Breaking News :

Thursday, November 21
.

நிறம் மாறும் தக்கோலம் ஸ்ரீ ஜலநாதீஸ்வரர், தக்கோலம்.


இராணிப் பேட்டை மாவட்டத்தில், அரக்கோணதிற்கு அருகில் (அரக்கோணம்-காஞ்சீபுரம் சாலையில், அரக்கோணத்திலிருந்து சுமார் 14 கி.மீ.) அமைந்துள்ளது தக்கோலம்.

காமதேனு வழிபட்ட ஸ்ரீ ஜலநாதீஸ்வரர் சிவாலயம் இங்கு அமைந்துள்ளது. அன்னை ஸ்ரீ கிரிராஜ கன்னிகாம்பாள்.

இங்கு செய்யப்படும் புண்ணியங்கள், ஒன்றுக்கு நூறு மடங்காகப் பெறுகும் என்கிறது இந்த சிவாலயத்தின் திருத்தல புராணம்.

அன்னை ஸ்ரீ கிரிராஜ கன்னிகாம்பாள் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பு.

மிகவும் சக்தி வாய்ந்த அன்னை ஸ்ரீ கிரிராஜ கன்னிகாம்பாளுக்கு தான் இங்கு முதல் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி மற்றும் அஷ்டமி நாட்களில் இவரை வணங்குவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவ்வாலயத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத உத்கடி ஆசனத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார் என்பதும் தனிச் சிறப்பு. இது ஒரு குரு பரிகாரத் திருத்தலமாகவும் விளங்குகிறது.

உத்தராயண காலத்தில் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) மூலவர் ஸ்ரீ ஜலநாதீஸ்வரர் செந்நிறமாகவும், தக்ஷிணாயன காலத்தில் (ஆடி மாதம் முதல் மாழ்கழி மாதம் வரை) வெண்மையாகவும் திருக்காட்சி தருவார் என்பது தனிச் சிறப்பு.

மூலவரின் சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனது என்பதால், அபிஷேகம் கிடையாது. மஞ்சள் காப்பு தான் சாத்தப்படுகிறது.

தீண்டாத் திருமேனியரான ஸ்ரீ ஜலநாதீஸ்வரரை யாரும் தொட்டு பூஜை செய்வது கிடையாது என்பது இவ்வாலயத்தின் மற்றுமொரு தனிச் சிறப்பு.
இத்திருத்தலத்தை திருவூறல் என நாவுக்காரசர் பெருமானும், சுந்தரரும் பாடியுள்ளனர்.

திருஞானசம்பந்தரும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமூலர், சேரமான் பெருமானும் பாடியருளியுள்ளார்.

நந்தியம்பெருமானின் வாயினின்றும், சிவலிங்கத்தின் திருமேனியின் அடியிலிருந்தும் நீர் சுரப்பதால், திருவூறல் என்றழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ப்ருஹஸ்பதியின் தம்பி உததி முனிவர் தன் நோய் நீங்க சிவபெருமானை வழிபட்டபோது நந்தியம்பெருமான் தன் வாய் வழியாக கங்கையை வெளிப்படுத்தியதாகவும், அதில் நீராடி சிவபெருமானை வழிபட்டு முனிவர் நோய் நீங்கப் பெற்றதாகவும், அந்த கங்கை நீர் சிவபெருமானைச் சூழ்ந்து சென்றதால் ஜலநாதீஸ்வரர் எனப் பெயர் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

தக்கன் தலையைக் கொய்த தலம் இது என்றும் நம்பப்படுகிறது. அதற்கு காரணம், தக்கன் தனக்கு அழிவு வரும் என்றறிந்து ஓலமிட்டதால் தக்கன் - ஓலம் என்பது மருவி தக்கோலம் என்றாயிற்று என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக தேரடிக்கு அருகில் ஸ்ரீ வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளதை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் இத்திருத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார்.

இராட்டிரகூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் கன்னர தேவன், தக்கோலப் போரில் சோழ மன்னன் இராசாதித்தனைக் கொன்றான். முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் (கி.பி. 1018 – 1054) இரட்டபாடி கொண்ட சோழபுரம் என்றும். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பல்லவபுரம் என்றும், குலோத்துங்க சோழபுரம் என்றும், விஜயநகர அரசர் காலத்தில் படிமுடி கொண்ட சோழபுரம் என்றும், தக்கோலம் அழைக்கப்பட்டது என்பது வரலாறு.

தக்கோலத்தில் ஏழு சிவாலயங்கள், ஏழு விநாயகர் திருக்கோவில்கள், ஏழு கிராம தேவதை திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

திருக்கோயில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய !

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.