Breaking News :

Wednesday, February 05
.

தைப்பூச விரதமும் பலன்களும்!


முருகப் பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி 11/02/2025 /தை மாதம் 29 அன்று அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

விரதம்
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும்.

தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மேலும் மனமுருகி விரதமிருந்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் வழிபடுவது நல்லது.

விரத பலன்கள் :
தைப்பூச நாளில் முருகனை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் குடும்பத்தில் செல்வம் பெருகும், கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.

இந்நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது.
முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மேலும் துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும்.

தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம்.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

தைப்பூசத்தன்று அனைத்து முருகனின் தலங்களில் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.

திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் நல்ல வரன் கிடைக்கும். இந்நாளில் திருமணப் பேச்சை ஆரம்பித்தாலே போதும் நல்லவிதமாக முடியும்.

தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது என்பதுடன், அவை அனைத்துமே அஞ்சி நடுங்கி, அடிபணிந்து நமக்கு ஏவல் செய்யும் என்பது ஐதீகம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.