Breaking News :

Friday, March 14
.

பெண்கள் கட்டாயம் வணங்க வேண்டிய ஏழு ஆலயங்கள்?


சப்த மாதர்கள் வழிபட்டுப் பாபங்கள் நீங்கப் பெற்றனர். அவர்களின் வழிகாட்டுதலால், பார்வதிதேவி இங்கே தவம் செய்து, பேரருள் பெற்றாள். அத்துடன் அநவித்யநாத சர்மா தம்பதிக்கு திருக்காட்சி தந்து, அவர்களை ஆட்கொண்டார் சிவபெருமான்... என இன்னும் எத்தனையோ பெருமைகளைக் கொண்ட அந்த சப்தமங்கைத் தலங்கள், தஞ்சாவூர்-பாபநாசத்துக்கு அருகே இன்றைக்கும் உள்ளன.

சக்கரமங்கை, அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை எனப் போற்றப்படுகிற அந்த ஏழு தலங்களைத் தரிசிப்போமா?

சிவ நேத்ர தரிசனம் (சக்கரப்பள்ளி)

தஞ்சை- கும்பகோணம் சாலையில், சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள அய்யம்பேட்டை என்னும் ஊருக்கு அருகில் உள்ளது சக்கரப்பள்ளி. புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் முதல் பிரதமை திதியில், பிராம்மியானவள் இங்கே வழிபட்டாள். பார்வதிதேவி சிவனாரின் நெற்றிக் கண்ணைத் தரிசித்து அருள்பெற்றாள். தவிர, மகாவிஷ்ணு தன் சக்கராயுதத்தைப் பெற்ற திருத்தலம் இது. மேலும், சக்கரவாகப் பறவை வடிவில், அம்பிகை வழிபட்டாள் என்றொரு தகவலும் சொல்கிறது ஸ்தல புராணம்.

ஸ்வாமி - ஸ்ரீசக்ரவாகேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீதேவநாயகி. அற்புதமான ஆலயத்தில் அழகுறக் காட்சி தருகின்றனர் இறைவனும் இறைவியும்! பிரதமை திதி நாளில், இங்கே வந்து வணங்குவது சிறப்பு.

கங்கா தரிசனம் (அரிமங்கை)
அய்யம்பேட்டை கோயிலடி பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமங்கை. சப்த மங்கையரில் ஒருவரான மகேஸ்வரி, துவிதியை திதி நாளில் வழிபட்ட தலம். இங்கே, பார்வதிதேவி சுயம்பு மூர்த்தத்தை வழிபட... சிவ - கங்கை தரிசனம் கிடைக்கப் பெற்றாள். ஸ்வாமி - ஸ்ரீஹரிமுக்தீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை.

திரிசூல தரிசனம் (சூலமங்கலம்)
அய்யம்பேட்டையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது சூலமங்கலம். திருதியை நாளில், கௌமாரி வணங்கி அருள் பெற்ற திருத்தலம். சூலமங்கலம் சுயம்பு மூர்த்தத்தை வணங்கித் தொழுத வேளையில், பார்வதிதேவி சிவனாரின் திரிசூல தரிசனத்தைப் பெற்றாள்.

ஸ்வாமி - ஸ்ரீகீர்த்திவாகீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅலங்காரவல்லி. இங்கே, அஸ்திர தேவர் சந்நிதி உள்ளது சிறப்பு. சகல தெய்வங்களுக்குமான அஸ்திரங்களை வார்த்துத் தரும் மூர்த்தி இவர். இவரை வணங்கினால், எதிரிகள் தவிடுபொடியாகிவிடுவார்கள்.

திருக்கழல் தரிசனம் (நந்திமங்கை)
அய்யம்பேட்டையை அடுத்துள்ளது நல்லிசேரி. ஒரு காலத்தில் நந்திமங்கை என அழைக்கப்பட்ட திருத்தலம் இது. சப்த மாதாக்களில் ஒருவரான வைஷ்ணவிதேவி, சிவனாரைத் தொழுது அருள் பெற்ற திருவிடம். பார்வதிதேவி இங்கே தவம் செய்ய... தன் திருக்கழல் தரிசனத்தைக் காட்டியருளினார் சிவபெருமான்.
'சிவனாரின் திருக்கழல்தானே நம் மீது படுகிறது. அவரின் திருப்பாதம் நம் மீது எப்போது படும்’ என நந்திதேவர் ஏங்கினாராம். பிறகு, இந்தத் தலத்தில் ஆயிரத்தெட்டு பிரதோஷ பூஜைகளை சிவனாருக்குச் செய்ய... மகிழ்ந்த சிவனார், தன் திருப்பாத ஸ்பரிசத்தை நந்தியம்பெருமானுக்குத் தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்வாமி - ஸ்ரீஜம்புகேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.

உடுக்கை தரிசனம் (பசுமங்கை)
தஞ்சை - பாபநாசத்தை அடுத்துள்ளது பசுபதிகோவில். காமதேனு மற்றும் வராஹி தேவி வழிபட்ட இந்தத் தலத்தில், ஸ்ரீபார்வதிதேவி வழிபட்டு சிவனாரின் உடுக்கைத் தரிசனம் கிடைக்கப் பெற்றாள். பசுமங்கை எனும் தலம், பிறகு பசுபதிகோவில் என மாறியதாம்!

ஸ்வாமி - ஸ்ரீபசுபதீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீபால்வள நாயகி. இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம். தீய சக்தி அண்டாமல் நம்மைக் காத்தருள்வார் இறைவன் என்பது ஐதீகம்!

பிறை தரிசனம் (தாழமங்கை)
பசுபதிகோவிலுக்கு அருகில் சுமார் 1 கி.மீ. தொலைவில், மெயின் சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது தாழமங்கை திருத்தலம். இந்திராணி எனப்படும் மாகேந்திரி, வழிபட்டுப் பாபம் நீங்கிய தலம் இது. உமையவள் கடும் தவம் புரிந்து, மூன்றாம்பிறையுடன் சிவனாரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். ஸ்வாமி - ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீராஜராஜேஸ்வரி.

ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கும் தலங்கள் மிகக் குறைவு. மூன்றாம்பிறை நாளில் இங்கு வந்து வழிபட்டால், குடும்பத்தில் சாந்தம் குடிகொள்ளும். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ்வர்.

நாக_தரிசனம் (திருப்புள்ளமங்கை)

தஞ்சை- பசுபதிகோவிலுக்கு அருகில், சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்புள்ளமங்கை. சாமுண்டிதேவி, அஷ்டநாக மூர்த்திகளுடன் இங்கே சிவலிங்கத் திருமேனிக்கு முப்பது கோடி நாகலிங்கப் புஷ்பங்கள் சார்த்தி வணங்கி, அருள் பெற்ற திருவிடம் இது. ஸ்ரீபார்வதிதேவி கடும் தவம் செய்ததன் பலனாக, சிவபெருமானை கழுத்தில் நாகாபரணத்துடன் தரிசித்துப் பூரித்தாள்.

ஸ்வாமி - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீஅல்லியங்கோதை என்கிற சௌந்தரநாயகி. இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நாக தோஷம் நீங்கும், திருமண பாக்கியம் கைகூடும், சகல ஐஸ்வரியங்களுடன் சந்ததி சிறக்க வாழலாம் என்கின்றனர்.

இந்த ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். காசியம்பதியில் இருந்து வந்த அநிவித்யநாத சர்மா மனைவியுடன் வழிபட்டார், அல்லவா? அப்போது 48-ஆம் நாள் பூஜையின்போது, இறைவனுக்கு திருப்பல்லக்கு தயார் செய்து, சக்கரப்பள்ளியில் இருந்து மற்ற தலங்களுக்கு தூக்கிச் சென்றாராம். பிறகு அந்தந்த ஊர்க்காரர்களின் உதவியால், அந்தத் தலத்து இறைவனும் இறைவியும் திருப்பல்லக்கில் பின்னே வர... ஏழு தலங்களின் மூர்த்தங்களும் ஏழு பல்லக்கில் பவனி வந்ததாம்!

பிறகு, அடுத்தடுத்த காலங்களிலும் ஏழூர்த் திருவிழாவாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தற்போது, பங்குனி மாத சித்திரை நட்சத்திர நாளில், விமரிசையாக நடந்தேறும் இந்த விழாவில்,

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்வார்கள். தற்போது புள்ளமங்கை, பசுமங்கை, நல்லிசேரி ஆகிய தலங்களில் மட்டுமே பல்லக்கு இருக்கிறது என்கிறார்கள். மீதமுள்ள நான்கு தலங்களுக்கும் திருப்பல்லக்கு திருப்பணியை எவரேனும் செய்து கொடுத்தால், அந்தத் தலங்களின் மூர்த்தங்களும் ஜோராகப் பல்லக்கில் பவனி வரும் என ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர், ஊர்மக்கள்.

பூப்படையும் தருணத்தில் உள்ள சிறுமி, கல்லூரியில் படிக்கிற மாணவி, திருமணத்துக்கு காத்திருக்கிற இளம்பெண், குழந்தையை ஈன்றெடுத்து வளர்த்து வருபவர், தன் மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைக்கிற வயதை அடைந்தவர், பேரன் பேத்திகளைப் பார்த்துக் கொஞ்சி மகிழ்கிறவர் என எந்த வயதினராக இருந்தாலும், பெண்கள் இங்கு வந்து ஏழு தலங்களையும் அங்கே குடிகொண்டிருக்கிற சிவ- பார்வதியையும் வணங்கித் தொழுதால், அவர்கள் ஒரு குறையுமின்றி, நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்கள் என்பது உறுதி.

ஒரு வீட்டின் இதயமாகத் திகழ்பவர்கள் பெண்கள். அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்கமுடியும். அவர்கள் மனநிறைவுடன் வாழ்ந்தால்தான், நம் அடுத்தடுத்த சந்ததியும் வாழையடி வாழையென வாழ்வாங்கு வாழும்!

இந்தப் பூமியில் பிறந்த பெண்கள் அனைவரும் வணங்கித் தொழவேண்டிய திருத்தலங்கள் இவை. வணங்குங்கள்; வளம்பெறுங்கள்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.