Breaking News :

Thursday, November 21
.

அருள்மிகு ஶ்ரீ ஓசை கொடுத்த நாயகி கோயில்


அருள்மிகு ஶ்ரீ ஓசை கொடுத்த நாயகி உடனுறை சப்தபுரீசுவரர்  திருக்கோயில் , திருக்கோலக்கா, நாகப்பட்டினம் .

தமிழர்கள் கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 1800 ஆண்டுகள் முதல் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .

மூலவர் - சப்தபுரீசுவரர்
அம்மன்/தாயார் -
ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள்
தல விருட்சம் -
கொன்றை
தீர்த்தம் - சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது)

புராண பெயர் - சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில்
ஊர் - திருக்கோலக்கா
மாவட்டம் -  நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - திருஞானசம்பந்தர், சுந்தரர்

திருக்கோலக்கா - சப்தபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும் .

இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 15வது தலம் ஆகும்.

சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார்.

சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார்.

சம்பந்தருக்கு இறைவன் பொற்தாளம் கொடுத்து அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார்.

இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் *இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர்*.

சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சமந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
நன்மை  யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க  ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெரும் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டு கொண்டேனே.

மக்கள் வழக்கில் தாளமுடையார்  கோவில் என்று அறியப்படும் கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு  கோபுரம் இல்லை.

முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது.

சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, பின்னர் நகரத்தாரால்  கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டது.

இத்திருக்கோயில் 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்டது.

மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே கோயில்கள் உள்ளன. அம்பாள் ஓசை நாயகி சுமார் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருக் காட்சி தருகிறார்.

இறைவி ஓசைகொடுத்த நாயகியின் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது.

வெளிப் பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவியின் சந்நிதியை அடையலாம்.

முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிளார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன.

முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் திறந்த வெளிமுற்றம் உள்ளது.

இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சந்நிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.

இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர்.

சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது. பஞ்சலிங்கங்களும் உண்டு.

இக்கோயிலின் திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.

கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர் .

கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சந்நிதியை அடுத்து மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள்.

மகாலட்சுமி இங்கு சிவபெருமானை தவம் செய்து அதன் பயனாக மகாவிஷ்னுவை திருமணம் செய்து கொண்டாள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.