிருந்த மாட்டையே பலிகொடுப்பது என முடிவு செய்து அதை அவிழ்க்கச்சென்றான். அப்போது, கன்று, தாயின் பிரிவு தாளாமல் 'அம்மே' என அலறியது. இதைப் பார்த்ததும் மகள் பவளம் ஓடோடி வந்து கன்றுக்குட்டியைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள். `அப்பா! என்னைப்போலவே இந்தக் கன்றும் தாயற்ற பசுவாக வேண்டுமா?' எனக் கேவிக் கேவி அழுதாள்.
மகளின் அழுகை, கண்ணப்பனின் மனதை என்னவோ செய்தது. 'இனி ஒரு நாளும் உயிர்களைப் பலி கொடுக்க மாட்டேன்' என அழுது புலம்பி அரற்றினான். அன்றிலிருந்து புலால் உணவை உண்ணாமல் வாழத் தொடங்கினான். சில நாள்கள் சென்றதும், அவனுடைய மகளும் இறந்து போனாள். யாருமற்ற நடைப்பிணமாக தன் நாள்களை நகர்த்திவந்தான்.
ஒருநாள் கனவில் ஒருகாட்சி தோன்றியது. லோக மாதா ஜகதாம்பாள் கோடி சூரிய பிரகாசத்துடன், 'கண்ணப்பா, நீ கொடுத்து வைத்தவன். உன் மகளின் நேசத்துக்குரிய பசு சாட்சாத் மகாலட்சுமிதான் என்பதை அறிந்துகொள்' எனக்கூறி மறைந்தாள். படுக்கையிலிருந்து எழுந்து தொழுவத்தைப் பார்த்தான். அங்கே பசுவும் கன்றும் சிலைகளாக மாறியிருந்தன. தன் கூட்டத்தாரிடம் விஷயத்தைச் சொன்னான். அவர்களுக்கு அந்த இடத்தில் 'காவு' அமைத்து மரங்களால் ஆன கோயிலை உருவாக்கி வழிபடத்தொடங்கினர். ஆனால், கால ஓட்டத்தில் அந்தப் பகுதி முழுவதுமே இயற்கையின் ஆளுமைக்குச் சென்று மரங்களடர்ந்த பகுதியானது.
பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் கிராமத்துப் பெண்னொருத்தி புல் அறுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ரத்தம் பீறிட்டது. அவள் அலறியடித்துக்கொண்டு நடந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொன்னாள். அவர்கள் அதை எடாட்டு நம்புதிரியிடன் சென்று கூற, அவர் வந்து பார்த்துவிட்டு, 'இந்த இடம் முழுவதுமே தேவியின் அருள் பெற்ற இடம். இங்கு ஆலயம் அமைத்து வழிபடுவோம்' என்றார்.
`இந்தப் பசு சிலை, தேவியின் அம்சம். இதற்கு உடனே அபிஷேகமும் நைவேத்தியமும் செய்ய வேண்டும். இங்கே குடிகொண்டிருப்பது சந்தேகமில்லாமல் லட்சுமிதேவியேதான். இது லட்சுமி நாராயணமூர்த்தியின் வாசஸ்தலமாகத் திகழவிருக்கிறது!’ என்று சொல்லி பூஜை புனஸ்காரங்களை அப்போதே தொடங்கினார் எடாட்டு நம்பூதிரி. இங்கே லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை என்னும் மூன்று உணர்வு நிலைகளோடு தேவி திகழ்கிறாள்.
தேவியின் வலது பக்கத்தில் இரண்டு அடி உயரமுள்ள கிருஷ்ணன் சிலை உள்ளது. 'அம்மே நாராயணா', 'தேவி நாராயணா' என்று மனமுருகி பக்தர்கள் வழிபடுகிறார்கள். கோயிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் இருப்பவர், சிவபெருமான். அருகிலேயே கணபதி சந்நிதி. அங்கிருந்து தெற்குப் பக்கமாக இருப்பது நாகராஜா சந்நிதி. கோயில் குளத்தின் கிழக்குக்கரையில் அமைந்திருப்பது உக்கிரகாளியான கீழ்க்காவு பகவதி சந்நிதி.
அதிகாலையில் தேவியை சரஸ்வதியாகப் பாவித்து, வெள்ளை ஆடை அணிவித்து பூஜிக்கிறார்கள். மதிய வேளையில் தேவிக்கு சிவப்பு ஆடை அணிவிக்கப்பட்டு காளியாகவும், மாலையில் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடுகிறார்கள். மாசி மாதத்தில் நடைபெறும் ஆராட்டுவிழாவும், நவராத்திரி விழாவும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
மேற்கில் பிரதான கோபுர வாயில் வழியாக நுழைந்தால் பகவதியின் கருவறை கிழக்கு நோக்கியிருக்கிறது. தங்கக் கலசத்திலும், விலை மதிக்க முடியாத அணிகளின் அலங்காரத்திலும் கோடி சூரியப் பிரகாசத்துடன் அருளொளியை வாரி வழங்கும் அன்னை, இங்கு லட்சுமி நாராயணத் தத்துவமாக எழுந்தருளியிருக்கிறாள்.மூலஸ்தான சிலா வடிவம் உருவ அமைப்புடன் கூடியது அல்ல. சிவப்பு வெட்டுக்கல் பகவதியாகவும், அதன் வலப்புறம் உள்ள சிறிய கருங்கல் மகாவிஷ்ணுவாகவும் ஆராதிக்கப்பட்டு வருகின்றன. அங்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளியே செல்வதில்லை. விக்ரஹங்களைச் சுற்றியுள்ள மணலில் மறைந்து, ஒன்றரை மைல் தூரம் வடக்கே உள்ள ஒணக்கூர் தீர்த்தக் குளத்தில் போய்ச் சேர்ந்துவிடுகிறது. உட்பிராகாரத்தில் வடகிழக்கில் மேற்கே பார்த்தவாறு தர்மசாஸ்தா திருச்சன்னதி.
வழிபாடு:
பகவதி தேவிக்கு காலையில் வெள்ளாடையும், மத்தியானம் சிவப்பாடையும், மாலையில் நீல நிற ஆடையும் அணியப்படுவதிலிருந்து சரஸ்வதி, லட்சுமி, துர்காவாக இங்கு பகவதி ஆராதிக்கப்படுவது விளங்கும்.
பேய்களை முடிச்சிட்ட தூண்:
உட்பிராகாரத்தில் வடகிழக்கில் மேற்கே பார்த்தவாறு தர்மசாஸ்தா திருச்சன்னதி உள்ளது. இவர் சன்னதிக்கு முன்தான் பேய், பிசாசு பிடித்தவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார். அவர்கள் பல்வேறு விதமான அமானுஷ்ய கூச்சலிட்டும், ஆக்ரோசமாகவும் செயல்படுகின்றனர். அப்போது, அங்கிருக்கும் நம்பூதிரி தோற்றம் கொண்ட ஒருவர் பேய் பிடித்தவர்களை சில மந்திரங்களின் மூலம் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறார். அதற்கு அடையாளமாக சன்னதிக்கு முன்னுள்ள தூண் ஒன்றில் ஆணிகள் அடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
மூல சன்னதியும், பில்லி சூனியமும்:
மூல சன்னதியில் நிலவும் மாபெரும் சக்தியானது, பேய்களை போன்ற ஆத்மா சாந்தியடையாதவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்து, மெள்ள மெள்ள, விரட்டியடிக்கும் அதிசயத்தைக் கண்ணால் காண முடிகிறது. சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பேய் பிசாசு பிடித்தவர்கள், பில்லி, சூனியம் முதலிய உபத்திரவங்களுக்கு ஆளானவர்களை அதிகளவில் இத்தலத்தில் காணலாம்.
கீழ்க்காவு பத்ரகாளி கோவில்:
பகவதி கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் கீழ்க்காவு பத்ரகாளி கோவில் அமைந்துள்ளது. பத்ரகாளி, பகவதியை நோக்கியவாறு அமர்ந்திருக்கிறாள். பகவதி தரிசனம் முடிந்ததும், மக்கள் நேரே கீழ்க்காவு காளி கோவிலுக்குச் சென்று தரிசித்துவிட்டு வருகிறார்கள். தினமும் பகவதி சன்னதி திறந்த பிறகுதான் கீழ்க்காவு சன்னதி திறக்கப்படுகிறது. இரவு பகவதி சன்னதி மூடிய பிறகு, இங்கு குருதி தர்ப்பணம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதன் பிறகே நடை அடைக்கப்படுகிறது. முன்பு இங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டு வந்ததற்கு அடையாளமாகக் காலையில் குருதி பூஜையும், இரவில் குருதி சமர்ப்பணமும் நடைபெற்று வருகின்றன.
மனநோய்களைப் போக்கும் பகவதி!
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்துவந்து வழிபட்டால், அவர் நல்ல மனநிலையை அடைவதை அன்றாடம் கண்கூடாகப் பார்க்கலாம். நோயின் தன்மையைப் பொறுத்து இங்கு சில நாள்கள் தங்கி வழிபட்டுச் செல்பவர்களும் உண்டு.
சோட்டாணிக்கரை கோயிலின் 'கீழ்க்காவில்' நடைபெறும் பூசைகளில் ஒன்றான 'குருதி பூசை'யில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, அன்னை பகவதியின் அருளைப் பெறுகின்றனர். இந்தப் பூசை மாலை வேளைகளில் அன்னையின் அருளைப் பெறுவதற்காக நடத்தப்படுகிறது. முன்பெல்லாம் 'குருதி பூசை' வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம், இந்தப் பூசை ஒவ்வொரு நாளும் இரவு 8மணி முதல் 9மணிக்குள் நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் இந்தக்கோவிலில் நடைபெறும் மிகவும் முக்கியமான விழா மகம்தொழல் என்ற பெயரில் மாசிமகம் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் நவராத்திரி விழா, சித்திரைவிசு, போன்ற திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
எப்படிச் செல்வது ?
எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சோற்றானிக்கரை பகவதி அம்மன் கோவில். இதனருகில் கொச்சியில் இரு இரயில் நிலையங்கள் உள்ளன, அவை எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் நகரம் ஆகும். வடக்கு மற்றும் தென்னிந்தியாவில் இருந்துவரும் இரயில்கள் எர்ணாகுளம் சந்திப்பில் நிற்கும். எர்ணாகுளத்தில் இருந்து பேருந்து மூலமாக இந்தக் கோவிலுக்கு எளிதில் செல்ல முடியும். ஓம் சக்தி பராசக்தி!